பம்புசெட்டுகளை இனி போனிலேயே இயக்கலாம்! தேனீ வளர்ப்புக்கு ரூ.8 கோடி நிதி! பட்ஜெட் முழு விவரம் இதோ!
சென்னை: தேனீ வளர்ப்பை ஊக்குவிக்க ரூ.8 கோடியே 58 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதாக தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் விவசாயிகள் பம்பு செட்டுகளை இனி போனிலேயே இயக்கும் வகையில் தானியங்கி கட்டுப்படுத்தும் கருவிகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட இந்த இரண்டு அறிவிப்புகளுமே தமிழக வேளாண் பட்ஜெட்டில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக பார்க்கப்படுகிறது.
சட்டப்பேரவையில் இது தொடர்பாக வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆற்றிய உரையின் விவரம் பின்வருமாறு;

தேனீ வளர்ப்பு
நூற்றுக்கணக்கான மலர்களில் உழைத்து ஒரு சொட்டுத்தேனை உற்பத்தி செய்து உழைப்பின் உன்னதத்தை உணர்த்தும் சுறுசுறுப்பிற்கு சொந்தக்காரர்கள் தேனீக்கள். மலர்களில் மகரந்த சேர்க்கை செய்ய தேனீக்கள் தூதுவர்களாகச் செயல்படுபவை. தேனீக்கள் வளர்ப்பதினால் தேன் உற்பத்தி அதிகரிக்கும், பயிர் உற்பத்தியும் பெருகும். விவசாயிகளின் வருமானமும் உயரும். இதனைக் கருத்தில் கொண்டு, 37 தேனீ தொகுப்புகள் (Cluster based) எட்டு கோடியே 58 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய மாநில அரசு நிதியில் அமைக்கப்படும்.

ஊரக வாழ்வாதாரம்
தரமான தேனீ குடும்பங்கள், உபகரணங்கள் உற்பத்தி செய்யும் மையங்கள் அமைத்துத்தர உதவி செய்யப்படும். இதன் மூலம் புதிய தொழில் முனைவோர்கள் உருவாக்கப்படுவார்கள். பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நோக்கத்தில், இத்திட்டம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, ஊரக வளர்ச்சித் துறை, கதர் துறையோடு இணைந்து செயல்படுத்தப்படும். மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 2022-23 ஆம் ஆண்டில் சுய உதவிக் குழுக்களின் வருமானத்தை உயர்த்தும் வகையில், மூன்றாயிரத்து 350 தேனீ தொகுப்புகள்
ஒரு கோடியே 67 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்

பம்புசெட்டுகள் இயக்கம்
விவசாயிகள் இரவு நேரங்களில் வயல்களுக்கு நேரில் சென்று பம்புசெட்டுகளை இயக்கும் பொழுது ஏற்படும் பாம்புக்கடி, காயமடைதல் போன்ற இடர்பாடுகளைத் தவிர்க்கும் பொருட்டும், விவசாயியின் பாசன வயலிலுள்ள கிணறுகளில் அமைக்கப்பட்டுள்ள பம்புசெட்டுகளைத் தொலைவில் இருந்து கைபேசியின் மூலம் இயக்கிடும் வகையிலும் கைபேசியால் இயங்கும் தானியங்கி பம்புசெட்டு கட்டுப்படுத்தும் கருவிகள், 50 சதவீத மானிய அடிப்படையில் அதிகபட்சமாக ஐந்தாயிரம் ரூபாய் மானியத்தில் வழங்க 2022-23 ஆம் நிதியாண்டில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலுள்ள மூன்று ஆயிரம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் ஒன்றிய, மாநில அரசு நிதி வழங்கப்படும்.
Recommended Video

மோட்டார்களுக்கு மானியம்
மண்ணில் உண்டியல் போல சேமித்த மழைநீரை குழாய்க் கிணறு, ஆழ்துளைக் கிணறு, திறந்தவெளி கிணறு ஆகியவற்றிலிருந்து பாசனத்திற்கு இறைப்பதற்காக விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு, புதிய மின்மோட்டார் பம்புசெட்டுகள் வாங்கவும், திறன் குறைந்த பழைய மின்மோட்டார் பம்புசெட்டுகளை மாற்றி புதிய மின் மோட்டார் பம்புசெட்டுகள் பொருத்தவும் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகளின் தேவையின் அடிப்படையில் 5,000 விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதிய மின்மோட்டார் பம்பு செட்டுகள் வாங்குவதற்கு ஒரு மின்மோட்டார் பம்பு செட்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் மானியம் வீதம் மொத்தம் ஐந்து கோடி ரூபாய் 2022-23 ஆம் ஆண்டில் ஒன்றிய, மாநில அரசு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும்.


Click it and Unblock the Notifications
