10ம் வகுப்பு தேர்வு முடிவு: வேலூருக்கு மீண்டும் கடைசி இடம்.. 2024ல் விட்ட இடத்தை பிடித்த சிவகங்கை!
சென்னை: தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தில் 2வது இடத்தை பிடித்திருந்த சிவகங்கை மாவட்டம், இம்முறை 98.31 சதவிகித தேர்ச்சியுடன் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறது. அதேபோல் கடந்த ஆண்டு கடைசி இடத்தில் இருந்த வேலூர், நடப்பாண்டிலும் கடைசி இடத்திலேயே நீடிக்கிறது.
தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டை விடவும் நடப்பாண்டு தேர்ச்சி விகிதத்தில் மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டு, அதிகரித்துள்ளனர். கடந்த ஆண்டு 91.39 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டில் 93.80 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வழக்கம் போல் மாணவர்களை விடவும் மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 95.88 சதவிகிதமும், மாணர்கள் 91.74 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனிடையே மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில் சிவகங்கை மாவட்டம் 98.31 சதவிகித தேர்ச்சியுடன் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
கடந்த ஆண்டு 97.02 சதவிகித தேர்ச்சியுடன் சிவகங்கை மாவட்டம் 2வது இடத்தை பிடித்திருந்தது. அதனை சரி செய்து இம்முறை முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறது. அதேபோல் கடந்த ஆண்டு முதலிடம் பிடித்த அரியலூர் மாவட்டம், இம்முறை 96.38 சதவிகிதத்துடன் 8வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த முறை அரியலூர் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 97.31ஆக இருந்தது. இம்முறை சரிந்துள்ளது.
அதேபோல் சென்னை 90.73 தேர்ச்சி விகிதத்துடன் 34வது இடத்தையும், செங்கல்பட்டு மாவட்டம் 89.82 தேர்ச்சி விகிதத்துடன் 35வது இடத்தையும், கள்ளக்குறிச்சி 86.91 விகிதத்துடன் 36வது இடத்தையும், வேலூர் மாவட்டம் 85.44 சதவிகித தேர்ச்சியுடன் கடைசி இடத்திலும் உள்ளது. வேலூர் மாவட்டம் கடந்த ஆண்டும் 82.07 சதவிகித தேர்ச்ச்சியுடன் கடைசி இடத்திலேயே இருந்தது.
அதுமட்டுமல்லாமல் இம்முறை ஒவ்வொரு பாடப்பிரிவிலும் 100 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. குறிப்பாக கணிதப் பாடத்தில் 1,996 மாணவர்கள் மட்டுமே 100 மார்க் எடுத்திருப்பது விவாதப்பொருளாக மாறியுள்ளது. அதேபோல் அதிகளவில் சமூக அறிவியல் பாடத்தில் மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மொத்தமாக 10,256 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications