"2 பேர்".. கரையேறுமா பாஜக.. காப்பாற்றுவார்களா புதிய தலைவர்கள்.. முன்னுள்ள சவால்கள்..!
வரப்போகும் எம்பி தேர்தலுக்கு தமிழக பாஜக இப்போதே தயாராகி வருகிறது
சென்னை: அடுத்தடுத்த தேர்தல்கள் வர உள்ள நிலையில், தமிழக பாஜகவின் செயல்பாடுகள் தற்சமயம் எப்படி உள்ளன? அதிமுகவுடன் கூட்டணி தொடர்ந்தாலும், பாஜக இறுதியில் கரையேறுமா? தாமரை மலர்ந்தே விடுமா? என்பன போன்ற எதிர்பார்ப்புகள் கிளம்பி உள்ளன.
இப்போதைக்கு பாஜக அதிமுக கூட்டணியில் தான் உள்ளது.. கூட்டணியில் தொடர்வோம் என்றுதான் பொன்.ராதா முதல் எல்.முருகன் வரை அனைவருமே சொல்லி கொண்டிருக்கிறார்கள்.. ஆனாலும், இக்கட்சிகளுக்குள் இணக்கமான போக்கு உள்ளதா? இல்லையா? என்பதையே கண்டுபிடிக்க முடியவில்லை.
தமிழக மக்களை பொறுத்தவரை பாஜக மீது நிறைய அதிருப்தியில் உள்ளனர்.. எஸ்.பி.வேலுமணி மீதான லஞ்ச ஒழிப்பு ரெய்டை பாஜக எதிர்த்ததாகட்டும், கொடநாடு விவகாரத்தில் விசாரணையை எதிர்ப்பதாகட்டும், மத்திய அரசின் திட்டங்களை ஆதரிப்பதாகட்டும், பெட்ரோல் டீசல், கேஸ் விலையை பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பதாகட்டும், இப்படி எத்தனையோ விஷயங்களில் மக்களுக்கு கோபம் உள்ளது.

மத்திய அரசு
இதுவரை நமக்கு வர வேண்டிய நிலுவை தொகையை, மத்திய அரசிடம் இருந்து தமிழக பாஜகவால் கேட்டு வாங்கி தரமுடியவில்லை.. பெட்ரோல் டீசல் விலைக்கு கடந்த ஒரு வருடமாகவே மக்கள் புலம்பி வந்த நிலையில் அதை பற்றியும் மத்திய அரசிடம் பேசவே இல்லை.. அவ்வளவு ஏன், தமிழகம் நலம் சார்ந்த எந்த விஷயத்தையும் பிரத்யேகமாக எடுத்து கேள்வி கேட்டதே இல்லை.. இதற்காக டெல்லிக்கு சென்று அழுத்தமும் தந்ததில்லை.. இதெல்லாம் சேர்ந்துதான் தமிழக மக்களுக்கு பாஜக மீது கோபம் இருந்து வருகிறது.

அணுகுமுறை
இப்படிப்பட்ட சூழலில்தான், தன்னுடைய அணுகுமுறையை பாஜக லேசாக மாற்றி கொள்ள ஆரம்பித்துள்ளது.. அதன்படி, மாநில அரசுக்கு எதிராக பெட்ரோல் டீசல் விலை குறைக்க கோருவது, நீட்டுக்கு ஆதரவு போன்ற நடவடிக்கைகளை பாஜக கையில் எடுத்துள்ளது..

திட்டம்
பொதுவாக தேசிய கட்சிகளுக்கு ஒரு சிக்கல் உள்ளது... மத்திய அரசின் திட்டங்கள் எதுவானாலும், அதை கண்மூடித்தனமாக ஆதரித்தே ஆகும் என்பது கட்டாயம்,.. இதற்கு பாஜகவும் விதிவிலக்கல்ல.. அதே நேரம் மாநில அரசின் மக்கள் நல திட்டங்களை எதிர்ப்பதும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டிப்பது பாஜகவின் வளர்ச்சிக்கு உதவுமா என்பது மில்லியன் டாலர் கேள்வியே.

ஊழல்
ஏனெனில் ஊழலற்ற ஆட்சியை தருவோம் என்று சொல்லிதான் பிரச்சாரம் செய்து, பாஜக 7 வருஷத்துக்கு முன்பு பதவியில் அமர்ந்தது.. அதற்கேற்றபடி, டிடிவி முதல் ப.சிதம்பரம் வரை, சமயம் பார்த்து அவர்களை சிறையில் தள்ளி, நாங்கள் ஊழலுக்கு எதிரானவர்கள் என்ற பிம்பத்தையும் மக்களிடம் பெற்றுவிட்டது..

மேலிடம்
மேலும் ஊழல் என்ற விவகாரத்தில் படுஜாக்கிரதையாகவும் காய்களை நகர்த்தியது.. ஜெயலலிதாவுக்கு நினைவு மெரீனாவில் மண்டபம் திறப்பு விழாவுக்குகூட டெல்லி மேலிடம் யாருமே கலந்து கொள்ளவில்லை.. இத்தனைக்கும் எடப்பாடி அப்போது நேரிலேயே சென்று, மேலிடத்துக்கு அழைப்பு விடுத்தார்.. ஆனாலும், ஏ1 குற்றவாளி என்று கருதப்பட்டவர் விழாவில் கலந்து கொள்வதை நாசூக்காக பாஜக தவிர்த்ததையும் இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது.. அந்த அளவுக்கு ஊழல் விஷயத்தில் பாஜக நடந்து கொண்டு வந்த நிலையில், இன்று வேலுமணி ரெய்டுக்கு முட்டுக்கொடுப்பதன் காரணம் தெரியவில்லை..!

கொங்குநாடு
அதேபோல, மாநில அரசின் மக்கள் நல திட்டங்களை எதிர்ப்பது என்பது பாஜகவுக்கு பின்னடைவைதான் பெற்றுதரும்.. இப்படித்தான் தேவையில்லாமல் "கொங்குநாடு" விவகாரத்தை 2 மாதங்களுக்கு முன்பு கிளப்பினார்கள்.. "எங்கள் உரிமைகள் பறிக்கப்படுகின்றன, தனி நாடு தேவை" என்று 10 வருடம் ஆட்சி செய்த, அதிலும் கூட்டணி கட்சியான அதிமுகவை விட்டுவிட்டு, பதவிக்கு வந்து ஒரு மாசமான திமுக அரசு மீது குற்றஞ்சாட்டினார்கள்.. ஆனால், மக்கள் தெளிவாக இருந்ததால், "தனிநாடு" விவகாரம் பிசுபிசுத்துவிட்டது.

தோல்வி
இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் பாஜக கையில் எடுத்து, இறுதியில் அதில் தோற்று போயும் உட்கார்ந்து விடுகிறது.. எனினும் புதிதாக பொறுப்பேற்றுள்ள அண்ணாமலையின் வருகை, அக்கட்சியில் சில மாறுதல்களை பெற்று தரும் என்று நம்பப்படுகிறது.. அரசியலில் ஜூனியர் என்றாலும், அவரது பேச்சுக்களை சாதாரணமாக எடுத்து கொண்டு கடந்து விட முடியாது.. பல சீனியர்கள் காத்திருப்பு பட்டியலில் இருந்த நிலையில், இளைஞர் ஒருவரை தலைவராக பாஜக தலைமை நியமித்துள்ளது என்றால் அதற்கு காரணம் இல்லாமல் இருக்காது..!

அறிக்கை
அண்ணாமலை மாநில தலைவராக பதவியேற்றதுமே, ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.. அதில், "பிரதமர் மோடி, தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள அன்பை, ஒவ்வொரு வீட்டிலும் கொண்டு சேர்ப்பேன்" என்று கூறியிருந்தார்.. வழக்கமாக, கட்சி தலைவர்கள் யார் பதவியேற்றாலும், தங்கள் கட்சியின் கொள்கைகளை அனைவரிடமும் கொண்டு சென்று சேர்க்க பாடுபடுவேன் என்றுதான் சொல்வார்கள்.. ஆனால், அண்ணாமலையின் வித்தியாசமான அணுகுமுறையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது. இனி, தமிழகத்தில் பாஜகவை வளர்க்க அவர் இனி என்னென்ன வியூகங்களை மேற்கொள்ள உள்ளார் என்ற எதிர்பார்ப்பும் கட்சிக்குள் எகிறி உள்ளது...!

கட்சி வளர்ச்சி
அதேபோல, எல்.முருகனின் வியூகமும் எந்த அளவுக்கு பாஜகவுக்கு உதவபோகிறது என்று தெரியவில்லை.. இவர் ஒருத்தர்தான் கட்சியின் ஒரே மத்திய இணை அமைச்சர்.. முருகன் மாநில தலைவராக இருந்த போதிருந்துதான், தமிழக பாஜக ஓரளவு நிமிர தொடங்கியது எனலாம்.. நிறைய விஐபிக்களை கட்சிக்குள் கொண்டு வந்தார்..

குஷ்பு
குக செல்வம் முதல் குஷ்பு வரை பாஜக பக்கம் சாய்ந்த பெருமை முருகனுக்கு உண்டு.. மேலும் நடந்து முடிந்த தேர்தலில் வேல் யாத்திரை உள்ளிட்ட சில முக்கிய நிகழ்வுகளை தமிழகத்தின் பக்கம் திரும்ப பார்க்க வைத்தவர்.. இது அக்கட்சியின் பலத்தை பெருக்க ஓரளவு கை கொடுத்தது.. இப்போதும் இன்னொரு மக்கள் யாத்திரையில் கவனம் செலுத்தி வருகிறார்.. இப்படி புதுபுது முயற்சிகளை தன் பங்குக்கு முருகன் கையில் எடுத்தாலும், அது ஒர்க் அவுட் ஆகுமா என்பதும் போக போகத்தான் நமக்கு தெரியும்.

2 பேர்
எப்படி பார்த்தாலும் நிறைய பலகீனங்கள் கட்சிக்குள் உள்ள நிலையில், புதிதாக கவர்ச்சிகரமான தலைவர்கள் இல்லாத நிலையில் ஜூனியர் தலைவர்களான எல்.முருகன், அண்ணாமலை என்ற 2 பேரை மட்டுமே வைத்து மட்டும் பாஜக கரையேற முடியாது... ஆக, தமிழக மக்கள் மனங்களை கொள்ளை கொள்ளும் வகையில் மக்கள் நலன் சார்ந்த விஷயங்களை கையில் எடுத்தால் மட்டுமே ஓரளவு பலன் தரும் என்பதே கடந்த கால வரலாறுகள் நமக்கு சொல்லும் பாடம்.












Click it and Unblock the Notifications