காரைக்குடி அழகப்பா பல்கலை. துணைவேந்தர் பதவி- பிற மாநிலத்தவர் விண்ணப்பம்- திருமாவளவன் கடும் எதிர்ப்பு
சென்னை: காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு பிற மாநிலத்தவர்களும் விண்ணப்பித்துள்ளதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான தொல். திருமாவளவன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக வெளி மாநிலத்தவரை தமிழக பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களாக நியமிக்கும் போக்கு இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் தகுதி வாய்ந்த பேராசிரியர்கள், கல்வியாளர்கள் இருந்த போதும் அவர்கள் புறக்கணிக்கப்பட்டு சில பல லாபிகள் மூலம் வெளிமாநிலத்தவருக்கு துணைவேந்தர் பதவி கிடைத்து விடுகிறது.
இது ஏற்கனவே தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக துணைவேந்தர் பதவிக்கு ஏராளமான வெளி மாநிலத்தவர் விண்ணப்பித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:

162 பேராசிரியர்கள் மனு
தமிழகத்தில் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைகழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, இதற்கு மனுச் செய்வதற்கான கடைசி நாள் கடந்த ஜுலை 02 ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. இப்பதவிக்காக நாடு முழுவதிலும் இருந்து 162 பேராசிரியர்கள் மனுச் செய்துள்ளனர். இவர்களின் மனுக்களைத் தமிழக ஆளுநரால் அமைக்கப்பட்ட 'தேடல்குழு' பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது.

உ.பி. பேராசிரியர்கள்
தமிழகத்திலுள்ள தமிழர்களுக்கான ஒரு பல்கலைகழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு, வழக்கத்திற்கு மாறாக தமிழர் அல்லாத வெளிமாநிலத்தவர் பலர் மனுச் செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதனை அப்பல்கலைக்கழகத்தின் இணையதளம் வாயிலாக அறிய முடிகிறது. இவர்கள் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ஒடிஸா, மகராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், புதுடெல்லி, இமாச்சலப்பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவருகிறது. குறிப்பாக, இவர்களில் பெரும்பாலானவர்கள் உத்தரப்பிரதேசத்தைச் சார்ந்தவர்கள். இவர்கள் தமிழ்மொழியை எழுத, பேச அறிந்தவர்களா? இவர்கள் எந்த நம்பிக்கையில் தமிழகத்திலுள்ள பல்கலைக் கழகத்திற்குத் துணைவேந்தர் பதவிகோரி மனுச் செய்துள்ளனர்?

ஆளுநர் காரணமா?
கடந்த ஆட்சியின்போது அதிமுக அரசின் பரிந்துரைகளைப் பொருட்படுத்தாமல் மேதகு ஆளுநர் அவர்கள் தமக்குள்ள அதிகார வரம்புகளை மீறி செயல்பட்டதன் விளைவாகவே தற்போது இந்தநிலை ஏற்பட்டுள்ளது. இன்று திமுக தலைமையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டும்கூட மேதகு ஆளுநர் அவர்கள் வரம்புமீறி செயல்படுவார் என்கிற நம்பிக்கைதான் தமிழ் தெரியாத வட இந்திய மாநிலத்தவர்களும் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பம் செய்வதற்குக் காரணமா என்கிற அய்யம் எழுகிறது. ஏற்கனவே, பல்வேறு தொழில்கள் மற்றும் பணிகளைச் செய்வதற்கென வட இந்திய மாநிலத்தவர்கள் இலட்சக்கணக்கானோர் தமிழகத்திற்கு வந்தேறி குவிந்து விட்டனர்.

அண்ணா பல்கலை. சூரப்பா விவகாரம்
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும், பொதுத்துறைகளிலும் இன்னபிற தொழிற்சாலைகளிலும்கூட வட மாநிலத்தவர் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் துணைவேந்தர் போன்ற உயர் பதவிகளில் தமிழர் அல்லாத பிறமாநிலத்தவர்கள் அமரத் துடிப்பது எதைக் காட்டுகிறது? தமிழகத்தின் எதிர்காலம் எதைநோக்கிப் போகிறது என்கிற அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே, கர்நாடகா மாநிலத்தைச் சார்ந்த திரு. சூரப்பாவை அண்ணா பல்கலைகழகத்தின் துணைவேந்தராக்கியதும் அவரால் உருவானப் பல்வேறு சிக்கல்களையும் நாம் இன்னும் மறந்துவிடவில்லை. எனவே, தமிழகப் பல்கலைக்கழகங்களில் எந்தவொரு சூழலிலும் தமிழர் அல்லாதோர் நியமிக்கப்படுவது முற்றாக தவிர்க்கப்படவேண்டும். அவ்வாறு நியமிப்பது தமிழகத்தின் நலன்களுக்கு எதிரானது; மிகவும் ஆபத்தானது.

தமிழக அரசுதான் தேர்வு செய்ய வேண்டும்
அத்துடன்,தமிழகப் பல்கலைகழகங்களின் துணைவேந்தர்களை தமிழக அரசு தான் தேர்வு செய்ய வேண்டுமென்றும், தமிழக அரசு தேர்வு செய்யும் துணைவேந்தர்களை அவற்றின் வேந்தரான ஆளுநர் அவர்கள் அங்கீகரிக்க வேண்டுமென்றும் விசிக சார்பில் வலியுறுத்துகிறோம். தமிழக அரசு தமக்குரிய அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்தவேண்டும். மேதகு ஆளுநர் அவர்கள் தமது அதிகாரவரம்புகளை மீறும்நிலை வரும்போது அதனை எவ்வகையிலேனும் தடுத்துநிறுத்திட ஆவன செய்யவேண்டுமென தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. இவ்வாறு திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications