சென்னை பட்டினம்பாக்கம் ஓட்டல் ஊழியரிடம் வழிபறி.. 3 காவலர்கள் சஸ்பெண்ட்.. கமிஷனர் அருண் உத்தரவு
சென்னை: புதுச்சேரியை சேர்ந்தவர் சரவணன் என்பவர் சென்னை பட்டினம்பாக்கத்தில் ஓட்டல் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரிடம் 3 திருநங்கைகள் வற்புறுத்தி வழிபறி செய்தார்களாம்.இது குறித்து சற்று தொலைவில் நின்றிருந்த காவலர்களிடம் சரவணன் முறையிட்டாராம். அந்த போலீஸ்காரர்களும் நூதன முறையில் வழிப்பறியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் காவலர்கள் 3 பேரை பணியிடை நீக்கம் செய்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருண் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரியை சேர்ந்த 24 வயதாகும் சரவணன் என்பவர் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் ஊழியராக பணிசெய்கிறார். பட்டினப்பாக்கத்திலேயே தங்கியிருக்கிறார். இவர் நுங்கம்பாக்கம் போலீஸ்நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த புகார் மனுவில் சரவணன் கூறுகையில், "சென்னை பட்டினம்பாக்கத்தில் ஓட்டலில் வேலை செய்து வருகிறேன். கடந்த டிசம்பர் 25-ந்தேதி அன்று நள்ளிரவில் சென்னை அண்ணாநகருக்கு நுங்கம்பாக்கம் வழியாக எனது இருசக்கர வாகனத்தில் சென்றேன். நுங்கம்பாக்கம் பகுதியில் 3 திருநங்கைகள் என்னை வழிமறித்தனர். என்னிடம் பணம் கேட்டு தகராறு செய்தார்கள். எனது செல்போனை பறித்து அதன் மூலம் 'ஜி-பே' வாயிலாக வங்கி கணக்கில் இருந்து ரூ.5 ஆயிரம் பணத்தை அவர்களது வங்கி கணக்கிற்கு மாற்றிவிட்டார்கள்.
இந்த சம்பவம் நடந்த இடத்திற்கு சற்று தள்ளி தான் 2 போலீஸ்காரர்கள் நின்றிருந்தனர். அவர்களிடம் திருநங்கைகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி சொன்னேன். ஆனால் அவர்களோ, 'உன் மீதுதான் சந்தேகம் உள்ளது. எங்களோடு வா'... என்று நுங்கம்பாக்கத்தில் உள்ள போலீஸ் பூத் ஒன்றிற்கு அழைத்து சென்றார்கள். அப்போது அங்கு இன்னொரு போலீஸ்காரர் வந்தார்.
3 காவலர்களும் சேர்ந்து எனது ஏ.டி.எம். கார்டை பறித்து அதன்மூலம் எனது வங்கி கணக்கில் இருந்து ரூ.15 ஆயிரம் பணத்தை ஏ.டி.எம். எந்திரம் மூலம் எடுத்து கொண்டனர். மொத்தமாக, போலீஸ்காரர்களும், திருநங்கைகளும் சேர்ந்து ரூ.22 ஆயிரம் பணத்தை என்னிடம் இருந்து அபகரித்து கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த புகார் சென்னை மாநகர காவல் ஆணையர் அருணின் கவனத்திற்கு சென்றத. அவர் உடனடியாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு திருவல்லிக்கேணி துணை கமிஷனருக்கு உத்தரவிட்டார். துணைகமிஷனர் ஜெயசந்திரன் இதுகுறித்து விசாரணை நடத்தினார். சம்பவம் நடந்த இடங்களில் இருந்த சி.சி.டி.வி. வீடியோ காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் ஓட்டல் ஊழியர் சரவணனிடம் திருநங்கைகளும், 3 போலீஸ்காரர்களும் நூதன முறையில் பணம் பறித்தது உண்மை என்று தெரியவந்தது
இதுதொடர்பாக நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தார்கள். வழிப்பறி வழக்கில் சிக்கியது நுங்கம்பாக்கம் சட்டம்- ஒழுங்கு பிரிவில் பணியாற்றும் போலீஸ்காரர்கள் காஜா முகைதீன், ரத்தினம், விக்னேஷ் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் 3 பேரும் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். 3 போலீஸ்காரர்கள் மீதும், திருநங்கைகள் மீதும் கைது நடவடிக்கை பாயும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications