ஆம்பூர் கலவர வழக்கு: மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ அஸ்லம் பாஷாவின் சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவு!
சென்னை: 2015 இல் நடந்த ஆம்பூர் கலவரம் தொடர்பான வழக்கில் மறைந்த மனிதநேய மக்கள் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ அஸ்லம் பாஷாவின் சொத்துகளை பறிமுதல் செய்ய திருப்பத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆம்பூர் கலவர வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 161 பேரை விடுதலை செய்தும், 22 பேரை குற்றவாளிகள் என அறிவித்தும் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.

ஆம்பூர் சம்பவம்
வேலுார் மாவட்டம் பள்ளிகொண்டா குச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் பழனி. இவர் மனைவி பவித்ரா (25). கடந்த 2015 ஆம் ஆண்டு மே, 24 ஆம் தேதி மாயமானார். அவரை மீட்டுத்தரக் கோரி பழனி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். பள்ளிகொண்டா போலீசார், ஆம்பூரை சேர்ந்த ஷமீல் அகமது (26) என்பவரிடம், 2015 ஜூன் 15 ஆம் தேதி விசாரணை நடத்தினர்.
பள்ளிகொண்டார் காவல் ஆய்வாளர் மார்ட்டின் பிரேம்ராஜ், ஷமீல் அகமதுவை அங்குள்ள காவலர் குடியிருப்பு ஒன்றில் அடைத்து வைத்து விசாரித்தார். அப்போது அவர் கடுமையாகத் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் போலீசார் அவரை அனுப்பி வைத்தனர். இந்நிலையில், ஷமீல் அகமது உடல்நிலை பாதித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காவல் நிலையம் முற்றுகை
இதையடுத்து, ஆம்பூர் டவுன் காவல் நிலையத்தை, 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் முற்றுகையிட்டனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் மார்டின் பிரேம்ராஜ் உட்பட, 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்த விசாரணை அறிக்கை அதிருப்தி அளிப்பதாக, மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்தது.
கடந்த, 2015- ஜூன் 27 ஆம் தேதிஇரவு, 7 மணியளவில் ஆம்பூரில், சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், 500-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு, போலீசாரை கைது செய்யக்கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த பேருந்துகள், லாரிகள், கார்கள் மற்றும் வாகனங்கள் மீது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
ஆம்பூர் கலவரம்
கற்கள் வீசப்பட்டதால் பல வாகனங்கள் சேதமடைந்தன. பேருந்தில் இருந்த பயணிகள் பலர் காயமடைந்தனர். லாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டு ஓட்டுநர்கள் தாக்கப்பட்டதால் போராட்டம் கலவரமாக மாறியது. சுமார் 5 மணி நேரம் இந்தக் கலவரம் நடந்தது. கலவரத்தில் தொடர்புடைய 190-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. கைதான 118 பேருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.
கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கின் தீர்ப்பு திருப்பத்துார் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஆம்பூர் கலவரம் தொடர்பாக பதிவான வழக்குகளில் இருந்து 161 பேரை விடுதலை செய்து நீதிபதி மீனாகுமாரி உத்தரவிட்டுள்ளார்.
7 கட்டமாக பதியப்பட்ட வழக்குகளில் 6 கட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட 161 (இறப்பு உட்பட) பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். முதல் பிரிவில் 26 பேர், 2-வது பிரிவில் 35 பேர், 3-வது பிரிவில் 34 பேர் உட்பட 161 விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கலவரத்தின்போது பொது சொத்துக்களை சேதப்படுத்தியதற்காக மனிதநேயம் மக்கள் கட்சியைச் சேர்ந்த மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ அஸ்லாம் பாஷாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அஸ்லாம் பாஷாவின் சொத்துக்களை பறிமுதல் செய்து நஷ்டத்தை ஈடு செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications