திமுகவின் பிரித்தாளும் அரசியல் மக்களிடம் எடுபடாது.. திருப்பரங்குன்றம் நீதிமன்ற தீர்ப்புக்கு அதிமுக ரியாக்ஷன்
சென்னை: திருப்பரங்குன்றம் தீபத் தூணில் இன்று இரவு 7 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்ட நிலையில், நீதிமன்ற தீர்ப்புக்கு அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா வரவேற்பு தெரிவித்துள்ளார். திமுகவின் பிரித்தாளும் அரசியல் ஒருபோதும் தமிழகத்தில் எடுபடாது என்றும், அரசியலை கைவிட்டுவிட்டு சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும் என ராஜன் செல்லப்பா வலியுறுத்தியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் என்ற வேண்டும் என்ற தனி நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து, திருப்பரங்குன்றத்தில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவை ரத்து செய்து நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டார். மேலும், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் இன்று மாலை 7 மணிக்குள் தீபம் ஏற்ற நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டார். இதனை வரவேற்பதாக அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லாப்பா கூறினார். அவர் கூறியிருப்பதாவது:-
திமுக அரசு ஏற்படுத்திய இத்தனைப் பிரச்சனைகளுக்கும் நீதிமன்றத்தின் சரியான, நியாயமான தீர்ப்பே உரிய முடிவாக இருக்கும் என எடப்பாடி பழனிசாமி வழிகாட்டுதலில் படி, சட்டத்தின் மீதான முழு நம்பிக்கையுடன் காத்திருந்தோம்.
திருப்பரங்குன்றம் தொகுதிவாழ் மக்கள் எண்ணியபடி பொது அமைதியை நிலைநாட்டும் நல்லதொரு தீர்ப்பை வழங்கியுள்ள சென்னை உயர்நீதிமன்ற அமர்வுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன்.
மத ரீதியான நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் அரசுக்கு ஒரு செயற்பாட்டு முறை இருக்கிறது. நேற்றைய தினம், அதை முற்றிலும் மீறிய திமுக அரசு, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மதிப்பு அளிக்காமல், காவல்துறையை கட்டவிழ்த்து விட்டு, வன்முறை, அராஜகத்தை ஏற்படுத்தியது, திருப்பரங்குன்றம் வரலாற்றில் திமுக அரசு இழைத்த கரும்புள்ளியாக அமைந்துவிட்ட நிலையில், அதை துடைக்கும் வகையில் அமைந்துள்ள இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
எளிய மக்களை குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றும் போதும், தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை இரவோடு இரவாக ஒடுக்கிய போதும், "நீதிமன்ற உத்தரவை மதித்து செயல்படுகிறோம்" என்று சொன்ன திமுக அரசுக்கு, அதே உயர்நீதிமன்ற உத்தரவோடு, கார்த்திகை தீபம் ஏற்ற இறை உணர்வோடு பக்தர்கள் வந்தபோது மட்டும், நீதிமன்ற உத்தரவை மதிக்கத் தோன்றவில்லையா?
போலீஸ் படை, வஜ்ரா வாகனம் என நேற்று காலையே பதற்றமான சூழலை ஏற்படுத்தியிருந்தது இந்த திமுக அரசு தானே? திமுக அரசின் இரும்புக்கரத்தை குற்றவாளிகள் மீது ஏவ சொன்னால், உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வந்த பக்தர்கள் மீது நேற்று ஏவப்பட்டுள்ளது வெட்கக்கேடானது.
அமைதியின், ஆன்மீகத்தின், மத நல்லிணக்கத்தின் உறைவிடமான நம் திருப்பரங்குன்றத்தில், திட்டமிட்டு பதற்றமான சூழலை ஏற்படுத்திய இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு, உயர்நீதிமன்ற அமர்வால் தங்களுக்கு குட்டு வைத்து குறிப்பிடப்பட்டுள்ள மத நல்லிணக்கம் பற்றி புரிந்து கொள்ள வேண்டும்.
திமுக நினைக்கும் மக்களை பிரித்தாளும் அரசியல் என்பது ஒருபோதும் திருப்பரங்குன்றத்தில், தமிழகத்தில் எடுபடாது! அதை மாண்புமிகு புரட்சித்தமிழர் அவர்களின் சீரான தலைமையில் செயல்பட்டு வரும் அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது!
எனவே, இதுபோன்ற அரசியல் அற்பத்தனத்தை எல்லாம் கைவிட்டு, பொது அமைதியையும், சட்டம் ஒழுங்கையும் நிலைநாட்டும் எண்ணத்தோடு மீதமுள்ள நான்கு மாதங்களாவது செயல்பட வேண்டும் என திருப்பரங்குன்றம் தொகுதி மக்களின் சார்பில் விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
