ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம்.. யாரும் எதிர்பார்க்காத அறிவிப்பை வெளியிட்ட தங்கம் தென்னரசு
சென்னை: தென் தமிழ்நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கவும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி குன்றிய பகுதிகளின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்காகவும், இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் பகுதியில் புதிய விமான நிலையம் ஒன்று அமைக்கப்படும் என்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
2025 - 2026 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் தாக்கல் செய்து வருகிறார். அடுத்த ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறுவதால், இந்த பட்ஜெட்டில் ஏராளமான அறிவிப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே பல்வேறு முக்கிய அறிவிப்புகளை தங்கம் தென்னரசு அறிவித்து வருகிறார்.

இதில் தென் தமிழ்நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு விமான நிலையங்களின் பங்கு குறிப்பிடத்தக்கது என்பதை நன்கு உணர்ந்த இந்த அரசு, சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் தூத்துக்குடி விமான நிலையங்களின் விரிவாக்கத்திற்கு உரிய நிலங்களைக் கையகப்படுத்தி, 2,938 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு வழங்கியுள்ளது. மேலும், சேலம் விமான நிலையத்திற்கென 350 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னைக்கு அருகே பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், தென் தமிழ்நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கவும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி குன்றிய பகுதிகளின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்காகவும், இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் பகுதியில் புதிய விமான நிலையம் ஒன்று அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications