எம்.ஜி.ஆர் பாடலை பாடி முதல்வர் ஸ்டாலினை பாராட்டிய தி.மு.க எம்.எல்.ஏ.. ரசித்து கேட்ட உறுப்பினர்கள்!
சென்னை: தமிழக சட்டசபையில் திருவள்ளூர் திமுக எம்.எல்.ஏ. ராஜேந்திரன், எம்.ஜி.ஆர் பாடலை பாடி முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டி பேசினார். தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது.
நேற்று தமிழக சட்டசபையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை (குடிசைப்பகுதி மாற்று வாரியம்) மீதான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
பல்வேறு உறுப்பினர்கள் கேட்ட கேள்விக்கு குடிசை மாற்று வாரிய துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பதில் அளித்து பேசினார். இந்த நிலையில் கோரிக்கை ஒன்றை முன்வைத்து பேசிய திருவள்ளூர் திமுக எம்.எல்.ஏ. ராஜேந்திரன் முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டி பேசினார்.

ஆளுங்கட்சி அனுமதி கொடுக்காது
அப்போது அவர் கூறியதாவது:- இந்த அவையில் நானும் கடந்த 5 வருடங்களாக சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன். அப்போது எதிர்க்கட்சி தலைவராக எங்களின் தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் வரிசையில் அமர்ந்திருப்பார். அப்போது எந்த கேள்வியை எழுப்பினாலும் ஆளுங்கட்சி அதற்கு அனுமதி கொடுக்காது.

செங்கோட்டையன் பாராட்டினார்
இன்று எதிர்க்கட்சி உறுப்பினர் செங்கோட்டையன் '' இது கண்ணியமான சபை, சிறப்பாக இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது என்று சொல்கிறார். இதை விட இந்த ஆட்சிக்கு வேறு என்ன சாட்சி வேண்டும். கேரளா உள்பட பல்வேறு மாநிலங்கள் தமிழகத்தை உற்று நோக்குகின்றன. ''தமிழக அரசின் கஜானா காலியாக இருக்கிறேதே.. பட்ஜெட்டில் ஏராளமான திட்டங்களை வெளியிட்டுள்ளனர். இவர்களுக்கு எப்படி இது சாத்தியமானது'' என்று அந்த மாநிலங்கள் ஆச்சரியப்பட்டு நிற்கிறது. இந்தியாவே திரும்பி பார்க்க வைத்த ஒரு முதல்வர்தான், நமது முதல்வர் மு.க.ஸ்டாலின்' என்று திருவள்ளூர் திமுக எம்.எல்.ஏ. ராஜேந்திரன் பேசினார்.

எம்.ஜி.ஆர் பாடல்
தொடர்ந்து பேசிய ' ராஜேந்திரன், 'மாபெரும் சபையினில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும். ஒரு மாசு குறையாத மன்னவன் இவன் என்று போற்றிப் புகழ வேண்டும்'' இந்த பாடலை கவிஞர் கண்ணதாசன், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்காக பாடினார். ஆனால் இந்த பாடல் நமது தமிழக முதல்வருக்காக பாடிய மாதிரி இன்று நல்ல ஆட்சி, நல்ல நிலைமை உருவாகி இருக்கிறது. எதிர்கட்சி தலைவர் ஓ.பி.எஸ் மட்டுமில்லாது. அனைத்து மாநிலங்களின் தலைவர்களும் முதல்வர் ஸ்டாலினை பாராட்டி வருகின்றனர்'' என்று அவர் கூறினார்.

மு.க.ஸ்டாலின் கண்டிப்பு
''தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் என்னை பற்றி புகழ்ந்து பேசுவதை குறைத்துக் கொள்ள வேண்டும். இதை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தி.மு.க எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டிப்புடன் கூறி இருந்தார். ஆனால் முதல்வரின் கண்டிப்பையும் மீறி திருவள்ளூர் திமுக எம்.எல்.ஏ. ராஜேந்திரன் பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications