எனக்கு 70 வயசு.. என் 55 வருச வாழ்க்கையே அரசியல்தான்! எல்லாமே என் குடும்பம் - எமோசன் ஆன ஸ்டாலின்
அரசியலை அதிகாரமாக இல்லாமல், கடமையாகவும் தொண்டாகவும் சேவையாகவும் நினைக்க வைத்தவர்கள் தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரும் இனமானப் பேராசிரியர் அவர்களும்!
சென்னை: நாளை 70 வது பிறந்தநாளை கொண்டாடு தான், 55 ஆண்டுகாலம் அரசியலையே வாழ்க்கையாக அமைத்துக் கொண்டு இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டின் அனைத்துக் குடும்பங்களையும் தனது குடும்பமாக நினைத்து, மிக மிக இளமைக் காலத்திலேயே அரசியலுக்கு வந்தாகவும் அவர் கூறி உள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்து உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் ஏற்றமிகு 7 திட்டங்களின் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் தமிழ்நாடு நகராட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

காலை சிற்றுண்டி திட்டம்
குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம், திருநங்கையர்களுக்கான மாதாந்திர உதவித் தொகை ரூ.1,500 ஆக உயர்த்தப்படும் ஆணை, 500 மாநகராட்சி மற்றும் நகராட்சி பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்யும் திட்டத்தையும் முதலமைச்சர் அறிமுகம் செய்தார்.

நவீனமாகும் தூய்மை பணி
அரசுப் பணிகளில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கி, ரூ.1,136 கோடி மதிப்பில் 44 பல்வேறு மருத்துவமனை கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், சென்னை மாநகராட்சி பகுதிகளில் கழிவுநீர் அகற்றும் பணிகளை நவீனமயமாக்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

55 ஆண்டுகள் அரசியலே என் வாழ்க்கை
அந்த விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "நாளை மார்ச் 1, என்னுடைய 70-ஆவது பிறந்தநாள்! இதில் சுமார் 55 ஆண்டுகாலம் அரசியலையே எனது வாழ்க்கையாக அமைத்துக் கொண்டிருக்கிறேன். தமிழ்நாட்டின் அனைத்துக் குடும்பங்களையும் எனது குடும்பமாக நினைத்து, மிக மிக இளமைக் காலத்திலேயே அரசியலுக்கு வந்தேன்.

அரசியல் என்பது கடமை
அரசியலுக்கு வராமல் போயிருந்தால் என்னவாக ஆகியிருப்பீர்கள்?' என்று கேட்டபோது, 'அரசியலில்தான் நிச்சயம் நான் இருந்திருப்பேன்' என்று பதில் சொன்னவன் நான். அரசியல் என்பதை அதிகாரம், என்பதாக இல்லாமல், அதனைக் கடமையாகவும் தொண்டாகவும் சேவையாகவும் நினைக்க வைத்தவர்கள் தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரும் இனமானப் பேராசிரியர் அவர்களும்!

எனக்கு நானே இலக்கு
இவர்களது வழித்தடத்தில் வந்திருக்கக்கூடிய நான், கிடைக்கின்ற பொறுப்புகளின் மூலமாக மக்களுக்குச் சேவையாற்றும் இலக்குகளை எல்லாக் காலத்திலும் எனக்கு நானே வைத்துக் கொள்கிறேன். எனக்கு யாரும் இலக்கு வைக்கவில்லை. எனக்கு நானே இலக்கு வைத்துக் கொள்கிறேன். அந்த இலக்கை அடையவே எந்நாளும் உழைக்கிறேன்.

ஏழையின் சிரிப்பில்..
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்' என்பதுதான் பொதுவான இலக்கு! அதனால்தான் மக்கள் பயன்பெறக்கூடிய எண்ணற்ற திட்டங்களை தொடர்ந்து துவக்கி வைக்கிறேன். திராவிட மாடல் ஆட்சியில் 'தினந்தோறும் திட்டங்கள்' என்பதுதான் என் திட்டம்! அதாவது, தினந்தோறும் திட்டங்களைத் தீட்டுவதுதான் என்னுடைய பணி! அந்த வகையில், இந்த விழாவில் மிகமுக்கியமான ஏழு திட்டங்களைத் தொடங்கி வைப்பதில் பெருமைப்படுகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications