தவிக்க விட்டுட்டு போயிட்டீங்களே.. முரசொலி செல்வம் உடலை பார்த்ததும் கண்கலங்கிய துணை முதல்வர் உதயநிதி
சென்னை: முரசொலி செல்வம் இன்று உயிரிழந்தார். அவரது மறைவு திமுகவினருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. முரசொலி செல்வம் உடலுக்கு அஞ்சலி செலுத்திய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கண்கலங்கினார். உடலை பார்த்து கதறி அழுதார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மருமகனும், மூத்த பத்திரிகையாளருமான முரசொலி செல்வம் பெங்களூரில் வசித்து வந்தார். தமது தாய்மாமாவான கருணாநிதியின் மகள் செல்வியை திருமணம் செய்து கொண்டார் முரசொலி செல்வம். செல்வி - முரசொலி செல்வம் தம்பதியினருக்கு எழிலரசி ஜோதிமணி என்ற மகள் இருக்கிறார். பல்வேறு திரைப்படங்களின் தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார் முரசொலி செல்வம்.

முரசொலி நாளிதழில் சிலந்தி என்ற தலைப்பில் நீண்ட ஆணித்தரமான கட்டுரைகளை முரசொலி செல்வம் தான் எழுதி வந்தார். பெங்களூர் சதாசிதவம் நகரில் வசித்து வந்த முரசொலி செல்வத்திற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பெங்களூர் எஸ்.ஆர். ராமையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். அவரது உடல் பெங்களூரில் இருந்து சென்னைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டது.
முரசொலி செல்வத்தின் மறைவு திமுகவினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. முரசொலி செல்வம் உடலுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். முரசொலி செல்வத்தின் உடல் கோபாலபுரம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முரசொலி செல்வம் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கண்கலங்கினார்.
முரசொலி செல்வம் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதார். கண் கலங்கியபடியே இருந்தார். முதல்வர் மு.க ஸ்டாலுனும் அவரது உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுதார். தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன், வைகோ, முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
எங்களைத் தவிக்க விட்டுட்டு, எங்கே போனீங்க... செல்வம் மாமா! திராவிட இயக்கத்தின் மூத்த முன்னோடி, நம் 'முரசொலி' செல்வம் மாமா மறைந்தார் என்ற செய்தி காலையிலேயே இடியாக இறங்கியது. இன்னமும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றேன். வழக்கம் போல, முரசொலியில் கட்டுரை எழுதுவதற்காக குறிப்புகளைச் சேகரித்து வைத்துவிட்டு, உறங்கச் சென்றவரை இயற்கை எடுத்துக் கொண்டிருக்கிறது.
கலைஞர் அவர்களின் கொள்கை வார்ப்பு. கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய வழிகாட்டி, செல்வி அத்தையின் பாசத்துக்குரிய கணவர். எங்களுக்கெல்லாம் கொள்கை உணர்வூட்டிய பண்பாளர். 'முரசொலி' செல்வம் மாமாவின் மரணம், கலைஞர் குடும்பத்துக்கு மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்துக்கே பேரிழப்பு. இந்த ஆற்ற முடியாத துயரில், தவிக்கும் கோடிக்கணக்கானத் தொண்டர்களில் ஒருவனாக உறைந்து நிற்கிறேன்.
இயக்கப் பணி - பத்திரிகைப் பணி - திரைத்துறை எனப் பல்வேறு தளங்களில் முத்திரை பதித்த செல்வம் மாமாவின் உழைப்பை சிறு வயதிலிருந்தே நேரில் பார்த்தவன். அவருடன் நெருங்கிப் பழகியவன். கலைஞர் அவர்களைப் போலவே நேர் வகிடு எடுத்துக்கொண்டு, கலைஞரைப் போலவே கையில் முரசொலியோடு வீட்டிற்கு வருகின்ற செல்வம் மாமாவைப் பார்க்கும் போது, கலைஞரையே பார்ப்பது போன்றதோர் உணர்வு எங்களுக்கு ஏற்படும். அப்படிப்பட்ட செல்வம் மாமா, 'இனி, வர மாட்டார்' என்று நினைக்கும்போதே நெஞ்சம் கலங்குகிறது.
"நல்லது, கெட்டது எல்லாத்துலயும், இன்னைக்குத் தலைவர் கலைஞர் அவர்கள் இல்லையே என்ற குறையை எனக்குப் போக்கிக் கொண்டிருப்பவர் நம்முடைய முரசொலி செல்வம் அவர்கள் தான்." என்று நம்முடைய கழகத்தலைவர் அவர்கள், 'முரசொலி நினைவலைகள் நூல் வெளியீட்டு விழாவில் உருக்கத்துடன் கூறினார்கள்.
கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலில், 2019-ஆம் ஆண்டிலிருந்து கழகத்தில் கழக அரசில் நான் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வருகிறேன். அதனைக் காண்பதற்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இல்லையே என்ற வருத்தம் எனக்கிருந்தாலும், கலைஞர் அவர்கள் இடத்திலிருந்து அந்தக் கவலையைப் போக்கிடக் கூடியவராக முரசொலி செல்வம் மாமா அவர்கள்தான் இருந்தார்கள்.
எதையுமே எளிய மக்களின் பார்வையிலிருந்து அணுக வேண்டும் என்ற 'உங்களின் குரல்' இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது மாமா! கட்டுரை எழுதுவதற்காக நீங்கள் சேகரித்து வைத்திருந்த குறிப்புகளைப் போலவே, நாங்களும் நீங்கள் இல்லாமல் தனியாக நிற்கிறோம். மாமா. எங்களை எல்லாம் தவிக்க விட்டுட்டு எங்கே போனீங்க மாமா! என்றும் உங்கள் நினைவுகளோடு.. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications