"டிடிவி தினகரன் எங்களுடன் தான் இருக்கிறார்.. அதில் சந்தேகமே வேண்டாம்": நயினார் நாகேந்திரன் பேட்டி
நெல்லை: "டிடிவி தினகரன், நாடாளுமன்றத் தேர்தலில் தொடங்கி இன்று வரை எங்களோடு தான் இருந்து வருகிறார். தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் அங்கம் வகிக்கிறார். சந்தேகமே வேண்டாம்" என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.
2024 லோக்சபா தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட்ட நிலையில், பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக தொண்டர்கள் மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இணைந்தது போட்டியிட்டனர். அதிமுக கூட்டணியும், பாஜக கூட்டணியும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. பாஜக கூட்டணியில் தனி சின்னத்தில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வமும் தோல்வி அடைந்தார்.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. மேலும், தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிடும் என்றும், 2026ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்றும் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா கூறி வருகிறார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக தொண்டர்கள் மீட்புக்குழுவின் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக டிடிவி தினகரன் இடம்பெறுவார்களா என்ற கேள்வி எழுந்த நிலையில், இருவரும் தங்கள் கூட்டணியில்தான் இருக்கின்றனர் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்தார்.
அதேசமயம், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. தமிழகம் வருகை தந்த பிரதமர் மோடியை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் விருப்பம் தெரிவித்த நிலையில், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது ஓபிஎஸ் தரப்பை கொந்தளிக்கச் செய்தது. ஓபிஎஸ் ஆதரவாளார்கள், பாஜகவை கடுமையாக விமர்சித்துப் பேசி வருகின்றனர்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், "2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக வந்தால் தான், நாட்டிற்கு பாதுகாப்பு என்பதால் நிபந்தனையின்றி ஆதரவு தெரிவித்தோம். தற்போது என்டிஏ கூட்டணியில் உள்ளோமா இல்லையா என்பது குறித்து நயினார் நாகேந்திரன் பதில் அளித்தால் எங்களுக்கும் நன்றாக இருக்கும்" என கூறினார்.
இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இதுதொடர்பாக இன்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், "அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஏற்கனவே லோக்சபா தேர்தலில் எங்களோடு கூட்டணியில் இருந்து இன்று வரை எங்கள் கூட்டணியில் தான் இருக்கிறார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் அங்கம் வகிக்கிறார். அவர் கூட்டணியில் தொடர்கிறார், சந்தேகமே வேண்டாம். லோக்சபா தேர்தல் முடிந்த பிறகு அதிமுக உடன் கூட்டணியை ஏற்படுத்தினோம். திமுகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைப்பதே எங்களின் நோக்கம்.
திமுக ஆட்சி மீது மக்கள் 100% வெறுப்போடு இருப்பது கண்கூடாகத் தெரிகிறது. முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அமெரிக்கா, ஐரோப்பா என எல்லா நாடுகளுக்கும் போய் வந்திருக்கிறார். வெளிநாடு சென்றது, முதலீடுகள் வந்தது குறித்து வெள்ளை அறிக்கை கேட்டிருந்தேன். இதுவரை வரவில்லை. வெள்ளை அறிக்கை வராது, வெற்று அறிக்கை தான் வரும். வழக்கம்போல போய்விட்டு சும்மாதான் வருவார்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications