அடேங்கப்பா.. மு.க.ஸ்டாலினின் சூப்பர் அறிவிப்பு.. அன்லிமிடெட் ஹேப்பியில் தமிழ்நாடு விளையாட்டு வீரர்கள்
சென்னை: ஒலிம்பிக் போட்டிகளில் தங்க பதக்கம் வெல்லும் தமிழ்நாடு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.3 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை நேரு ஸ்டேடியத்தில் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான தடுப்பூசி முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.

அரசின் கடமை
அப்போது ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் 6 தமிழ்நாட்டு வீரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் ஊக்கத்தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பின்னர் பேசிய மு.க.ஸ்டாலின் கூறியதாவது:- விளையாட்டில் சாதிக்கும் வீரர்களை ஊக்குவிக்க வேண்டியது அரசின் கடமையாகும். விளையாட்டு துறையை விளையாட்டாக எடுத்துக் கொண்டால் விளையாட்டாக போய் விடும்.

கோடிகளில் பரிசு
விளையாட்டாக போய் விடக்கூடாது என்பதால்தான் விளையாட்டு துறையை மேம்படுத்த வேண்டியது அவசியம். ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வெல்லும் தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.3 கோடி பரிசு வழங்கப்படும். வெள்ளி பதக்கம் வெல்லக்கூடிய வீரர்களுக்கு ரூ.2 கோடி பரிசு வழங்கப்படும். வெண்கல பதக்கம் வெல்லக்கூடிய வீரர்களுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும்.

கிரிக்கெட் விளையாடியுள்ளேன்
வீரர்களை ஊக்குவிப்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு உடல் திறனும், மன திடமும் இருக்க வேண்டும். தமிழ்நாடு வீரர்கள் போட்டிகளில் பங்கேற்று வெற்றியோடு திரும்பி வர வேண்டும் என வாழ்த்துகிறேன் . விளையாட்டு போட்டிகள் குறித்து சிறு வயதில் இருந்தே குழந்தைகளிடம் ஊக்குவிக்க வேண்டும். நானும் பள்ளி பருவத்தில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். சென்னை மேயர், துணை முதல்வராக இருந்த போது கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

அரசுக்கு பாராட்டு
தமிழ்நாட்டில் 18,000 வீரர்களில் 10 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் மீதி உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பல்வேறு விளையாட்டு வீரர்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டு வருகின்றனர். விளையாட்டு வீரர்களுக்கு தனியே தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டதற்கு தமிழ்நாடு அரசுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications