மின்கட்டண மோசடி.. இந்த மாதிரி மெசேஜுக்கு பதில் சொன்னீங்கன்னா போச்சு.. சைலேந்திர பாபு வார்னிங்
சென்னை: மின் கட்டணம் கட்டாததால் உங்கள் இணைப்பு துண்டிக்கப்படும் என யாராவது மெசேஜ் அனுப்பினால் அதற்கு பதில் தராதீர் என தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: பல்வேறு விதமான மோசடிகள் குறித்து பொதுமக்களுக்கு காவல் துறை சார்பில் எச்சரிக்கை விடுத்து வருகிறோம். சமீபத்தில் புதிதாக ஒரு மோசடி வந்துள்ளது.
இதுதான் எல்க்ட்ரிசிட்டி மோசடி அதாவது மின் கட்டண மோசடி. உங்களுக்கு ஒரு மெசேஜ் வரும். அதில் " வாடிக்கையாளரே, இது மின்சார வாரியத்தில் இருந்து வந்த மெசேஜ். நீங்கள் மின் கட்டணத்தை செலுத்தாததால் உங்கள் மின் இணைப்பு இன்று இரவு 10.30 மணிக்கு துண்டிக்கப்படும்.

மின் வாரிய அதிகாரி
எனவே உடனடியாக மின்சார வாரியத்தையோ அதிகாரியையோ அணுகுங்கள்" என ஒரு மெசேஜ் வரும். அதில் ஒரு போன் நம்பர் கொடுக்கப்படும். அந்த எண்ணிற்கு நீங்கள் போன் செய்தால் , மறுமுனையில் பேசும் நபரிடம் நீங்கள் உங்கள் மின் கட்டணத்தை செலுத்தி விட்டீர்கள் என கூறினால், அதன் ஸ்கிரீன்ஷாட்டை அனுப்புங்கள் என சொல்வார்கள்.

ஸ்கிரீன்ஷாட்
நீங்கள் ஸ்கிரீன்ஷாட்டை அனுப்பிய பிறகு மின்வாரியத்திலிருந்து பேசுவதாக போன் செய்வார்கள். அவர்கள், நீங்கள் மின் கட்டணம் கட்டியது எங்கள் கம்ப்யூட்டரில் அப்டேட் ஆகவில்லை. எனவே நாங்கள் சொல்லும் ஒரு செயலியை டவுன்லோடு செய்யுங்கள். அதில் வெறும் ரூ 10 மட்டும் கட்டணமாக செலுத்துங்கள். உங்கள் மின் இணைப்பை நாங்கள் துண்டிக்க மாட்டோம் என்பார்கள்.

தப்பி தவறி
தப்பி தவறி கூட அவர்கள் சொல்லும் ஆப்பை நீங்கள் டவுன்லோடு செய்யாதீர்கள்.ஒரு வேளை டவுன்லோடு செய்தால் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து சிறுக சிறுக அந்த நபர்களுக்கு பணம் சென்று கொண்டே இருக்கும். உங்கள் போனுக்கு வரும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் கடவுச் சொல்லையும் (ஓடிபி) அவர்களால் பார்க்க முடியும். இது மிகவும் ஆபத்தான மோசடி.

100- க்கு அழையுங்கள்
எனவே இது போன்று வரும் மெசேஜ்களுக்கு பதில் அளிக்காமல் இருப்பதே நல்லது. இது போல் யாராவது மெசேஜ் அனுப்பினால் காவல் துறைக்கு தகவல் அளியுங்கள். 100, 112 உள்ளிட்ட எண்களுக்கு தகவல் கொடுங்கள். இல்லாவிட்டால் காவல் உதவி செயலிக்கு தகவலை மட்டும் கொடுங்கள். இவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் பிடித்துவிடுவோம்.

ஏமாறும் பணம்
ஆனால் நீங்கள் ஏமாறும் பணம் இந்தியாவில் இருந்தால் நாங்கள் மீட்டு கொடுப்போம். ஒரு வேளை வெளிநாட்டு மோசடி என்றால் மோசடி கும்பலை கைது செய்தாலும் எங்களால் பணத்தை மீட்க முடியாது. இந்த மின் கட்டண மோசடியில் பொதுமக்களாகிய நீங்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க காவல் துறை சார்பில் கேட்டு கொள்கிறோம். இவ்வாறு சைலேந்திர பாபு அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications