செல்வமகள் சேமிப்பு திட்டத்தில்.. இந்த தவறை செய்யாதீங்க.. முடக்கப்பட்ட பல ஆயிரம் கணக்குகள்.. ஷாக்
சென்னை: செல்வமகள் சேமிப்புத் திட்டம் எனப்படும் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட ஆயிரக்கணக்கான கணக்குகள் ஒரே மாவட்டத்தில் முடக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுகன்யா சம்ரித்தி யோஜனா: 14 ஆயிரம் கணக்குகள் முடக்கம்
சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளுக்கான கணக்கைத் தொடங்கிய பிறகு, பெற்றோர்கள் அந்தக் கணக்கில் தொடர்ந்து பணம் செலுத்தவில்லை என்றால், அந்தக் கணக்குகள் முடக்கப்படும். சத்தீஸ்கர் மாநிலம், தாம்ட்ரி மாவட்டத்தில் சுமார் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணக்குகளில் பரிவர்த்தனைகள் இல்லாததால் அவை செயலிழந்து போயுள்ளன. இந்த கணக்குகளை மீண்டும் செயல்படுத்த, பெற்றோர்கள் ஆண்டுக்கு ₹250 அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

பெண்களின் முன்னேற்றத்தையும், அவர்களின் நிலையையும் மேம்படுத்தும் நோக்கத்துடன் மத்திய அரசு பிரதான் மந்திரி சுகன்யா சம்ரித்தி யோஜனாவைத் தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ், ஒரு பெண்ணின் பெற்றோர் தங்கள் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தையின் பெயரில் வங்கி அல்லது தபால் நிலையத்தில் கணக்கைத் தொடங்கி, எதிர்காலத்தில் அவர்களின் உயர்கல்வி மற்றும் பிற செலவுகளுக்காக சேமிக்க முடியும். இந்த கணக்கை பூஜ்ஜிய இருப்பில் தொடங்கினாலும், ஆண்டுக்கு குறைந்தபட்சம் ₹250 செலுத்த வேண்டும். அதிகபட்சமாக ₹1.50 லட்சம் வரை செலுத்தலாம். தற்போது, டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு அரசாங்கம் 8.2% வட்டி வழங்கி வருகிறது.
கணக்குத் தொடங்கிய தேதியிலிருந்து 14 ஆண்டுகள் வரை பணம் செலுத்த வேண்டும். அதன் பிறகு, 21 வயது பூர்த்தியானதும், கணக்கு வைத்திருப்பவருக்கு திருமணம் உள்ளிட்ட பிற செலவுகளுக்காக அசல் மற்றும் வட்டி தொகை வழங்கப்படும். ஆனால், சத்தீஸ்கரில் உள்ள தாம்ட்ரி மாவட்டத்தில், கணக்குத் தொடங்கிய பிறகு பெற்றோர்கள் நிர்ணயிக்கப்பட்ட தொகையை செலுத்த முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே பல கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
செயலிழந்த கணக்குகள் - தபால் நிலையத்தின் விளக்கம்
தாம்ட்ரி தபால் நிலையத்தில் பிரதான் மந்திரி சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் கீழ் சுமார் 24,600 பெற்றோர்கள் தங்கள் மகள்களின் பெயரில் கணக்குகளைத் தொடங்கியுள்ளனர். ஆனால் தற்போது வெறும் 10,600 கணக்குகளில் மட்டுமே தொடர்ந்து பணம் செலுத்தப்பட்டு வருகிறது. சுமார் 14 ஆயிரம் கணக்குகளில் பணம் செலுத்தப்படாததால், அவை செயலிழந்ததாகக் கருதப்படுகிறது.
இதுகுறித்து தாம்ட்ரி போஸ்ட் மாஸ்டர் ஜனக்ராம் துருவ் கூறுகையில், "தாம்ட்ரி தபால் நிலையத்தில் பிரதான் மந்திரி சுகன்யா சம்ரித்தி யோஜனாவின் கீழ் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன, ஆனால் அவற்றில் சுமார் 10,000 கணக்குகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. மீதமுள்ள கணக்குகளில் பணம் செலுத்தப்படவில்லை. இதுகுறித்து பெற்றோர்களைத் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறோம்" என்றார்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கி, பணம் செலுத்தாமல் இருக்கும் கணக்குகளை மீண்டும் செயல்படுத்துவதற்கு பெற்றோர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். தற்போது, அவற்றை மீண்டும் செயல்படுத்துவதற்கு பெற்றோர்கள் ஆண்டுக்கு ₹250 அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
சுகன்யா சம்ரித்தி கணக்கில் ஆன்லைன் பரிவர்த்தனை
சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின் கீழ் கணக்கை ஆன்லைனில் திறக்க முடியாது. ஆனால் கணக்கு செயலில் வந்த பின் ஆன்லைனில் பணம் செலுத்தலாம். தபால் அலுவலகம் மூலம் கணக்குத் தொடங்கியிருந்தால், இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியைப் (IPPB) பயன்படுத்தி ஆன்லைன் பரிமாற்றங்களைச் செய்யலாம்.
IPPB சேமிப்புக் கணக்கைத் திறக்க, அருகில் உள்ள தபால் நிலையத்திற்குச் செல்லவும். இது தபால் நிலையம் வழியாக வழங்கப்படும் ஆன்லைன் பரிவர்த்தனைகளை அனுமதிக்கும் ஒரு சேமிப்புக் கணக்கு ஆகும்.
இணைய வங்கி, மொபைல் வங்கி அல்லது தபால் நிலையத்தில் பண வைப்பு போன்ற முறைகளைப் பயன்படுத்தி, உங்கள் சேமிப்பு அல்லது நடப்பு வங்கிக் கணக்கிலிருந்து உங்கள் IPPB கணக்கிற்கு நிதியை மாற்றலாம். ஆகவே, இந்தத் திட்டத்தில் தவறாமல் பணம் செலுத்தினால் மட்டுமே முழுப் பலன்களைப் பெற முடியும்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கியவர்கள், தொடர்ந்து பணம் செலுத்தி வந்தால், அரசின் சார்பில் வழங்கப்படும் வட்டி விகித பலனை முழுமையாக அனுபவிக்க முடியும். இல்லாவிட்டால் கணக்கு முடக்கப்படுவதோடு, அபராதமும் செலுத்த நேரிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.












Click it and Unblock the Notifications