விடியல் பயணத்தில் 881 கோடி முறை பெண்கள் பயணம்.. இடைக்கால பட்ஜெட்டில் தங்கம் தென்னரசு சொன்ன டேட்டா!
சென்னை: தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் விடியல் பயணத் திட்டம் மூலமாக பெண்கள் 881 கோடி முறை பயணம் செய்துள்ளார்கள் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். பிரசவத்தின் போது உயிரிழப்பு தேசிய சராசரியை விடவும் தமிழ்நாட்டில் மிகவும் குறைவாக உள்ளதாக கூறிய தங்கம் தென்னரசு, மகளிரை தொழில் முனைவோராக மாற்ற அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறியுள்ளார்.
2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ளதால், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. திமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் கடைசி பட்ஜெட் இது என்பதால், நிச்சயமாக சில சர்ப்ரைஸ்கள் இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.

அதில் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் இந்தியாவுக்கே முன்னோடி திட்டமாக உள்ளது. பிற மாநிலங்களும் பின்பற்றுவது தான் இந்த திட்டத்தின் மிகப்பெரிய வெற்றியாகும். 3 மணி நேரத்தில் 1.31 கோடி மகளிருக்கு தலா ரூ.5 ஆயிரம் செலுத்திய போது தமிழ்நாடே இன்ப அதிர்ச்சியில் உறைந்துபோனது.
ஒரே நாளில் ரூ.6,500 கோடி நிதியை ஏழை, எளிய மக்களின் கைகளில் கிடைக்க செய்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி. அதேபோல் விடியல் பேருந்து திட்டத்தில் 881 கோடி முறை மகளிர் பயணம் செய்து பயனடைந்துள்ளனர். அதேபோல் 6 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.40 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 19 தோழி விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல் மகளிர் நலன் காக்கும் இத்தகையை திட்டங்களை பல மாநிலங்கள் பின்பற்ற தொடங்கி உள்ளன. மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் சிசு இறப்பு விகிதம் தேசிய சாராசரியை விட தமிழ்நாட்டில் குறைவாக உள்ளது. தேசிய சராசரியை விடவும் மிகவும் குறைவாக உள்ளது. பெண் ஓதுவார் நியமனம் நமது அரசின் மகத்தான சாதனை என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications