72 வயதாகிவிட்டது.. பதவி வேண்டாம்.. சிபிஎம் மாநில செயலாளர் பதவியை உதறி தள்ளிய கே.பாலகிருஷ்ணன்!
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) தமிழ் மாநிலச் செயலாளர் பதவியில் 3-வது முறையாக நீடிக்க வாய்ப்பிருந்தும் தமக்கு 72 வயதாகிறது என்பதால் தமக்கு அப்பதவி வேண்டாம் என உதறி தள்ளியிருக்கிறார் கே.பாலகிருஷ்ணன். இதனையடுத்து சிபிஎம் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பெ.சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரத்தில் சிபிஎம் கட்சியின் 24-வது மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் பாஜக, ஆர்.எஸ்.எஸ்.-க்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மாநாட்டில் பேசிய சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், தமிழ்நாட்டில் அவசரநிலை பிரகடனம் அமலில் இருக்கிறதா? இந்த ஆட்சியில் போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு கைது செய்யப்படுகிற அவலநிலை இருக்கிறது என கடுமையாக விமர்சித்தார். இதற்கு திமுகவின் நாளேடான முரசொலி கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.

திமுகவின் கூட்டணி கட்சிகளான விசிக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகியவை ஆளும் திமுக அரசு விமர்சித்து வரும் நிலையில் மற்றொரு கூட்டணிக் கட்சியான சிபிஎம்-ன் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனும் இத்தகைய விமர்சனத்தை முன்வைத்திருப்பது சர்ச்சையாகி இருக்கிறது.
இந்த நிலையில் விழுப்புரம் மாநாட்டில் இன்று பேசிய கே.பாலகிருஷ்ணன், தமக்கு அடுத்த மாதம் 72 வயதாகிறது. கட்சி அமைப்பு விதிகளின்படி 72 வயதாகிவிட்டால் எந்த பொறுப்புகளும் வகிக்க முடியாது. ஆகையால் தம்மை கட்சி விதிகளின் கீழ் மாநிலச் செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் சிபிஎம் மாநிலச் செயலாளராக வேண்டும் என்பதற்காக தாம் திமுகவை விமர்சிக்கவில்லை; இயல்பாகவே 3-வது முறையாக சிபிஎம் மாநிலச் செயலாளராகும் வாய்ப்பு எனக்கு இருந்தது; ஆனாலும் வயதை காரணம் காட்டிதான் பதவி விலக விரும்பினேன் எனவும் கே.பாலகிருஷ்ணன் விளக்கம் அளித்திருக்கிறார்.

மாநில செயலாளராக 6 ஆண்டுகால பயணம்
2018-ம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற மாநாட்டில் சிபிஎம் மாநிலச் செயலாளராக கே.பாலகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1970களில் இருந்தே இடதுசாரி இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இருந்து கே.பாலகிருஷ்ணனின் இடதுசாரி அரசியல் பயணம் தொடங்கியது. 1973-ம் ஆண்டு இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவராக இருந்தார். 2011-ம் ஆண்டு சிதம்பரம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வென்றார். கடந்த 6 ஆண்டுகளாக சிபிஎம் மாநிலச் செயலாளராக பதவி வகித்த நிலையில் தற்போது 72 வயதாவதை முன்னிட்டு பதவி விலக விருப்பம் தெரிவித்தார் கே.பாலகிருஷ்ணன். இதனை சிபிஎம் கட்சியும் ஏற்று அவரை விடுவித்ததுடன் புதிய மாநிலச் செயலாளராக பெ.சண்முகத்தைத் தேர்வு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications
