மாற்றி யோசிக்கும் மாணவர்கள்.. காலியாகும் டாக்டர் கவர்ச்சி .. மவுசு கூடும் பிகாம் படிப்பு
சென்னை: மாணவர்களிடம் டாக்டர் படிப்புக்கான ஆர்வம் குறைந்து வருகிறது. பலரும் அதற்கு மாற்றான பாடங்களைத் தேர்ந்தெடுத்து, அதில் அதிக மதிப்பெண்களைப் பெற்று சாட்டெட் அக்கெளண்டன்ட்டாகத் திட்டமிட்டுக் காய் நகர்த்தி வருகின்றனர்.
இந்த ஆண்டு 7.72 லட்சம் பேர் ப்ளஸ் 2 தேர்வு எழுதினர். அதில், 7,19,196 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள 2478 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் மாநில அளவில் மாணவர்கள் 3,25,305 பேர் இந்த ப்ளஸ் 2 தேர்வை எழுதினர். அதைப்போல் 3,93,890 மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் தேர்வு எழுதி இருந்தார்..
இதில் மாணவர்கள் 92.37 சதவீதமும் மாணவிகள் 96.44 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 தேர்வில் ஒட்டு மொத்தமாக 94.56 சதவீதம் பேர் மாநில அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு 4.07 சதவீதம் மாணவியர் கூடுதலாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய ஒரே ஒரு மூன்றாம் பாலினத்தவரும் தேர்ச்சி பெற்றுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் 97.45 சதவீதத்துடன் முதலிடத்தையும் சிவகங்கை, ஈரோடு 97.42 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தையும் அரியலூர் 97.25 சதவீதத்துடன் 3ஆம் இடத்தையும் கோவை 96.97 சதவீதத்துடன் 4ஆம் இடத்தையும் நெல்லை, பெரம்பலூர் தலா 96.44 சதவீதத்துடன் 5ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.
இந்த ப்ளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற அனைவரும் மிகத் தெளிவாக ஒரு முடிவை எடுத்துள்ளனர். இவர்கள் யாரும் ஒருவரை ஒருவர் பார்த்துப் பேசியது கூட இல்லை. '
ஆனால், ஒரே கருத்தினை அத்தனைப் பேரும் அப்படியே பேசியுள்ளனர். அது என்ன என்கிறீர்களா? இந்த முதல் மதிப்பெண் பெற்ற யாருமே டாக்டர் ஆவதுதான் என் வாழ்நாள் கனவு. அதற்காகத்தான் தினமும் 12 மணிநேரம் படித்தேன் என்று சொல்லவில்லை. பலரும் பிகாம் படிக்கப் போவதாகவும், சாட்டெட் அக்கெளண்டன்ட்டாகத் திட்டம் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
முன்பு எல்லாம் அதிக மதிப்பெண் எடுத்துவிட்டால், அடுத்த என்ன? என்று கேட்கவே வேண்டாம். நான் டாக்டர் ஆவேன். கலெக்டர் ஆவேன் என்று வரிசையாகச் சொல்லிக் கொடுத்ததைப் போல அப்படியே அச்சு பிசகாமல் ஒப்பிப்பார்கள்.
அந்த மனநிலை இப்போது மாறி உள்ளது. அதற்குக் காரணம். 'நீட்' தேர்வுதான். அந்த 'நீட்' தேர்வு ஏற்படுத்தும் அழுத்தத்தால், பலரும் இன்று பிகாம் பக்கமும் ஆடிட்டர் ஆகப் போகிறேன் என்று புதிய ரூட்டில் பயணிக்கத் தொடங்கி உள்ளனர்.

அதற்கு முன்னால் 'ஏ' குரூப் எடுக்கும் பிள்ளைகள் அதிக மார்க் வாங்குவதுதான் மீடியாவில் ஹைலட் ஆகும். உடனே அவர்கள் அனைவரும் டாக்டர் கனவை உடனே திறந்துவிட்டு விடுவார்கள்.
ஆனால், இப்போது 'சி' குரூப் எடுக்கும் பிள்ளைகள் கூட தலைப்புச் செய்தியாகி உள்ளனர்.
குறிப்பாகச் சொல்லப் போனால் திருப்பூர் மாணவி மகாலட்சுமி. இவர் 600 மதிப்பெண்ணுக்கு 598 பெற்றுள்ளார். இவரது தந்தை மறைந்ததை அடுத்து அவரது அம்மாதான் படிக்கவைத்துள்ளார்.
கஷ்டப்பட்டுப் போராடி இந்த நிலையை அடைந்துள்ளார் மகாலட்சுமி. இவரிடம் அடுத்து என்ன படிக்கத் திட்டம் உள்ளது என்று கேட்ட அடுத்த விநாடியே ஆடிட்டர் ஆகவேண்டும் என்பதே லட்சியம் எனச் சொல்கிறார்.
அதே மாதிரி புதுச்சேரியில் ஸ்ரேயா மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார். அதாவது 600க்கு 592 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவரும் பிகாம் படிக்கப் போகிறேன் என்கிறார். அடுத்து ஐஐஎம்சியில் எம்பிஏ படிக்க முயற்சி செய்யப் போவதாகக் கூறியுள்ளார்.

புதுச்சேரியில் இன்னொரு மாணவி வித்தியாசமாக ஹெச்ஆர் படிக்கப் போகிறேன் எனக் கூறியுள்ளார்.
பூங்கோதை என்ற மாணவி அரசுப் பள்ளியில் படித்தவர். இவர் சென்னை பெரம்பூரில் உள்ள பள்ளியில் படித்துள்ளார். இவர் பெற்ற மதிப்பெண் என்னத் தெரியுமா? 578.
ஒட்டுமொத்த மாநகராட்சி அரசுப் பள்ளிகளில் இவர் முதல் மாணவி. வறுமையில் பிடியில் வாழும் மாணவி. அப்பா ஆட்டோ டிரைவர். ஆனாலும், அவர் கஷ்டப்பட்டுப் படித்து வென்று காட்டி உள்ளார்.
இவரது நுனிநாக்கில் ஆங்கிலம் தாண்டவமாடுகிறது. இவரும் பிகாம் படிக்கப் போவதாகச் சொல்லி இருக்கிறார். அடுத்து சாட்டெட் அக்கெளண்டன்ட் ஆவதுதான் கனவு என்றும் கூறியுள்ளார்.
நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளான மாணவர் செல்லத்துரை. நான்குமாதங்கள் தீவிர சிகிச்சையிலிருந்து உயிர் மீண்ட இவர், இந்த ஆண்டு ப்ளஸ் டூ தேர்வில் 469 மார்க் எடுத்துள்ளார்.

அடுத்து என்ன? என்றால், பி.காம் முடித்துவிட்டு சிஏ படிக்கப் போகிறேன் என்கிறார்.
இதைப்போலவே கோவையை சேர்ந்த ஏஞ்சல் ஹோனா 2 பாடப்பிரிவுகளில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.
மொத்த மதிப்பெண் 588. அடுத்து பிகாம் படிக்க உள்ளதாகவும் சாட்டெட் அக்கவுண்டன்ட் படிக்க விரும்புவதாகவும் கூறி, இவரும் அதே வரிசையில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
இந்த ஆண்டு தேர்வு எழுதிய ஒரே ஒரு திருநங்கை மாணவி நிவேதா மட்டும் டாக்டர் கனவை வெளிப்படுத்தி உள்ளார். கூடவே 'நீட்' தேர்வையும் எழுதி உள்ளதாகக் கூறியுள்ளார்.
அதில் நல்ல மதிப்பெண் பெறுவேன் என்று கூறியுள்ள அவர், தனக்கு ஆதரவு இல்லை என்பதால் பண உதவி செய்ய யாரேனும் முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
பல மாணவர்களும் மருத்துவப் படிப்பு என்ற கனவிலிருந்து லேசாக வெளியேறி வருகின்றனர். ப்ளஸ் டூ சேரும் போதே ஃபர்ஸ்ட் குரூப் எடுத்து, அடுத்து டாக்டர் அல்லது பொறியியல் எனப் போவதைத் தவிர்த்து வருகின்றனர்.
அதற்கு முழுக் காரணம் 'நீட்'. அதற்காகப் பல லட்சங்களைச் செலவழித்து கோசிங் கிளாஸ் சென்று டாக்டர் ஆவது என்பது மிகப்பெரிய மன அழுத்தம் தரும் காரியமாக மாறி உள்ளது.
கூடவே 10 லட்சம் வரை மிகப் பெரிய தொகையைச் செலவழிக்க வேண்டி உள்ளது. அப்படி செலவழித்தாலும் அதில் உத்தரவாதம் மிகமிகக் குறைவாகவே உள்ளது.
அதைப்போலத்தான் பொறியியல் படிப்புகளும். வீதிக்கு 100 பேர் பொறியியல் படித்துவிட்டு, உரிய வேலை கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.
அதைப் புரிந்து கொண்ட பல பொறியியல் கல்லூரிகள் இந்த ஆண்டு முதல் மாணவர்களைக் கவர 'ஏஐ' சார்ந்த படிப்புகளை அறிமுகம் செய்யத் தொடங்கி உள்ளது. அதில் கொடுமை என்னவென்றால், ஏஐ தொழில்நுட்பம் அறிந்த பேராசிரியர்களே தமிழ்நாட்டில் மிகமிகக் குறைவு.
நிலைமை இப்படி உள்ளபோது, ஏஐ பற்றித் தெரியாத ஆசிரியர்களிடம் பாடம் கற்றும் மாணவர்களில் நிலை என்ன ஆகும் என்று ஜப்பான் போன்ற நாடுகளில் ஐடி துறையில் பணியாற்றி அனுபவம் பெற்ற எழுத்தாளர் வா. மணிகண்டன் என்பவர் ஃபேஸ்புக்கில் கேள்வி எழுப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications