ஸ்ட்ரோக் வியாதிக்கு நல்ல மருத்துவம்! 78 வயதில் பட்டம் பெற்ற ‘இந்தியன்’ தாத்தா!
சென்னை: மெட்ராஸ் யுனிவர்சிடியில் 78 வயதில் ஆய்வு மாணவராக சேர்ந்து படித்து டிலிட் பட்டம் பெற்றுள்ள முதியவர் ஒருவர் கல்வியின் சிறப்பை பற்றி உலகிற்குப் புரியவைத்துள்ளார்.
கல்விதான் கண்கண்ட தெய்வம் என்று நம் முன்னோர்கள் சொன்னதைத்தான், அப்படியே மாற்றி 'அசுரன்' படத்தில் வசனமாக மாற்றி பேசி கைத்தட்டல் வாங்கினார் தனுஷ். அதைத் தனது மாணவர்களுக்குப் பரிசளிக்கும் விழாவில் அப்படியே விஜய் 'காடு இருந்தால் எடுத்துக் கொள்வார்கள். ரூபாய் இருந்தால் பிடுங்கிக் கொள்வார்கள். ஆனால், படிப்பை மட்டும் நம்மகிட்ட இருந்து எடுத்துக் கொள்ளவே முடியாது' என்று சுட்டிக் காட்டி பேசினார். அந்த வசனத்திற்கு தன் 78 வயதில் உயிர்கொடுத்துள்ளார் ஒரு தாத்தா.

சமீபத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பலர் படித்துவிட்டு பட்டம் பெற்றனர். அதில் 'தனி ஒருவனாக' இந்தியன் பாணியில் உள்ளே எண்ட்ரி கொடுத்தார் தாத்தா. யார் இவர் எனச் சற்று நேரம் மேடையில் நின்று பட்டமளிப்பு சான்றிதழ்களை வழங்கிக் கொண்டிருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி அசந்துபோய்விட்டார். முதியவரைப் பார்த்ததும் உயர்கல்வி அமைச்சர் பொன்முடியுடன் நடுவில் நிறுத்தி புகைப்படம் எடுத்துக்கொள்ளச் சொன்னார் ஆளுநர். அன்பாக அழைத்துப் பேசினார் பொன்முடி.
இந்த அரிய காட்சிக்குப் பின் தாத்தா பிரபலமாகிவிட்டார். இவர் யார்? இவர் எதற்காகப் பட்டம் பெற்றார்? இவர் பெயர் தங்கமணி. இலக்கியவியல் படிப்பில் டிலிட் பட்டம் பெற்றுள்ளார். இவரது சொந்த ஊர் கன்னியாகுமரி. ஆனால், இப்போது முகப்பேரில் வசித்து வருகிறார். இது பற்றி பொன். தங்கமணி, "படிப்பதற்கும் ஆய்வு செய்வதற்கும் வயது ஒரு தடையே இல்லை. உடல்நிலை நன்றாக இருந்தால் 100 வயது வரைகூட படிக்கலாம். அதற்குத் தடையே இல்லை. என் குடும்பத்தார் அனைவரும் நான் படிக்க உதவினார்கள். என் முனைவர் பட்ட ஆய்வேட்டை பிழைதிருத்தம் செய்து கொடுத்ததே என் மனைவிதான்.
கடந்த 2015இல் என முனைவர் பட்ட ஆய்வேட்டைச் சமர்ப்பித்தேன். அதன்பிறகு 10 ஆண்டுகள் கழித்துத்தான் எனக்கு முனைவர் பட்டம் கிடைத்துள்ளது. நான் செய்த ஆய்வை ஜெர்மனிக்கு அனுப்பி வைத்தனர். வட இந்தியாவுக்கும் அனுப்பினர். அனைவரும் இந்த ஆய்வுக்கு டிலிட் பட்டம் வழங்கலாம் எனச் சொன்ன சம்மதம் பிறகுதான் எனக்கு இந்தப் பட்டம் கிடைத்துள்ளது.
எனது ஆய்வில் நான் கண்ட மூலிகைகள் பற்றியும் அதன் மருத்துவக் குணம் பற்றியும் எடுத்துக் கூறியுள்ளேன். வாத நோய்க்கும் ஸ்ட்ரோக் ஆகிய இரண்டிற்கும் சில தீர்வுகளைச் சொல்லி இருக்கிறேன். குறிப்பாக நான் பக்கவாதத்திற்குக் கூறியுள்ள மருத்து உலகில் எங்கேயும் இல்லை. ஆங்கில மருத்துவம் பக்கவாதத்திற்குத் தோல்வியடைந்துவிட்டது. சித்த மருத்துவத்தை மட்டுமே பக்கவாதத்திற்கு உகந்தது எனப் பஞ்சாப் அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டிலிருந்து பல சித்த மருத்துவர்கள் பஞ்சாப் சென்று பணியாற்றி வருகிறார்கள்.

மீனவத்துறைக்கு என்றும் பெண்களுக்கும் என்றும் தனித்தனியே பல பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. ஆனால், சித்த மருத்துவத்திற்கு என ஒரு பல்கலைக்கழகம் இல்லை. சித்த மருத்துவத்திற்கு உகந்த மாவட்டம் கன்னியாகுமரி. அங்கேதான் மூலிகைகள் உள்ளன. மருந்துவாழ் மலை என்று ஒரு மலையே உள்ளது. அங்கே மூலிகை பல்கலைக் கழகத்தை அமைக்கலாம். நான் பிரசிடென்சி கல்லூரியில் வரலாற்றுப் பேராசிரியராக இருந்தேன். என் மாமனார் புகழ்பெற்ற சித்த மருத்துவர். திருவாங்கூர் அரச குடும்பத்திற்கு வைத்தியம் பார்த்தவர். ஆகவே சித்தவைத்தியத்தின் வரலாறு என்ற தலைப்பில்தான் நான் ஆய்வு செய்துள்ளேன்.
இந்தியாவிற்கு என்று ஒரு மருத்துவத்துறை உள்ளது என்றால் அது சித்த மருத்துவம்தான். மற்றவை யாவும் வெளிநாட்டு மருத்துவம். ஹோமியோபதி ஜெர்மனிலிருந்து வந்தது. ஆயுர்வேதா மத்திய ஆசியாவிலிருந்து வந்தது. யூனானி கிரேக்க மருத்துவம். எனவே நம் மருத்துவத்தை நாம் மீட்கவேண்டும். அதற்காகவே நான் ஆய்வு செய்தேன். என் ஆய்வு பிஹெச்டி இல்லை, டிலிட்" என்கிறார்












Click it and Unblock the Notifications