"விளம்பர ஆட்சியில் ஒரு டிரில்லியன் பொய்கள்".. எடப்பாடி பழனிசாமி தாக்கு!
சென்னை: தமிழ்நாடு இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை பெற்றுள்ள நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். இந்நிலையில், இது ஏமாற்று வேலை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி திமுக மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நிர்வாகத் திறனற்ற விடியா திமுக ஆட்சியில் உண்மையில் தமிழகம் பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளதா? தமிழக மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளதா? ஸ்டாலின் விளம்பர ஆட்சியில் ஒரு டிரில்லியன் பொய்கள்.

போட்டோஷூட்
போட்டோசூட் நடத்தி, பெயர் வைப்பதில் சாதனை புரிந்துவரும் விடியா திமுக அரசு. 'இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி பெற்ற மாநிலம் தமிழ் நாடு' என்று ஒரு புதிய புரளியைக் கிளப்பிவிட்டு விளம்பரம் தேடுகிறது. மக்களைப் பற்றி கவலைப்படாமல், மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யாமல், மக்களுக்கு வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் கொடுக்காமல் வெற்று விளம்பரம் செய்யும் திறனற்ற அரசு என்று திமுகவை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறோம். இதனை நிரூபிக்கும் வகையில் விடியா அரசு மீண்டும் ஒரு பொய்யைச் சொல்லி வருகிறது.
பொருளாதார புள்ளி விபரங்கள் எல்லாம் ஒரு குறியீடு மட்டும்தான். பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்கள் பல கட்டங்களாக வெளியிடப்படுகின்றன. முதல் முன்கூட்டிய மதிப்பீடு, இரண்டாம் முன்கூட்டிய மதிப்பீடு, தற்காலிக மதிப்பீடு, முதல் திருத்தப்பட்ட மதிப்பீடு, இரண்டாம் திருத்தப்பட்ட மதிப்பீடு, மூன்றாம் திருத்தப்பட்ட மதிப்பீடு என ஆறு கட்டங்களாக வெளியிடப்பட்டு, அதன் பிறகே இறுதி மதிப்பீடு வெளியாகும். இந்த புள்ளிவிவரங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறக்கூடியவை.
வெறும் குறியீடு தான்
பொருளாதார வளர்ச்சியோ, அதன் அடிப்படையில் மதிப்பிடப்படும் தனிநபர் வருமானமோ ஒரு குறியீடுதானே தவிர, அது மக்களின் உண்மையான வாழ்க்கைத் தரத்தைக் காட்டும் அளவுகோலாக கருத முடியாது. எனவே, உண்மையை ஸ்டாலின் அரசு உணர்ந்து, வெற்று விளம்பரங்களைத் தவிர்த்து மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டும்.
கடந்த 17.3.2025 அன்று தமிழ்நாட்டின் வளர்ச்சி 2024-25 ஆண்டுக்கு 9.69% என கணிக்கப்பட்டது. ஆனால், 1.8.2025 கணிப்பில் இது 11.19% ஆக உயர்ந்துள்ளது. உடனே திமுக அரசு, "இரட்டை இலக்க வளர்ச்சி பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு" என்று கூறி விளம்பரம் செய்கிறது. ஆனால், இந்தக் கணிப்பு இறுதியானது அல்ல. இது அடுத்தடுத்த கணிப்புகளில் மாறலாம்.
ரகசியம் அவர்களுக்கு மட்டுமே தெரியும்
2022-23 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் வளர்ச்சி 17.3.2025 கணிப்பின்படி 8.13% ஆக இருந்தது. ஆனால், 1.8.2025 கணிப்பில் இது 6.17% ஆக குறைந்துவிட்டது. இதுதான் 2022-23 க்கான இறுதி மதிப்பீடு. இந்த ஆண்டு வளர்ச்சி விகிதம் ஏற்கனவே செய்த மதிப்பீட்டை விட குறைந்து போனது பற்றி திமுக அரசு எதுவும் பேசவில்லை.
திமுக அரசுக்கு சாதகமான புள்ளிவிவரம் வந்தவுடன், 2030-ல் தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டிவிடும் என்று பொய்யாக பெருமை பேசுகிறார்கள். திமுக அரசு பொய் பேசி மக்களை ஏமாற்றுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் தெரியும் என்பது போல் ஒரு டிரில்லியன் பொருளாதார ரகசியம் அவர்களுக்கு மட்டுமே தெரியும்.
லஞ்ச லாவண்யம்
நீர் ஆதாரங்கள் பராமரிக்கப்படாதால், உண்மையில், விவசாயிகள் கண்ணீர் சிந்தி வருகின்றனர், விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலை இல்லை. கிராமந்தோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலையின்றி பரிதவிக்கின்றனர். நெசவாளர், மீனவர் என்று யாருமே நிம்மதியாக இல்லை. எல்லா இடங்களிலும் லஞ்ச, லாவண்யம் புரையோடி இருக்கிறது.
விலைவாசி உயர்வு அதிகரித்துள்ளது. சாலை வசதிகள், குடிநீர் வசதிகள், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் தவிக்கிறார்கள். அரசு ஊழியர்கள் வெறுப்பின் விளிம்பில் உள்ளனர். தமிழகம் முழுக்க இந்த அரசுக்கு எதிரான ஒரு வெறுப்பு அலை வீசுவதை, என் பயணத்தில் கண் எதிரே காண முடிகிறது. சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுக் கிடப்பதையும், திமுக-வின் ரவுடிப் பட்டாளத்தின் அட்டூழியத்தைக் கண்டும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். பொய் சொல்லி விளம்பர சூட்டிங் நடத்தும் திமுக ஆட்சிக்கு விடை கொடுக்க மக்கள் தயாராகிவிட்டார்கள்.
அடித்தளம் போட்டது அதிமுக
கட்டுமானத் துறை வளர்ச்சிக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மெட்ரோ ரயில், சாலைகள், நீர்ப் பாசனத் திட்டங்கள் போன்றவையே காரணம். எனவே திமுக பெருமை பீற்றிக் கொள்வதற்கு இதில் எதுவுமே இல்லை. ஆனாலும், தமிழ் நாடு இந்திய அளவில் உள்ள ராணி வளர்ச்சியைவிட, எப்போதுமே அதிக வளர்ச்சி பெற்று வருகிறது. குறுகிய காலத்தில் இந்த வளர்ச்சியைப் பெற முடியாது. அதற்கு அடித்தளம் போட்டது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரக, அதனாலேயே தமிழ் நாடு சரிவில்லாமல் வளர்ச்சி பெறுகிறது.
எனவே, பொருளாதார வளர்ச்சியோ, அதன் அடிப்படையில் மதிப்பிடப்படும் தனிநபர் வருமானமா ஒரு குறியீடுதானே தவிர, அது மக்களின் உண்மையான வாழ்க்கைத் தரத்தைக் காட்டும் அளவுகோலாக கருத முடியாது. எனவே, உண்மையை ஸ்டாலின் அரசு உணர்ந்து, வெற்று விளம்பரங்களைத் தவிர்த்து மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டும். இதைச் சொன்னால்கூட திமுக ஜால்ராக்கள், நாம் பொறாமையில் கூறுவதாகச் சொல்வார்கள். ஆனால், உண்மையை மக்களுக்கு உரக்கச் சொல்ல வேண்டியது நமது கடமை" எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications