திருவள்ளூரில் பூட்டிய வீடுகளில் கொள்ளை.. சொந்த ஊரில் ஒரு கோடியில் சொகுசு வீடு.. பாஜக நிர்வாகி கைது
சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பூட்டிய வீடுகளில் இரவில் புகுந்து கொள்ளையடித்து தலைமறைவான மேற்கு மாவட்ட பாஜக இளைஞரணி துணைத்தலைவர் பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் ரூ.51 லட்சம் மதிப்புள்ள 85 சவரன் உருக்கிய தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பூட்டிய வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக பூட்டிய வீடுகளில் இரவில் புகுந்து கொள்ளையடித்ததாக திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக இளைஞரணி துணைத்தலைவர் பிரபாகரன் மீது புகார் எழுந்தது.

இந்த விவகாரத்தில் விசாரணை நடத்திய போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.51 லட்சம் மதிப்புள்ள 85 சவரன் உருக்கிய தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் பிரபாகரன், கொள்ளையடித்த பணத்தில் ஒரு கோடி மதிப்பில் தனது கிராமத்தில் சொகுசு வீடு கட்டியுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.இதுபற்றியும் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முன்னதாக கடந்த ஒரு மாதம் முன்பு இதேபோல் பாஜக நிர்வாகி ஒருவர் வழிபறி செய்ததாக வேலூர் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார்.வேலூர் மாவட்டம், வேலூர் மாவட்ட பாஜக இளைஞரணி தலைவராக இருப்பவர் கிளி என்கிற சதீஷ் (34) ர் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக வழக்குகள் உள்ளது . அரக்கோணம் பகுதியில் கொலை வழக்கு தொடர்பாக இவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம், அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவர் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, சதீஷ் வழிமறித்து கத்தியைக் காட்டி, பணம் கேட்டு மிரட்டி ஆபாசமாகப் பேசி வழிப்பறியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது, இது தொடர்பாக பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் வழிபறியில் பாதிக்கப்பட்ட விஜய் என்பவர் கடந்த மாதம் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின் அடிப்படையில், பள்ளிகொண்டா போலீசார் சதீஷ் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அதேபோல், வேலூர் மாவட்டம், வெள்ளக்கல் மேடு அருகே காங்கேயநல்லூரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரை கடந்த மாதம் இரண்டு நபர்கள் வழிமறித்து கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டினர். உடனடியாக அருகிலிருந்தவர்கள் இருவரையும் பிடித்து வைத்து காட்பாடி போலீசுக்கு தகவல் அளித்தனர். இத்தகவலறிந்து விரைந்து வந்த காட்பாடி காவல் நிலைய போலீசார் இருவரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், இருவரும் விருதம்பட்டு டி.கே.புரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் நவீன்குமார் என்பதும், இதில் ராஜேஷ் பாஜக தொழில்நுட்ப பிரிவில் மாவட்டச் செயலாளராக இருப்பதும், நவீன்குமார் பாஜகவின் இளைஞர் அணி மாவட்ட பொறுப்பாளராக இருப்பதும் அப்போது தெரியவந்தது.












Click it and Unblock the Notifications