திருவண்ணாமலைக்கு போறீங்களா? 300 + 300 = ஆக மொத்தம் 600.. தமிழக அரசு தரும் சர்ப்ரைஸ்.. குஷியில் மக்கள்
சென்னை: திருவண்ணாமலை கிரிவலத்தை பக்தர்கள் எதிர்பார்த்து வரும்நிலையில், ரயில்வேயுடன் சேர்ந்து, அரசு போக்குவரத்து கழகமும் சர்ப்ரைஸ் தந்துள்ளது.
ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும், லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம்.. அந்தவகையில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாளை 28ம் தேதி ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம் மற்றும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற போகிறது...

இதற்காக, தமிழ்நாடு மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரண்டு வரப்போகிறார்கள்.. எனவே, பௌா்ணமி கிரிவலத்தையொட்டி பக்தா்களின் வசதிக்காகவே, ரயில்வே நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருக்கிறது.
திருவண்ணாமலை: அந்தவகையில், சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு நாளை 28, 29ம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.. அதாவது, "இன்று சனிக்கிழமை, நாளை ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்களிலும் பௌர்ணமி கிரிவலத்தையொட்டி பக்தா்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிா்க்கும் வகையிலும் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு அக்டோபர் 28, 29 தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
வரும் 28 ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில், நள்ளிரவு 12.05க்கு திருவண்ணாமலைக்குச் சென்றடைகிறது. அதேபோல, திருவண்ணாமலையில் இருந்து அக்டோபர் 29 ஆம் தேதி அதிகாலை 3.45 மணிக்கு புறப்படும் ரயில் சென்னை கடற்கரையை 9.05 மணிக்கு சென்றடையும்" என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுபோலவே, போக்குவரத்து கழகமும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்களை இயக்குவதாக அறிவித்திருக்கிறது. இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் உள்ளதாவது:
தமிழ்நாடு: "28, 29-ந்தேதி (சனி, ஞாயிற்றுக்கிழமை) ஆகிய விடுமுறை நாட்களை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி, தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை தினசரி இயக்கக்கூடிய பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
600 பஸ்கள்: சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை (இன்று) தினசரி இயக்கக்கூடிய பஸ்களுடன் கூடுதலாக 300 சிறப்பு பஸ்களும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து அதாவது கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூருவில் இருந்து பிற இடங்களுக்கும் 300 சிறப்பு பஸ்களும் ஆக மொத்தம் 600 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி 28-ந்தேதி (நாளை) திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு சென்னை, சேலம், கோவை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
முன்பதிவு: மேலும், ஞாயிற்றுக்கிழமையன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் பயணம் மேற்கொள்வதற்கு இதுவரை 10,834 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை மட்டும் 10,874 பேர் முன்பதிவு செய்துள்ளனர்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications