வேல் யாத்திரைக்கும் கூட்டம்.. பாஜகவுக்கு 234 தொகுதியிலும் முதல் முறையாக பூத் ஏஜெண்டுகள் கன்பார்ம்!
சென்னை: தமிழகத்தில் பாஜக தடையை மீறி நடத்தும் வேல் யாத்திரைக்கும் எதிர்பார்க்காத கூட்டம் கூடுவதால் அந்த கட்சியினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனால் முதல் முறையாக தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் பாஜகவுக்கு 234 தொகுதிகளிலும் பூத் ஏஜெண்டுகள் நியமிக்கப்படுவது உறுதியாகிவிட்டதாகவும் பூரிப்பில் உள்ளனர் அந்த கட்சித் தலைவர்கள்.
தமிழகத்தில் 2001 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற போது 4 இடங்களில் வென்றது பாஜக. 19 ஆண்டுகளாக தமிழக சட்டசபையில் பாஜகவுக்கு இடமே இல்லை. இதனால் இம்முறை எப்படியாவது 5 முதல் 10 சீட்டுகளில் வென்றுவிட வேண்டும் என்பதில் பாஜக முனைப்புடன் உள்ளது.
இடையில் திமுக- அதிமுக இல்லாமல் தனித்து எல்லாம் பாஜக போட்டியிட்டது. ஆனால் கூட்டணிகள் மூலம் கிடைத்த பெருமிதத்துக்குரிய சொற்ப வாக்கு வங்கியும் சரிந்து போனது.

அதிமுக கூட்டணியில் பாஜக
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவை விடாமல் இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கிறது பாஜக. அதிமுக விரும்பாத சூழ்நிலையிலும்கூட எப்படியாவது தமிழகத்தில் காலூன்றிவிட முடியாதா? என்பதற்காக பகீரத பிரயத்தனத்துடன் அந்த கட்சியின் கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பதாக பாஜகவே சொல்லி வருகிறது.

பாஜகவின் வேல் யாத்திரை
இந்த நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் தடையை மீறி வேல் யாத்திரையை பாஜக தலைவர் எல். முருகன் நடத்தி வருகிறார். ஒவ்வொரு ஊரிலும் வேல் யாத்திரை நடத்துவதும் போலீசார் கைது செய்து விடுவிப்பதும் தொடர் நிகழ்வாகி வருகிறது. ஆனால் கடந்த காலங்களை ஒப்பிடுகையில் பாஜகவின் வேல்யாத்திரைக்கு சற்று கூட்டம் அதிகமாக இருக்கிறது.

கூட்டம் கூடுவது ஏன்?
இது பாஜக தலைவர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக விசாரித்த போது, தமிழகத்தில் ஏராளமான இந்து அமைப்புகள் உள்ளன. ஊருக்கு 5 அல்லது 10 பேருடன் கூட சில இந்து அமைப்புகள் இருக்கவும் செய்கின்றன. வேல் யாத்திரையில் முதலில் இந்து அமைப்புகளை ஒருங்கிணைப்பதை பாஜக முதன்மையான பணியாக மேற்கொண்டது. இதனால் ஆன்மீக நகரங்களில் பாஜகவுக்கு சற்று கூட்டம் அதிகமாக இருந்தது என்கின்றனர்.

பாஜக பூத் ஏஜெண்டுகள்
கடந்த கால தேர்தல்களில் அனைத்து பூத்துகளில் திமுக- அதிமுக கட்சிகளுக்கு கட்டாயம் பூத் ஏஜெண்டுகள் இருப்பார்கள். இந்த கட்சிகள் பூத் ஏஜெண்டுகளை வைத்து பல்வேறு வியூக நிகழ்ச்சிகளையும் நடத்தும். ஆனால் தமிழக பாஜகவுக்கு 234 தொகுதிகளிலும் பூத் ஏஜெண்டுகள் என்பது சிரமமாகவே இருந்தது. வேல் யாத்திரைக்கான கூட்டத்தை கணக்கில் வைத்து இந்த முறை அந்த பூத் ஏஜெண்டுகள் பற்றாக்குறை சரியாகிவிடும் என நிம்மதி அடைகின்றனர் பாஜக தலைவர்கள்.












Click it and Unblock the Notifications