புதுக்கோட்டை கொடூரம்: பள்ளி பிள்ளைகளுக்கு பாதுகாப்பில்லை! அன்பில் மகேஷை பதவி விலக சொல்லும் அண்ணாமலை!
சென்னை: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே அரசுப் பள்ளியில், மாணவிகள் 7 பேருக்குப் பாலியல் தொல்லை அளித்த பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளில் அதிகரிக்கும் பாலியல் தொல்லை சம்பவங்களுக்கு பொறுப்பேற்று உடனடியாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதவியிலிருந்து அன்பில் மகேஷ் விலக வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
புதுக்கோட்டை அருகே அரசு பள்ளி ஒன்றில் 350-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர் அங்கு உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றும் பெருமாள் என்பவர் தலைமை ஆசிரியர் பொறுப்பையும் கவனித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பெருமாள் தங்களுக்கு பாலியல் தொல்லை தருவதாக அங்கு படிக்கும் மாணவிகள் சிலர் குழந்தைகள் பாதுகாப்பு குழும அதிகாரிகளிடம் தொலைபேசி வாயிலாக புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து அங்கு அதிகாரிகளும் காவல்துறையினரும் தனித்தனியாக மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.
அதில் உதவி தலைமை ஆசிரியர் பெருமாள் தங்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஏழு மாணவிகள் கூறினர். இதை அடுத்து அவர்களது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட நிலையில் வழக்கு பதிவு செய்த திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பெருமாளை கைது செய்தனர். அவர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம், போக்சோ உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், உடனடியாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதவியிலிருந்து அன்பில் மகேஷ் விலக வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன பதிவில்," புதுக்கோட்டை மாவட்டம் அரசுப் பள்ளியில், மாணவிகள் 7 பேருக்குப் பாலியல் தொல்லை அளித்த பள்ளி உதவித் தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டிருக்கிறார். தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும், தொடர்ந்து பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.
பள்ளிகளில் மாணவ மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்ய, ஆலோசனைக் குழுக்கள் அமைப்பதாகச் சொல்லி மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. எந்தப் பள்ளிகளிலும் இந்தக் குழுக்கள் செயல்பாட்டில் இல்லை என்பதையே, தொடர்ந்து பள்ளி மாணவிகள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாவது காட்டுகிறது. குழந்தைகள் பாதுகாப்புக்கான தேசிய அவசர உதவி எண் 1098க்கு அழைத்ததால் மட்டுமே, தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
பள்ளி செல்லும் நமது பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதில், திமுக அரசு முற்றிலுமாகத் தோல்வி அடைந்து விட்டது. இத்தனை தொடர் குற்றங்களுக்குப் பிறகும், பள்ளி மாணவ, மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனியும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் அமைச்சராகத் தொடரத் தகுதியோ, தார்மீக உரிமையோ இல்லை.
உடனடியாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதவியிலிருந்து, திரு. அன்பில் மகேஷ் விலக வேண்டும். முதலமைச்சர் உடனடியாக, பள்ளிக் கல்வித் துறைக்குத் திறமையான, குழந்தைகள் நலனில் அக்கறை கொண்ட வேறு ஒருவரை அமைச்சராக நியமித்து, பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications