பஸ் ஸ்டாண்டில் இருந்த பெண் மீது.. தண்ணீர் ஊற்றி.. விரட்டிய கடைக்காரர்.. திருப்பூர் மாநகராட்சி ஆக்சன்
சென்னை: திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் நேற்று திருப்பூர் பஸ் ஸ்டாண்டில் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினர்.
திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள நடைபாதையில் பேருந்துக்காக நேற்று பெண் ஒருவர் காத்திருந்தார். அவர் பேருந்துக்காக.. பேருந்து நிலையத்தில் உள்ள நடைமேடையில் அமர்ந்து இருந்தார். அங்கே ஆவின் பாலகம் வைத்து இருக்கும் கடைக்காரர் ஒருவர்.. அந்த பெண்ணை எழுந்து போக சொல்லி இருக்கிறார்.

பேசிக்கொண்டு இருக்கும் போதே.. அந்த பெண் அமர்ந்து இருந்த இடத்தின் மீது தண்ணீர் ஊற்றினார் அந்த கடைகாரர். தண்ணீர் ஊற்றினால் அவர்கள் அமர மாட்டார்கள் என்று இப்படி செய்துள்ளார். அதோடு நிற்காமல் அந்த கடைக்காரர்.. மிக கடுமையான வார்த்தைகள் மூலம் அந்த பெண்ணை திட்டி உள்ளார்.
வாதம் செய்த பெண்: அந்த கடைக்காரரை பார்த்து பெண்.. ஏன் தண்ணீர் ஊற்றினீங்க? இது என்ன உங்க இடமா? நான் கடைக்குள் வந்து உட்கார்ந்தேனா? வெளியில் பஸ் ஸ்டாண்டில்தான் உட்கார்ந்தேன். அது உங்க இடமா .. எதுக்கு தண்ணீர் ஊற்றினீங்க? என்று கோபமாக கேட்டுள்ளார்.
அதற்கு பதில் சொன்ன கடைக்காரர்.. அப்படித்தான் ஊற்றுவேன். என்ன செய்வாய்.. இது என் இடம்தான்... 10 லட்சம் கொடுத்து கடையை லீசுக்கு எடுத்து இருக்கேன். இந்த இடமும் எனக்குத்தான் சொந்தம். அப்படித்தான் தண்ணீர் ஊற்றுவேன். உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என்று கூறியுள்ளார்.
சண்டை: இதையடுத்து அந்த பெண்.. அதுக்கு தண்ணீர் ஊற்றுவீங்களா? இந்த இடம் எல்லாம் மக்கள் அமரத்தானே கட்டி கொடுத்து இருக்கிறார்கள். அப்படி இருக்க எப்படி தண்ணீர் ஊற்றலாம். என்னங்க கொடுமை இது என்று கேட்டுள்ளார்.
இதற்கு அந்த கடைக்காரர் தகாத வார்த்தைகளால் அந்த பெண்ணை பேசி உள்ளார். அதோடு இல்லாமல்.. போடி போ.. போய் போலீஸ் கிட்ட புகார் கொடு. உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ. எனக்கு கவலை இல்லை. யாரை பார்த்தும் பயம் இல்லை என்று திமிராக பேசி உள்ளார். அதோடு சில கெட்ட வார்த்தைகளையும் கடுமையாக உபயோகித்துள்ளார்.
வீடியோ வைரல்: திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள நடைபாதையில் பேருந்துக்காக காத்திருந்த பெண் மீது தண்ணீர் ஊற்றி விரட்டிய உரிமையாளரின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இணையம் முழுக்க இந்த வீடியோ பெரிய அளவில் டிரெண்டானது.

இதையடுத்து திருப்பூர் மாநகராட்சி நிர்வாகிகள் அங்கே அதிரடியாக களமிறங்கி அந்த கடைக்கு சீல் வைத்தனர். கடையின் கவுண்டர் வெளியே நடைமேடையில் இருந்துள்ளது, கடையின் சேர், போர்டுகள் வெளியே நடைமேடையில் இருந்துள்ளது. மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடைபாதையை ஆக்கிரமித்து கடை வைத்துக் கொண்டு அராஜகம் செய்வதாக கடைக்கு சீல் வைத்து, கடையின் உரிமத்தை ரத்து செய்து தாம்பரம் மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதோடு அருகில் இருந்த கடைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் அங்கிருந்து எடுக்கப்பட்டது. மொத்தமாக பேருந்து நிலையம் முழுக்க ரெய்டு மேற்கொள்ளப்பட்டு ஆக்கிரமிப்புகள் எல்லாம் உடனுக்குடன் அகற்றப்பட்டது. அங்கே இருக்கும் கடைக்காரர்கள் அடாவடியாக செயல்படுவதாக புகார் வைக்கப்பட்ட நிலையில் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி உள்ளனர்.












Click it and Unblock the Notifications