இளைஞர்களே ரெடியா இருங்க..4 மாதத்தில் 10,000 பேருக்கு அரசு வேலை!பட்ஜெட்டில் வெளியான பொன்னான அறிவிப்பு
சென்னை: அடுத்த 2 ஆண்டுகளில் 50,000 இளைஞர்களுக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்றும், ஜூன் மாதத்திற்குள் 10,000 பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
2024-25 ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டமன்றத்தில் வாசித்தார். பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. தொடர்ந்து தனது பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, திட்டங்களின் விரிவாக்கம் பற்றிய அறிவிப்பையும் வெளியிட்டார்.

குறிப்பாக சென்னை, கோவை, திருச்சி, சேலம், மதுரை, ஆகிய 5 மாநகராட்சிகளில் உள்ள முக்கிய இடங்களில் இலவச வைஃபை வசதி, புதுமை பெண் திட்டம் விரிவாக்கம், பள்ளி மாணவர்களுக்கும் மாதம் தோறும் ஆயிரம் வழங்கப்படும் தமிழ் புதல்வன் திட்டத்தையும் அறிவித்தார்.
அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான தமிழ் புதல்வன் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும், இதன் மூலம் 6 முதல் 12 வரை பயின்று உயர்கல்வி சேரும் மாணவர்களுக்கு ரூ. 1,000 வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று அறிவித்தா. அதேபோல் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி குறித்த அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
குடிமைப்பணித் தேர்வு: இதேபோல் நல்ல தரமான வேலைவாய்ப்புகளை இளைஞர்கள் பெற்றிடும் வகையில், அவர்களின் திறனை உயர்த்திட இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. 71 அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களை தொழில் 40 தரநிலைக்கு உயர்த்தி, 2877 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்திறன் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒன்றிய குடிமைப்பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டிலிருத்து தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரித்திட ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு, அவர்கள் முதல்நிலை தேர்வுக்குத் தயாராக மாதந்தோறும் 7,500 ரூபாய் மற்றும் முதல்நிலைத் தேர்வில் நேர்ச்சி பெறுவோருக்கு 25 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. இத்திட்டம் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கடந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
10 ஆயிரம் பணியிடங்கள்: இதேபோல், அடுத்த 2 ஆண்டுகளில் 50,000 இளைஞர்களுக்கு அரசுப் பணி வழங்கப்படும். வரும் ஜூன் மாதத்திற்குள் 10,000 பணியிடங்கள் நிரப்பப்படும். இதுவரை 60,567 இளைஞர்களுக்குப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், உலகை வெல்லும் இளைய தமிழகத்தைப் படைக்கும் உயரிய நோக்கத்தோடு நான் முதல்வன் திட்டத்தின் மூலம் இதுவரை சுமார் 28 லட்சம் மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். 18 ஆயிரம் பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கும், 20,000 கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆசிரியர்களுக்கும் உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு பயிற்சி பெற்ற மாணவர்களில் 1,19 லட்சம் மாணவர்கள் வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளார்கள் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications