திமிறி எழும் திருநெல்வேலி.. வருகிறது பிரம்மாண்ட ரிங் ரோடு.. இனி நோ டிராபிக்.. சட்டுனு பறக்கலாம்!
சென்னை: திருநெல்வேலிக்கு 784 கோடி ரூபாய் செலவில் புதிய மேற்கு சுற்றுச் சாலை (ரிங் ரோடு) அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
33 கிமீ நீளம் மற்றும் 12 மீட்டர் அகலத்தில் 14 கிராமங்கள் வழியாக செல்லும் வகையில் புறவழிச் சாலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்திற்குத் தேவையான 92.24 ஹெக்டேர் நிலத்தில், 23.53 ஹெக்டேர் அரசு புறம்போக்கு நிலம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மொத்தம் ரூ.78.5 கோடி நில உரிமையாளர்களுக்கு இழப்பீடாக வழங்கப்படும். இதுவரை 95% நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் ஒரு பகுதியாக இரண்டு ரயில்வே பாலங்கள் மற்றும் ஒரு ஆற்று (பச்சையாறு) பாலம் கட்டப்படும், மேலும் ஏற்கனவே உள்ள தாமிரபரணி ஆற்று பாலம் இடிக்கப்படாமல் அதன் வழியாகவே பாதை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
எங்கே தொடங்கும்?: தற்போதுள்ள மதுரை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை (NH-7) திருநெல்வேலி நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் போது, இந்த புறவழிச் சாலை மேற்கு நகரப் பகுதிகளைச் சுற்றி வளைந்து செல்லும். NH-7 இல் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள தாழையூத்தில் சாலை நீட்டிப்பு தொடங்கி, நகரின் தெற்குப் பகுதியில் பொன்னக்குடியில் இந்த சாலை முடிவடையும்.
இந்த மேற்கு புறவழிச் சாலை திருநெல்வேலி நகரை நோக்கிச் செல்லும் ஐந்து மாநில நெடுஞ்சாலைகளை இணைக்கும் என்பதால், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நகரத்திற்கு சிரமமின்றி கொண்டு செல்ல முடியும். மதுரையில் இருந்து கேரளா, தென்காசி, குற்றாலம் மற்றும் மணிமுத்தாறு செல்லும் வாகனங்கள் திருநெல்வேலி செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதனால் இன்னும் வேகமாக பயணம் செய்ய முடியும்.
மேலும், ராஜபாளையம், தென்காசி, சேரன்மகாதேவி ஆகிய பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள், திருநெல்வேலி நகர எல்லையைத் தாண்டி உள்ளே செல்லாமலே நாகர்கோவிலுக்குச் செல்லலாம்.இந்தச் சாலையால், நகரில் ஏற்படும் வாகன நெரிசல் பெருமளவில் குறைக்கப்படும். பயணிகளுக்கு பொன்னான நேரமும் எரிபொருள் பயன்பாடும் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சாலைகள் மாற்றம்: தமிழ்நாடு முழுக்க பல நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முழுக்க பல்வேறு காரணங்களுக்காகக் சாலை பணிகள் நடந்து வருகின்றன. சாலைகளை விரிவு செய்வது, பாதாள சாக்கடை அமைப்பது, கழிவு நீர் குழாய்களை அமைப்பது, கேபிள் அமைப்பது, மழை நீர் வடிகால் சென்னையில் அமைப்பது, மின்சார வடங்களை அமைப்பது, பாலம் கட்டுவது, சென்னையில் செய்வது என்று பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.
இந்த பணிகள் அனைத்தையும் இந்த மாத இறுதிக்குள் முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவு தமிழ்நாடு அரசு மூலம் ஒப்பந்ததாரர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. சென்னை மட்டுமின்றி மற்ற மாவட்டங்களுக்கும் இந்த உத்தரவு சென்றுள்ளது.
இதனால் கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் உட்பட தமிழ்நாடு முழுக்க நடக்கும் சாலை பணிகள் விரைவில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் திருநெல்வேலிக்கு 784 கோடி ரூபாய் செலவில் புதிய மேற்கு சுற்றுச் சாலை (ரிங் ரோடு) அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications