வேளாண் பட்ஜெட் 2025: விவசாய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் MRK பன்னீர்செல்வம்!
சென்னை: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உள்ளார். குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு.. கூட்டுறவு வங்கிகளில் பெற்ற விவசாய கடன் தள்ளுபடி.. போன்ற அறிவிப்புகள் வெளியாகுமா என விவசாயிகள் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.
நேற்று (மார்ச் 14) 2025-26 நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார். அடுத்த 2 ஆண்டுகளில், 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு கணினி அல்லது மடிக்கணினி வழங்க ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதேபோல, பெற்றோர் இருவரையும் இழந்த 50,000 குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகின.

அதனை தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 15) 2025-26 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்ட்டுள்ளது. வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று காலை 9.30 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர், வேளாண்மைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் வேளாண்மைக்கு தனியாக தாக்கல் செய்யப்பட்டுள்ள 5வது பட்ஜெட் இது.
இந்த பட்ஜெட்டில், வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் உள்ளது. தேர்தல் வாக்குறுதியின் போது அளித்த நகைக்கடன் தள்ளுபடி முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டும் நிலையில், கடன் தள்ளுபடி முழுமையாக வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
கடந்த 2024-25ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டில், விவசாயிகளின் நலனை முன்னிலைப்படுத்தி பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று தாக்கல் செய்யப்படும் வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான பல்வேறு நலத்திட்டங்கள், புதிய திட்டங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது திமுக விவசாயிகளுக்கு பல வாக்குறுதிகளை அற்வித்தது. குறிப்பாக நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.2500 ஆகவும், கரும்புக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை ரூ.4000 ஆகவும் உயர்த்தப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். ஆனால், அந்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்த பட்ஜெட்டிலாவது அதற்கான அறிவிப்புகள் வெளியாகுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
வரும் திங்கட்கிழமை (மார்ச் 17) முதல் வெள்ளிக்கிழமை (மார்ச் 21) வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் மீதான விவாதம் நிறைவடைந்த பின்னர், மார்ச் 24ஆம் தேதி முதல் துறை ரீதியான மானிய கோரிக்கை விவாதம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்யும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம், மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடம் ஆகிய இடங்களில் மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து, சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், "விவசாயத்துடன் உழவர்களின் நலனை மையப்படுத்தி வேளாண் பட்ஜெட் 2025 தயாரிக்கப்பட்டுள்ளது. உழவர்களின் வாழ்வில் இந்த நிதி நிலை அறிக்கை வளர்ச்சியை கூட்டும் என்று நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications