தருமபுர ஆதீனம்- பல்லக்கு தூக்க தடை நீக்கம்- இடையூறு செய்யும் தீய சக்திகளை தடுப்போம்: அண்ணாமலை ட்வீட்
சென்னை: தமிழக மக்களின் ஆதங்கத்தை உணர்ந்து தருமபுர ஆதீனம் பட்டினப் பிரவேசத்தில் பல்லக்குத் தூக்க விதிக்கப்பட்ட தடை நீங்கவுள்ளதாக அறிந்தேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்றுள்ளார்.
Recommended Video
தமிழக ஆதீனங்கள் சிலவற்றில் பட்டினப் பிரவேசம் என்கிற நிகழ்ச்சி முன்னர் நடைபெற்றது. சுமார் 50 ஆண்டுகளாக இந்த பட்டினப் பிரவேச நிகழ்ச்சி நிறுத்தப்பட்டிருந்தது. ஆதீனங்களின் மடாதிபதிகளை பல்லக்கில் சக மனிதர்கள் சுமந்து செல்வதுதான் பட்டினப் பிரவேசம். இது ஜனநாயகத்துக்கும் மனித உரிமைகளுக்கும் விரோதமானது என்பதால் திராவிடர் இயக்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் இத்தகைய இந்த நூற்றாண்டுக்கு ஒவ்வாத பட்டினப் பிரவேச நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது இல்லை.

தடைவிதித்த தமிழக அரசு
ஆனால் திடீரென தருமபுர ஆதீனம் வரும் 22-ந் தேதி பட்டினப் பிரவேச நிகழ்ச்சி நடத்தப் போவதாக அறிவித்தார். இதற்கு தி.க, பெரியார் தி.க. உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து இப்பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடை விதித்தது. இந்த தடை மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது.

அமைச்சர்களுக்கு மிரட்டல்
தமிழக அரசுக்கு எதிராக ஆதீனங்கள் கருத்துகள் தெரிவித்தனர். இதன் உச்சகட்டமாக மன்னார்குடி ஜீயர், தமிழக அமைச்சர்கள் சாலைகளில் நடமாடவே முடியாது என கொலை மிரட்டல் விடுத்தார். இதனைத் தொடர்ந்து சட்டசபையில் விளக்கம் அளித்த அமைச்சர் சேகர் பாபு, இந்த விவகாரத்தில் சுமூக முடிவு எட்டப்படும் என கூறியிருந்தார்.

முதல்வருடன் ஆதீனங்கள் சந்திப்பு
இந்நிலையில் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை குன்றக்குடி அடிகளார், பேரூர் சாந்தலிங்க அடிகளார் உள்ளிட்டோர் நேற்று சந்தித்தனர். திமுக ஆட்சியின் முதலாண்டு நிறைவையொட்டி வாழ்த்து தெரிவித்ததாக ஆதீனங்கள் செய்தியாளர்களிடம் கூறினர். இன்று மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்த தருமபுர ஆதீனம், பட்டினப் பிரவேச நிகழ்ச்சியை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகள் செய்துவிட்டோம். ஆகையால் இந்த ஆண்டு பட்டினப் பிரவேச நிகழ்ச்சியை நடத்த முதல்வர் அனுமதி அளித்துள்ளார். இதன்பின்னர் அனைத்து தரப்பும் உட்கார்ந்து பேசி முடிவெடுப்போம் என்றார்.

அண்ணாமலை ட்வீட்
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: தமிழக மக்களின் ஆதங்கத்தை உணர்ந்து தருமபுர ஆதீனம் பட்டினப் பிரவேசத்தில் பல்லக்குத் தூக்க விதிக்கப்பட்ட தடை நீங்கவுள்ளதாக அறிந்தேன். தமிழக மக்களின் குரலாகவும், அவர்களின் கோரிக்கைக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் @BJP4TamilNadu என்றும் மக்களோடு இருக்கும். மேலும், இந்த விழாவில் தீயசக்திகளால் எந்தவித இடையூறும் ஏற்படாமல் இருக்க பாஜக துணை நிற்கும். சிஷ்யர்களில் ஒருவனாக இந்த விழாவில் நானும் பங்கேற்பேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications