சும்மா இருக்க மாட்டோம்.. ஜிகே வாசன் மீதே அவதூறா? அமைச்சர் தமோ அன்பரசன் மீது கொந்தளித்த தமாக யுவராஜா
"1996 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அரசியல் முகவரி கொடுத்தவர் மறைந்த மக்கள் தலைவர் ஐயா மூப்பனார் அவர்கள் என்பதை திமுகவினர் மறந்து விடக்கூடாது."
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனை விமர்சித்து பேசிய அமைச்சர் த மோ அன்பரசனுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி தலைவர் யுவராஜா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது, "அண்மையில் சென்னை குன்றத்தூர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக சிறு, குறு தொழில் துறை அமைச்சர் த.மோ.அன்பரசன் அவர்கள் முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஐயா ஜிகே வாசன் அவர்கள் பற்றி அவதூறாக பேசியுள்ளார்.
இதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். இந்திய திருநாட்டின் இரு மாபெரும் பிரதமர்களை உருவாக்கிய காலம் சென்ற தலைவர் ஐயா மூப்பனார் அவர்கள் மறைவுக்கு பிறகு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களால் ஒருமனதாக கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் எங்களின் ஒப்பற்ற தலைவர் ஐயா ஜி.கே.வாசன் அவர்கள்.

வாசனை அரசியலில் சேர்க்காத மூப்பனார்
காலம் சென்ற மாபெரும் தலைவர் ஐயா மூப்பனார் அவர்கள் உயிரோடு உள்ளவரை தனது புதல்வர் ஐயா ஜி.கே வாசன் அவர்களை அரசியலில் நிழல் கூட படாமல் அரசியலுக்கு அப்பாற்பட்டு வைத்திருந்தவர். ஆனால் குடும்ப அரசியலே கட்சியின் கொள்கை என மன்னர் ஆட்சி போல் வாரிசு அரசியலை ஊக்குவிக்கும் திமுகவினருக்கு தலைவர் ஐயா வாசன் அவர்களைப் பற்றி பேச அருகதை இல்லை.

எங்கள் தலைவர் பற்றி பேசுவதா?
உங்கள் முதல்வர் எப்படி எல்லாம் பதவிக்கு வந்தார்கள்? அவர் வழிவந்த திரு உதயநிதி அவர்கள் எப்படி பதவிக்கு வந்தார்கள்? என்பதை நாடே அறியும் அதை நாங்கள் சொல்ல வேண்டியதில்லை. அப்பா முதல்வர் மகன் துணை முதல்வர் மற்றொரு மகன் மத்திய மந்திரி மகள் நாடாளுமன்ற எம்பி மருமகன் மத்திய மந்திரி என்று தன் குடும்பத்துக்கே கட்சியை தாரை வார்த்த நீங்களா எங்கள் தலைவரைப் பற்றி பேசுவது?

ஊழல் குற்றச்சாட்டு
கக்கன், காமராஜர், மூப்பனார் வழியில் பத்தாண்டு காலம் மத்தியிலே அமைச்சராக பதவி வகித்த எங்கள் தலைவர் மீது ஏதாவது ஒரு ஊழல் குற்றச்சாட்டு உங்களால் வைக்க முடியுமா? ஆனால் உங்கள் இயக்கத்தில் மத்தியிலே பதவி வகித்த அமைச்சர்கள் அப்படியா? இப்போது தமிழகத்தில் ஆட்சியா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது?

போதை கலாச்சாரம்
தமிழகம் போதைப் பொருள்களின் கூடாரமாகவும், ரவுடிகளின் ராஜ்ஜியமாகவும், கொலைகளின் களமாகவும் உள்ளது. மக்களுக்கு ஏதாவது நல்லது செய்வதை விட்டுவிட்டு எப்படி எல்லாம் ஊழல் செய்யலாம்? எப்படி எல்லாம் பணம் சம்பாதிக்கலாம்? என்ற நோக்கில் ஆட்சி அதிகாரம் நடந்து கொண்டிருக்கிறது?

சட்டம் ஒழுங்கு பிரச்சனை
தினமும் நாளேடுகளை பார்த்தால் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போதைப் பொருள் கடத்தல் என்ற செய்திகள் வந்த வண்ணமே உள்ளது. வாரிசு அரசியல் பற்றி பேச உங்களுக்கு அருகதையே இல்லை உங்கள் தலைவர் தான் அப்படி என்றால் உங்கள் தலைவரின் கீழ் உள்ள அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அத்தனை பேரும் கட்சிக்காக உழைத்தவனுக்கு பதவி கொடுத்துள்ளீர்களா?

அமைச்சர் மகன்கள்
உங்கள் வழிவந்த உங்கள் மகன்களுக்கு பதவியை தாரை வார்த்து கொடுத்துள்ளீர்கள். நீங்கள் எங்களை பற்றி பேசலாமா? ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறோம் என்கிற அகந்தையில் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என வாய்க்கு வந்தார் போல் பேசுவதும் வரலாறு தெரியாமல் பேசுவதும் நல்ல அரசியல்வாதிக்கு அழகல்ல.

சும்மா இருக்க மாட்டோம்
1996 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அரசியல் முகவரி கொடுத்தவர் மறைந்த மக்கள் தலைவர் ஐயா மூப்பனார் அவர்கள் என்பதை திமுகவினர் மறந்து விடக்கூடாது. இத்துடன் எங்கள் தலைவரை பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் மீண்டும் இது போன்ற நிகழ்வுகள் நடந்தால் நாங்கள் ஒருபோதும் சும்மா இருக்க மாட்டோம்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications