அமெரிக்க வரியால் முடங்கும் திருப்பூர்! வேலையிழப்பு அதிகரிக்கும்.. நிபுணர்கள் எச்சரிக்கை
சென்னை: இந்திய பொருட்களுக்கு கூடுதலாக 25% வரியை அமெரிக்கா விதித்திருந்த நிலையில், இந்த வரி இன்று முதல் அமலுக்கு வருகின்றன. இதனால் இந்தியாவின் 66% ஏற்றுமதி பாதிப்படையும் என வர்த்தக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்திருக்கின்றனர். வரியால் திருப்பூரில் தொழில்கள் முடங்கும் அபாயம் எழுந்திருக்கிறது. மட்டுமல்லாது அமெரிக்காவில் இந்தியாவின் வர்த்தக இடத்தை வங்கதேசம் கைப்பற்றும் அபாயமும் எழுந்திருக்கிறது.
இந்த வரி எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு ஓர் உதாரணத்தை பார்ப்போம். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சட்டை ஒன்று அமெரிக்காவில் வழக்கமாக 10 டாலருக்கு விற்பனை ஆகிறது. ஆனால் இந்த வரி காரணமாக, சட்டையின் விலை 16.40 டாலராக அதிகரிக்கும். அதுவே வங்கதேசத்தில் தயாரிக்கப்பட்ட சட்டை $13.20 ஆகவும், வியட்நாம் சட்டை $12 ஆகவும், சீனாவில் தயாரிக்கப்பட்ட சட்டை $14.20 ஆகவும் விற்பனையாகும். இதனால் இந்திய தயாரிப்பு காஸ்ட்லியாக தெரியும்.

ஆடைகள் ஏற்றுமதி
ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறையில் உலகளவில் இந்தியா ஆறாவது பெரிய ஏற்றுமதியாளராக இருக்கிறது. இந்த துறையை பொறுத்த அளவில் கடந்த 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய ஏற்றுமதியில் நாம் 4-4.1% அளவுக்கு பங்களித்திருக்கிறோம். 2024-25 நிதியாண்டில், இத்துறை 37.7 பில்லியன் டாலர் (8.63%) வணிகப் பொருட்களை ஏற்றுமதி செய்திருக்கிறோம். அமெரிக்காவின் ஜவுளி மற்றும் ஆடை இறக்குமதியில் இந்தியா சுமார் 29% (தோராயமாக 10.3 பில்லியன் டாலர்) அளவுக்கு பூர்த்தி செய்து வந்தது. ஆனால் இனி வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை குறையும் என அஞ்சப்படுகிறது.
இந்திய தயாரிப்பு அமெரிக்காவில் காஸ்ட்லியாக இருப்பதால், பெரும்பாலான மக்கள் அதை தவிர்க்க தொடங்குவார்கள். எனவே, திருப்பூரில் தொழில்கள் முடங்கும் அபாயம் எழுந்திருக்கிறது. ஜவுளி துறையில் மட்டும் இந்த அளவுக்கு நெருக்கடி.
நகைகள் ஏற்றுமதி
மறுபுறம் ரத்தினங்கள் மற்றும் நகை உற்பத்தி தொழிலும் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் எழுந்திருக்கிறது. கடந்த ஆண்டு 10 பில்லியன் டாலர் மதிப்பிலான ரத்தினங்கள் மற்றும் நகைகளை ஏற்றுமதி செய்திருக்கிறோம். அமெரிக்காவை பொறுத்தவரை, இந்தியாவின் ஏற்றுமதி மூன்றில் ஒரு பங்காகும். இப்போது இந்த துறையும் 50% வரியை எதிர்கொண்டிருப்பதால் நெருக்கடியை சந்தித்திருக்கிறது. இதனால் நாடு முழுவதும் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் வரை வேலையிழப்பு ஏற்படலாம்.
கடல் உணவு ஏற்றுமதி
ஆடைகள், நகைகளை தொடர்ந்து, கடல் உணவு ஏற்றுமதியும் அமெரிக்காவின் வரியால் பாதிக்கப்படும் அபாயம் எழுந்திருக்கிறது. நாம் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 60,000 கோடி ரூபாய் மதிப்பிலான கடல் உணவை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து வருகிறோம். இந்த வரி காரணமாக ரூ.24,000 கோடி அளவுக்கு ஏற்றுமதி பாதிக்கப்படும். இந்தியாவின் மிகப்பெரிய இறால் ஏற்றுமதி மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில், பல லட்சக்கணக்கான விவசாயிகள் பாதிப்படைவார்கள்.
தோல் தொழில்
அமெரிக்காவுக்கு தேவையான தோல் பொருட்களில் இந்தியா 20% பூர்த்தி செய்கிறது. இந்தியாவின் தோல் தொழில், 4.1 பில்லியன் டாலர் ஏற்றுமதி மதிப்பைக் கொண்டுள்ளது. கொல்கத்தாவிலிருந்துதான் அதிகமான அளவுக்கு தோல் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன. இப்போது 50% வரி காரணமாக இந்த தொழிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். $100 மதிப்பிலான காலணிகளுக்கு அமெரிக்காவில் சுமார் $50 கூடுதல் வரி விதிக்கப்படலாம், இதனால் வியட்நாம் மற்றும் இந்தோனேசிய தயாரிப்புகள் மிகவும் மலிவானதாக மாறும்.
இப்படி எல்லா வகையிலும் வரி பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் 2026 நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை 0.4% குறைக்கக்கூடும். அதேபோல பங்கு சந்தையிலும் இந்த வரி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications