கட்சி சொன்னால் லோக்சபா தேர்தலில் எந்த தொகுதியிலும் போட்டியிடுவேன்.. திடீரென முடிவை மாற்றிய அண்ணாமலை!
சென்னை: லோக்சபா தேர்தலில் டெல்லி மேலிடம் போட்டியிட சொன்னால் தாம் போட்டியிடுவேன் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் தாம் போட்டியிடப் போவது இல்லை; தமக்கு கட்சிப் பணிகள் இருக்கின்றன என இடைவிடாமல் கூறி வந்தவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. ஆனால் அண்ணாமலையின் இந்த நிலைப்பாட்டை டெல்லி மேலிடம் ஏற்கவில்லை என கூறப்பட்டது.

டெல்லி மேலிடம் திடீர் உத்தரவு: டெல்லி பாஜக மேலிடம் அறிவிக்க இருக்கும் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் அண்ணாமலையின் பெயரும் இடம் பெற்றுள்ளது; கரூர் அல்லது கோவை லோக்சபா தொகுதியில் அண்ணாமலையை போட்டியிட டெல்லி மேலிடம் உத்தரவிட்டுள்ளது என ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.
கட்சி உத்தரவிட்டால் செய்வேன்: இது தொடர்பாக அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அண்ணாமலை அளித்த பதில்: எந்த ஒரு தொகுதிக்கும் இதுவரை நான் அதிக நேரம் கொடுக்கவில்லை. 39 லோக்சபா தொகுதிகளுக்கும்தான் அதிக நேரம் நான் செலவிட்டுள்ளேன். ஒருவேளை நாளை இதை செய்யுங்கள் என கட்சி மேலிடம் உத்தரவிட்டால் அதை செய்யவும் தயாராக இருக்கிறேன். தெரியாத ஒரு விஷயத்தை பற்றி சொல்ல விரும்பவில்லை. எனக்கு அதைப் பற்றி யாரும் சொல்லவில்லை. அப்படி எனக்கு சொன்னார்கள் எனில் பத்திரிகையாளர்களிடம் நான் தெரிவிப்பேன்.
கட்சி கட்டளையிட்டால் போட்டி: நான் மாநில தலைவராக வேண்டும் என விரும்பியது இல்லை. எங்கள் கட்சியைப் பொறுத்தவரை அனைத்தும் மக்கள் சேவைதான். செய் என்றால் செய்யப் போகிறேன். இதில் என்னுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்பு எதுவும் கிடையாது. கட்சி போட்டியிடு என்றால் போட்டியிடப் போகிறேன். எந்த தொகுதியில் போட்டியிட சொன்னாலும் போட்டியிடப் போகிறேன். கட்சி தேர்தல் பணி செய்ய சொன்னால் தேர்தல் பணி செய்யப் போகிறேன். பிரசாரம் செய் என்றால் பிரசாரம் செய்ய போறேன். நான் கட்சியில் எனக்கு என எதுவும் கேட்கவில்லை. எனக்கு கொடுங்க என்றோ கொடுக்காதீங்க என்றோ கேட்கவில்லை. அனைத்தையும் கட்சிதான் முடிவு செய்யும்.
மோடி முடிவெடுக்கட்டும்: அடுத்த 60 நாட்களுக்கு என்னை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பாஜகவின் அகில இந்திய தலைமை குறிப்பாக பாரத பிரதமர் மோடிதான் முடிவு செய்ய வேண்டும். டெல்லியில் நேற்று இரவு 11 மணி முதல் விடியற்காலை 3.30 மணிவரை பாஜக கூட்டம் நடைபெற்றது. அதில் பலரும் அழைக்கப்பட்டதை பத்திரிகைகளில் பார்த்தேன். அதில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என எனக்கு தெரியாது. எதற்காக நடந்த கூட்டம் எனவும் எனக்கு தெரியாது. அந்த கூட்டம் பற்றி தலைவர்கள் அதிகாரப்பூர்வமாக பேசும் வரை நான் பேசுவது தெரியாது. பொதுவாக தேர்தல் குழு கூட்டங்களில் மாநில தலைவர்கள் பங்கேற்பது வழக்கம். ஆனால் நேற்றைய கூட்டத்தில் நான் பங்கேற்கவில்லை. ஆகையால் டெல்லி கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என யூகத்தில் பேசினால் சரியாக இருக்காது.
மோடி நிகழ்ச்சி: மார்ச் 4-ந் தேதி கல்பாக்கம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதனைத் தொடர்ந்து சென்னை ஒய்.எம்.சி.ஏ. பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். அந்த பொதுக் கூட்ட மேடையில் யாரெல்லாம் இருப்பார்கள் என்பதை சொல்வோம்.
எனக்கு எதுவுமே தெரியாது: தமிழ்நாட்டைப் பூர்வீகமாக கொண்டவர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், எல்.முருகன். இவர்களில் யார் தமிழ்நாட்டில் போட்டியிடுவார்கள் என எனக்கு தெரியாது? எல்.முருகன் போட்டியிடுவாரா? அண்ணாமலை போட்டியிடுவாரா? என எனக்கு தெரியாது. பொறுத்திருந்து பாருங்கள். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.












Click it and Unblock the Notifications