"கிளம்பி வாங்க".. அடிச்சு தூக்கும் ஸ்டாலின்..அதிகாரிகளை கோட்டைக்கு அழைக்கும் முதல்வர்.. காரணம் இதுவா
சென்னை: தமிழக அரசின் "முத்திரை பதிக்கும் முத்தான" திட்டங்கள் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். ஏற்கனவே 5 முறை இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று 6வது முறையாக இந்த ஆலோசனை நடக்க உள்ளதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு சூழ்ந்து வருகிறது.
மக்களின் நன்மைக்காகவும், வளர்ச்சிக்காகவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. முக்கியமாக, தமிழ்நாடு அரசு மனிதவள மேம்பாடு, மக்கள் நல்வாழ்வு, சமூக நீதி, வறுமை ஒழிப்பு, தொழில் வளர்ச்சி என பல்வேறு விஷயங்களை கருத்தில்கொண்டும், அது தொடர்பான திட்டங்களை ஒவ்வொரு துறையிலும் முன்னெடுத்தும் வருகிறது.

அறிவிப்புகள்: இது தொடர்பாக நிறைய திட்டங்கள் அறிவிக்கப்பட்டும், அதுதொடர்பாக விவாதிக்கப்பட்டும் வருகிறது. அதில் ஒன்றுதான், முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள். இது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஏற்கனவே 5 முறை ஆலோசனை கூட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன..
இதில் அமைச்சர்கள், பல்வேறு அரசுதுறை அதிகாரிகள் கலந்து கொண்டு, இந்த திட்டம் குறித்து பேசி வருகிறார்கள். மொத்தம் 13 துறைகளைச் சார்ந்த நடைமுறையில் உள்ள 55 திட்டங்களின் நிலை குறித்தும், 35 எதிர்கால திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் மறுபடியும் 6-வது ஆய்வு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. தமிழக அரசின் திட்டங்கள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டுள்ளன, அனைத்து மாவட்டங்களிலும் திட்டங்களின் நிலைப்பாடுகள் குறித்தும், விரைந்து முடிக்கப்படவேண்டிய திட்டங்களை துரிதப்படுத்தும் நோக்கிலும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
இன்று ஆலோசனை: இன்றைய கூட்டத்தில், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பங்கேற்கிறார்.. இறையன்பு பணி ஓய்வு பெற்ற அன்றைய தினமே சிவ்தாஸ் மீனா தலைமை செயலாளராக பொறுப்பேற்றார். தன்னுடைய பொறுப்பை ஏற்றதுமே, அதிரடியாக பல்வேறு துறைகளில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டிருந்தார். அந்தவகையில், தமிழக அரசின் சிறப்பு திட்டங்களுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில், பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கும் திட்டத்துக்கும், இளம் பகவத் ஐஏஎஸ் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்... 1000 ரூபாய் உரிமைத்தொகை திட்டம் குறித்த அடுத்தடுத்த ஆலோசனைகளை இவர் மேற்கொண்டு வருகிறார்.. மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான சிறப்பு அதிகாரியாக இவர்தான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் ஆயிரம் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்திற்கான செயல்பாடுகளை கவனித்துக் கொள்ளும் கூடுதல் அதிகாரத்தையும் தமிழக அரசு வழங்கியுள்ளது. எனினும், புதிதாக பொறுப்பேற்றுள்ள அதிகாரிகளிடம் சிறப்பு திட்டங்களின் நோக்கம் குறித்தும், அவைகளை செயல்படுத்தும் விதம் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று விரிவாக எடுத்துரைப்பார் என்று தெரிகிறது.
எதிர்பார்ப்பு: கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த 5வது கூட்டத்தில், அரசின் திட்டங்கள் சுனாமி வேகத்தில் முடிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, முதல்வர் உரையாற்றியிருந்தார்..
"அனைத்து துறை வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு சமமான நிதி ஒதுக்கப்படுகிறது.. தமிழ்நாடு அரசின் திட்டங்கள் நாட்டின் என்ஜினாக உள்ளதாக பிரதமர் மோடியே மனமார பாராட்டியிருக்கிறார்.. அரசின் திட்டப் பணிகள் ஆமை வேகத்தில் அல்ல, சுனாமி வேகத்தில் நடைபெறும் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறோம்" என்று முதலமைச்சர் ஸ்டாலின் அன்று பெருமிதம் தெரிவித்திருந்த நிலையில், இன்றைய தின கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications