காட்டுமிராண்டி செயல்.. இப்ப தெரியுதா? இந்து கோவில் இந்துக்களிடம் இருக்கணும்: பாய்ந்து வந்த எச்.ராஜா!
சென்னை: இந்து கோவில்கள் இந்துக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதன் நியாயம் இப்போது அனைவருக்கும் புரியும் எனத் தெரிவித்துள்ளார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு தினந்தோறும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு வெளிமாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இந்தக் கோயிலில் நடைபெறும் முக்கிய உற்சவமான வைகுண்ட ஏகாதசி பெருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கிய நிலையில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் விஸ்வரூப தரிசனத்துக்கு பிறகு பெருமாளை வழிபட வரிசையில் காத்திருந்தனர்.

தரிசனத்திற்காக மூலஸ்தானத்துக்கு முன்புறம் உள்ள காயத்ரி மண்டபத்தில் நீண்ட நேரமாக காத்திருந்த ஆந்திர மாநில ஐயப்ப பக்தர்கள் தங்களை விரைந்து சேவைக்கு அனுமதிக்கும்படி அங்கிருந்த உண்டியலைத் தட்டி கோஷமிட்டுள்ளனர். இதை அங்கு காவல் பணியில் இருந்த கோயில் பாதுகாவலர்கள் தட்டிக் கேட்டபோது, இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாய்த் தகராறு கைகலப்பாக மாறியுள்ளது. இதில், ஆந்திர ஐயப்ப பக்தர் சென்னா ராவ் என்பவருக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த அவர் அங்கேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
காயமடைந்த பக்தர்கள் உள்ளிட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஸ்ரீரங்கம் கோயில் மூலஸ்தானம் அருகே ரத்தம் சிந்தியதால், மூலவர் ரங்கநாதர் சன்னதியின் நடை சாத்தப்பட்டு, அந்த இடத்தை சுத்தப்படுத்தி, பரிகார பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு, பின்னர் ஒரு மணிநேரத்துக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது.
ஶ்ரீரங்கம் கோவிலில் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்திய காட்டுமிராண்டி செயல் வன்மையாக கண்டிக்க தக்கது. இந்து கோவில்கள் இந்து விரோத அரசிடம் உள்ளதன் விளைவே இது. இந்து கோவில்கள் இந்துக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதன் நியாயம் இப்போது அனைவருக்கும் புரியும்.
— H Raja (@HRajaBJP) December 12, 2023
இந்நிலையில், இந்தச் சம்பவத்திற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கோயில் நிர்வாகத்தில் இருந்து இந்து சமய அறநிலையத் துறையை வெளியேற்ற வேண்டும் என பாஜக கூறுவதற்கான பல காரணங்களில் இதுவும் ஒன்றாகும் என விமர்சித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஸ்ரீரங்கம்கோயிலின் புனிதத்தை கெடுக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்து சமய அறநிலையத் துறைக்கு எதிராக போராட்டமும் அறிவித்தார்.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, "ஶ்ரீரங்கம் கோவிலில் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்திய காட்டுமிராண்டி செயல் வன்மையாக கண்டிக்கத் தக்கது. இந்து கோவில்கள் இந்து விரோத அரசிடம் உள்ளதன் விளைவே இது. இந்து கோவில்கள் இந்துக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதன் நியாயம் இப்போது அனைவருக்கும் புரியும்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications