கலைஞர் என்றாலே போராட்டம் தான்! அதன் அடையாளம் தான் இந்த நினைவிடம்.. முதல்வர் ஸ்டாலின் பதிவு
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் கருணாநிதி நினைவிடத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைத்த நிலையில், கருணாநிதி என்றாலா போரட்டம்.. அவரது போராட்டத்தின் இறுதி அடையாளம் தான் இந்த நினைவிடம் என தனது எக்ஸ் தளத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதி கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு 7 ஆம் தேதி சென்னையில் தனது 94 -வது வயதில் காலமானார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த இடத்திலேயே கருணாநிதிக்கு நினைவிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டு தற்போது நிறைவடைந்தது.

அத்துடன் பேரறிஞர் அண்ணாவின் நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று கருணாநிதி நினைவிடம் மற்றும் பேரறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை முதல்வர் முக ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். முன்னதாக திறப்பு விழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
மாலை 7.30 மணியளவில் அண்ணா நினைவிடத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அங்கு வைக்கப்பட்டு இருந்த கல்வெட்டை திறந்து வைத்தார். தொடர்ந்து அண்ணாவின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து சென்னை மெரினாவில் 8.45 ஏக்கரில் ரூ.39 கோடியில் அமைக்கப்பட்ட கருணாநிதி நினைவிடத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

திறப்பு விழாவிற்கு வருகை தந்த கூட்டணி கட்சி தலைவர்களை ஸ்டாலின் வரவேற்றார். சென்னையில் அண்ணா, கருணாநிதி நினைவிட திறப்பு விழாவில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்றனர். திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் வைகோ, திருமாவளவன், முத்தரசன், கி வீரமணி பங்கேற்றனர். இதேபோல் விழாவில் நடிகர் ரஜினிகாந்த், வைரமுத்து உள்பட பலர் பங்கேற்றனர்.
கருணாநிதி நினைவிடம் திறந்து வைப்பதற்கு முன்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:- கலைஞர் என்றாலே போராட்டம்தான்! அவரது இறுதிப் போராட்டத்தின் அடையாளம்தான் இந்த நினைவிடம்!" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications