தவிர்க்க முடியாத காரணம்.. பாதியில் சென்ற ஸ்டாலின்! முதலமைச்சரா இருந்தாலும் பெர்மிஷன் கேட்டு போறாரே
சென்னை: தமிழ்நாடு அளவிலான மூன்றாவது மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் கூட்டத்தில் உரையாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தவிர்க்க முடியாத காரணத்தால் முழுமையாக பங்கேற்காமல் பேசிவிட்டு பாதியிலேயே புறப்பட்டு சென்றார்.
மாநில அளவிலான மூன்றாவது மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் (DISHA) கூட்டம் சென்னையில் தலைமை செயலகத்தில் இன்று காலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இதில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு. ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டார்கள்.
அதேபோல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், ஆ.ராசா, திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், முஸ்லீம் லீக் எம்பி நவாஸ்கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், எழிலன், காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹசன் மவுலானா, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் செந்தில்குமார், அரசு துறைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.
இந்த நிகழ்வில் மகளிர் சுய உதவிக் குழு திட்டங்கள், வேளாண் திட்டங்கள், மத்திய அரசின் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். "நன்றே செய் அதையும் இன்றே செய் என்ற வகையில் - எல்லாருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து மக்களுக்கு நன்மை தரும் திட்டங்களை சிறிதும் தாமதமின்றி செயல்படுத்தி, திட்டங்களின் பயன் முழுமையாக மக்களைச் சென்றடைய துறைத் தலைவர்களும், அரசு அலுவலர்களும் முழுமனதுடன் செயல்பட வேண்டும்.
தங்களுக்குக் கீழ் பணியாற்றுவோரும் அவ்வாறு செயல்படுவதை உறுதிசெய்ய வேண்டும். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள உறுப்பினர்கள், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் தங்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தவிர்க்க முடியாத காரணத்தால், இந்த ஆலோசனைக் கூட்டம் முடியும்வரை உங்களிடம் அமர்ந்து ஆலோசிக்க என்னால் இயலவில்லை. ஆலோசனைக் கூட்டத்தில் இடம் பெற்றுள்ள நீங்கள் அனைவரும் இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்திட வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன். இங்கு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நீங்கள் பகிர்ந்து கொண்ட கருத்துக்களை நான் கேட்டு தெரிந்து கொண்டு நிச்சயம் அதற்குரிய நடவடிக்கை எடுப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.












Click it and Unblock the Notifications