நடிகை சாந்தினியிடம் "அபார்ஷன்" வரை போனாரா திருவள்ளூர் தவெக வேட்பாளர் அருண்குமார்? இவர் யார் தெரியுமா
சென்னை: திருவள்ளூர் தேர்தல் களம் இப்போது ஒரு தனிநபர் புகாரால் செம சூடாகியிருக்கிறது.. தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் டாக்டர் அருண்குமார் மீது நடிகை சாந்தினி வீசியுள்ள "கருக்கலைப்பு" புகார், தொகுதி முழுக்க காட்டுத்தீ போல பரவி வருகிறது.. ஏற்கனவே முன்னாள் அமைச்சர் மணிகண்டன் விவகாரத்தில் சிக்கிய அதே சாந்தினி, இப்போது அந்தப் பழைய வழக்கை ஒரு வேட்பாளரோடு முடிச்சுப் போட்டிருப்பது தவெக தலைமைக்கும் ஒரு பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.. நேற்றைய தினம் விஜய் பிரச்சாரம் செய்த நிலையில் இப்படியொரு சர்ச்சை வெடித்துள்ளது. திருவள்ளூரில் என்ன தான் நடக்கிறது?
தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் நேரத்தில், திருவள்ளூர் தொகுதி இப்போது தமிழக அரசியலில் ஹாட் டாபிக் ஆகியிருக்கிறது.. இதற்குக் காரணம், அங்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அருண்குமார் மீது நடிகை சாந்தினி கிளப்பியுள்ள ஒரு பழைய விவகாரம்தான்..

நடிகை சாந்தினிக்கும், முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனுக்கும் இடையிலான மோதல் 2021-லேயே ஊர் அறிந்தது.. அப்போது மணிகண்டன் மீது ஏகப்பட்ட புகார்களை அடுக்கிய சாந்தினி, தன்னைத் திருமணம் செய்வதாகச் சொல்லி ஏமாற்றியதோடு மட்டுமல்லாமல், கட்டாயப்படுத்திச் சிலமுறை கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.
நடிகை சாந்தினி
அந்தச் சட்டவிரோதக் கருக்கலைப்புக்கு உடந்தையாக இருந்த "முக்கியக் குற்றவாளி" இப்போதைய தவெக வேட்பாளர் அருண்குமார்தான் என்பதுதான் சாந்தினியின் தற்போதைய நேரடி அட்டாக்..
சமூக வலைதளத்தில் இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சாந்தினி, " நாடோடிகள் படத்தில் நடித்த நடிகை சாந்தினி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொலியில் கூறியுள்ளதாவது:
திருவள்ளூர் தொகுதி தவெக வேட்பாளர் அருண்குமார் தன்னை மருத்துவர் எனச் சொல்லிக்கொள்கிறார். ஆனால், அது எந்த அளவுக்கு உண்மை என்று எனக்கு தெரியவில்லை. கடந்த 2021ம் ஆண்டு முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது என்னை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றியது தொடர்பாக புகார் அளித்திருந்தேன். அந்த புகாரில் சட்டவிரோத கருக்கலைப்பு செய்ய வைத்தார் என்ற புகாரும் அளித்திருந்தேன்.
திருவள்ளூர் தவெக வேட்பாளர் அருண்குமார்
அதில், இந்த தவெக வேட்பாளர், மருத்துவர் அருண்குமார் தான் முக்கியக் குற்றவாளி. தவெக பெண்கள் பாதுகாப்பு எனக் கூறுகிறார்கள். ஆனால், இவரால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை,
பெண்களுக்கு ஆபத்தானவர் இவர். இந்த அருண்குமாரைப் போல மகாப்பாவி, கெட்டவன் உலகத்தில் இருக்க முடியாது. அதனால், மக்களே உங்கள் ஓட்டு மிகவும் முக்கியம். பெண்கள் இந்த வேட்பாளர்களுக்கு ஓட்டுப் போடுவதற்கு முன்பு கொஞ்சம் யோசியுங்கள். தவெக வேட்பாளார் அருணுக்கு தயவு செய்து வாக்களிக்க வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூந்தமல்லி தொகுதியில் போட்டியிடும் பிரகாசம் என்பவர் மீது, அதே கட்சியை சேர்ந்த பெண் நிர்வாகி பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்..
கணவருடன் வந்து சம்பந்தப்பட்ட பெண் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் கொடுத்த நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நேரம் பார்த்து பொய் புகார் அளித்துள்ளதாக பிரகாசம் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது..
ஆனால், பாலியல் சீண்டல் குறித்து கட்சித் தலைமையிடம் 6 மாதங்களுக்கு முன்பே புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக அப்பெண் கூறியிருந்தார்..
பெண்கள் பாதுகாப்பு கட்சி?
மாற்றத்திற்கான கட்சி, பெண்களின் பாதுகாப்புக்கான கட்சி என்று கூறிக்கொள்ளும் விஜய், பெண்கள் பாதுகாப்பு குறித்து பக்கம் பக்கமாக பேசும் விஜய், இதை பற்றியெல்லாம் கண்டுக்கொள்ள மாட்டாரா? என்று இணையத்தில் கேள்விகள் சரமாரி எழுந்ததும் நினைவிருக்கலாம்..
இப்போது மீண்டும் தவெக கட்சியில் மற்றொரு பாலியல் புகர் கிளம்பி உள்ளது.. "மக்களே ஓட்டுப் போடுவதற்கு முன்னாடி ஒருமுறை யோசிங்க, இவரைப் போன்றவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்" என நடிகை சாந்தினி வைத்துள்ள கோரிக்கையும், தற்போது தொகுதி மக்களைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது..
தவெகவுக்கு பின்னடைவு
சாந்தினியின் இந்த வீடியோ வாக்குமூலம் தேர்தல் நேரத்தில் அருண்குமாருக்குப் பெரிய பின்னடைவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.. குறிப்பாக, பெண் வாக்காளர்களின் மனநிலை இதனால் மாறக்கூடும் என்பதால் மற்ற அரசியல் கட்சிகளும் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளன.
எப்போதுமே, புதிய அரசியல் பாதையைத் தேடி வரும் இளைஞர்களுக்கு மத்தியில், இதுபோன்ற புகார்கள் ஒருவிதமான தயக்கத்தை ஏற்படுத்துவது இயல்பான விஷயமே.
தவெகவுக்கு இதுதான் நல்லது
ஒரு கட்சித் தலைவராக விஜய் இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறார் என்பது ஒருபுறம் இருந்தாலும், ஒரு வேட்பாளரைத் தேர்வு செய்யும் முன்னரே அவரது பின்னணியை சரியாக ஆய்வு செய்ய வேண்டியது ஒரு கட்சியின் அடிப்படைப் பொறுப்பு என்பதை இங்கு நாம் பதிவு செய்ய வேண்டி உள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் "அரசியல் சதி" என்று சொன்னாலும், மீண்டும் மீண்டும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதை ஒருபோதும் ஏற்க முடியாது.. வெறும் பேச்சுடன் நின்றுவிடாமல், செயலில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த நேரத்தில் விஜய்க்கும், தவெக-விற்கும் நல்லது.. தேர்தல் களம் இந்தக் குற்றச்சாட்டுகளை எப்படிப் பார்க்கிறது என்பதை மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கைதான் சொல்லும்.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!!












Click it and Unblock the Notifications