பயப்படுறவுங்க கட்சியை விட்டு போகலாம்.. விஜயதாரணி விலகிய நிலையில்.. தமிழ்நாடு காங்கிரஸ் டைமிங் பதிவு
சென்னை: காங்கிரசில் இருந்து விலகி, விஜயதாரணி பாஜகவில் இணைந்த நிலையில், "பயப்படுறவுங்க கட்சியை விட்டு போகலாம்" என்று ராகுல் காந்தி பேசிய பழைய வீடியோவை எடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் டைமிங்கில் ட்வீட் பதிவிட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விளவங்கோடு எம்.எல்.ஏ விஜயதாரணி இன்றைய தினம் பாஜகவில் இணைந்த நிலையில், அவர் எதற்காக பாஜகவில் இணைந்தார் என்பது குறித்து மத்திய இணை அமைச்சர் எல் முருகன் விளக்கியுள்ளார். தமிழ்நாட்டில் எப்படியாவது வளர்ந்து விட வேண்டும் என்று மத்தியில் ஆளும் பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.

ஒரு பக்கம் பாஜகவை மாநிலம் முழுக்க கொண்டு சேர்க்க மாநில தலைவர் அண்ணாமலை பாத யாத்திரை சென்றுள்ளார். மறுபுறம் பிற கட்சியைச் சேர்ந்தவர்களை பாஜகவுக்குக் கொண்டு வரவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். அண்மையில் கூட அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் சிலர் பாஜகவில் ஐக்கியமானார்கள். லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மேலும் சில முக்கிய புள்ளிகள் பாஜகவில் இணைய இருப்பதாக அண்ணாமலை கூறி வருகிறார்.
இந்த நிலையில் தான், தமிழக காங்கிரஸின் முக்கிய தலைவர்களில் ஒருவரான விஜயதாரணி பாஜகவில் இணைய இருப்பதாக கடந்த சில நாட்களாவே தகவல் வெளியாகி வந்தது. டெல்லியில் முகாமிட்டு இருந்த விஜயதாரணியிடம் இதுபற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு இந்த தகவலை மறுக்கவும் இல்லை. இதனால், விஜயதாரணி பாஜகவில் இணைய இருக்கும் தகவல் கொடி கட்டி பறந்தது. எனினும், தமிழக காங்கிரஸ் கட்சி இந்த தகவலை மறுத்து வந்தது.
இந்தச் சூழலில் தான் விஜயதாரணி பாஜகவில் இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்தார். அவர் கடந்த 2 வாரங்களாக டெல்லியில் முகாமிட்டிருந்த நிலையில், இன்று அவர் பாஜகவில் இணைந்தார். காங்கிரஸ் கட்சி சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அவர் பாஜகவில் இணைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விஜயதாரணி கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் 3 முறை வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக உள்ளார். கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டதாகவும் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அவர் அதிருப்தியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் இன்று டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.
இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி விஜயதாரணியை விமர்சிக்கும் விதமாக தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளது. அதாவது, காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ராகுல் காந்தி பேசிய பழைய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:- எதற்கும் பயப்படாத அச்சமற்ற உண்மையான போராளிகளை மட்டுமே காங்கிரஸ் விரும்புகிறது. பயப்படுபவர்கள் கட்சியை விட்டு வெளியேறுங்கள். உங்களுக்கு ஆர்.எஸ்.எஸ் தான் சரியான இடம்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications