JCD Prabhakar: சபாநாயகராக ஜே.சி.டி.பிரபாகரன் போட்டியின்றி தேர்வு! முதல் அக்னி பரீட்சையில் பாஸ் செய்தார் விஜய்!
சென்னை: தமிழக சட்டசபையின் சபாநாயகராக ஆயிரம் விளக்கு தொகுதியின் எம்எல்ஏ ஜே.சி.டி. பிரபாகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சபாநாயகர் தேர்தலுக்கான மனுவை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் முடிந்த நிலையில் பிரபாகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
தமிழக சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்று பெரும்பான்மை இல்லாத நிலை இருந்தது. இதையடுத்து ஆளுநர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைந்துள்ளது.

இந்த தேர்தலில் விஜய், பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு இடங்களில் வென்றார். நேற்றைய தினம் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். இதனால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும். இந்த நிலையில் நேற்று முதல்வராக விஜய்யும் அவருடன் 9 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில் தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இடைக்கால சபாநாயகர் கருப்பையா, தேர்வான 233 எம்எல்ஏக்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். எம்எல்ஏக்கள் உளமாற, ஆண்டவன் மீது உறுதி கூறுகிறேன் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் போட்டியிடுகிறார். இதற்காக தவெக சார்பில் போட்டியிடுவதற்கான மனுவை சட்டசபை செயலாளர் சீனுவாசனிடம் வழங்கினார். அப்போது முதல்வர் விஜய்யும் உடனிருந்தார். பிரபாகரை எதிர்த்து, எதிர்க்கட்சியை சேர்ந்தவர் யாரேனும் போட்டிக்கு ஒரு சபாநாயகரை நிறுத்தினால் நாளை சட்டசபை சபாநாயகருக்கான தேர்தல், குரல் வாக்கெடுப்பு மூலம் நடைபெறும், இதுதான் நடைமுறை. ஆனால் சபாநாயகர் தேர்தலுக்காக எதிர்க்கட்சி சார்பில் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. மனு தாக்கலுக்கான நேரமும் முடிவடைந்துவிட்டது. இதனால் ஜேசிடி பிரபாகர் சபாநாயகராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிப்பது என்பது ஒரு புறம் இருந்தாலும், சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சிகள் சேர்ந்து ஒருவரை ஆளும் கட்சிக்கு எதிராக நிறுத்தி அந்த வேட்பாளர் வென்று தவெக வேட்பாளர் தோற்கடித்தால் விஜய்யின் அரசு தோல்வியுற்றதாக அறிவிக்கப்படும். அவர் பெரும்பான்மையை நிரூபிக்கவே செல்ல முடியாத நிலை ஏற்படும் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்திருந்தனர். எனவே விஜய் முதலில் இந்த ஆசிட் டெஸ்டில் பாஸ் செய்ய வேண்டும் என கூறப்பட்ட நிலையில் அதில் பாஸாகிவிட்டார்.
யார் இந்த ஜேசிடி பிரபாகர்?
எம்ஜிஆர் காலத்து அரசியல் முகங்களில் ஒருவராக பார்க்கப்பட்டவர் ஜேசிடி பிரபாகர். சென்னையைச் சேர்ந்த இவர் அதிமுகவில் அமைப்புச் செயலாளராக இருந்தார். சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர்.
அந்த வகையில் இவர் 1980 ஆம் ஆண்டு வில்லிவாக்கத்தில் போட்டியிட்டு ஜேசிடி பிரபாகர் வென்றார். அது போல் 1984, 1989 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
2011 ஆம் ஆண்டு திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்ட போது க.அன்பழகன் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் களம் கண்ட ஜேசிடி பிரபாகர், அந்த தேர்தலில் க.அன்பழகனை 10,782 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
இதையடுத்து 2016ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர் 2021 ஆம் ஆண்டு வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு, திமுக வேட்பாளர் வெற்றியழகனிடம் தோல்வி அடைந்தார்.
இதையடுத்து அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் ஓபிஎஸ் அணியில் இணைந்து செயல்பட்டு வந்தார். பின்னர் அவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கி செயல்பட்டு வந்தார்.
இதையடுத்து அந்த குழுவைவிட்டுவிட்டு விஜய்யின் தவெகவில் கடந்த ஜனவரி மாதம் இணைந்து ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் எழிலன் நாகநாதனை 15,141 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் அவர் சபாநாயகராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications