காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதுதான் மிச்சம்.. 234 தொகுதிகளுக்கும் விஜய் எடுத்த அதிரடி முடிவு
சென்னை: எதிர்பார்த்த கூட்டணிகள் அமையாத நிலையில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை இறுதி செய்யும் வேலையில் தவெக ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. காங்கிரஸுடன் தவெக நடத்திய பேச்சுவார்த்தையும் எடுபடாத நிலையில் 2026 சட்டசபை தேர்தல் களத்தில் விஜய் தனித்து விடப்பட்டுள்ளார். காத்திருந்து காத்திருந்து காலங்கள் தான் வீணாய் போகும் என்பதால் தற்போது தனித்தே களம் இறங்குவதற்கான வேலைகளில் தவெக ஈடுபட்டுள்ளதாம்.
2026 தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபறக்க தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக கூட்டணிகள் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை கூட ரகசியமாக தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

விஜய்யும் இந்த தேர்தலில் முதல் முறையாக போட்டியிருகிறார் என்பதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து இருக்கிறது. விஜய் கட்சி தொடங்கிய போதே 2026 சட்டசபை தேர்தல் தான் இலக்கும் என்றும், அரசியல் எதிரி திமுக என்றும், கொள்கை எதிரி பாஜக என்று அறிவித்தார். மேலும் தவெகவுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் என்றும் விஜய் அறிவித்து இருந்தார்.
இதனால் கூட்டணிக்கு கட்சிகள் வரும் என விஜய் கணக்கு போட்டார். ஆனால் தேர்தலுக்கு இன்னும் இரு மாதங்களே இருக்கும் சூழலில் கூட விஜய்யுடன் யாரும் கூட்டணிக்கு என்று வரவில்லை. இதனால் விஜய் கிட்டத்தட்ட தனித்தே விடப்பட்டுள்ளார். வேறு எந்த கட்சிகளை கூட்டணிக்குள் இழுக்க விரும்பாவிட்டாலும் காங்கிரஸ் மற்றும் விசிகவை தன் பக்கம் இழுக்க விஜய் முயற்சி மேற்கொண்டார் என்றே கூறப்பட்டது.
ஆனால் காங்கிரஸ் மற்றும் விசிகவும் புதிய கட்சி, வாக்கு வங்கியை நிரூபிக்காத கட்சி என்பதால் விஜய்யை கைவிட்டன. காத்திருந்து காத்திருந்து காலங்கள் தான் போய்க்கொண்டு இருக்கிறது என்பதனால் தற்போது தனித்து போட்டியிடவே விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜனநாயகன் விவகாரம், சிபிஐ விசாரணை என எதுப் பற்றியும் எதுவுமே பேசாமல் அமைதியாக மவுனம் காத்து வரும் விஜய் அரசியலில் இருக்கிறாரா என்றே கேள்விகள் எழத்தொடங்கின. இந்த நிலையில் தான் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் விஜய் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
முன்னதாக 50 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு விண்ணப்பங்களை கொடுத்து வந்ததாகவும், போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களின் பின்புலங்களை ஒரு குழுவை வைத்து விஜய் ஆராய்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதமாகவே வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தவெக ஈடுபட்டு வந்துள்ளது.
கூட்டணிக்கு கட்சிகள் வரும் பட்சத்தில் அதற்கு ஏற்றார் போல் தொகுதிகள் ஒதுக்கவேண்டும் என்பதால் அந்த பணிகளை மெதுவாக மேற்கொண்டு வந்ததாகவும், ஆனால் யாரும் கூட்டணிக்கு வராததால் தற்போது இனியும் காலம் தாழ்த்தாமல் வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்ய விஜய் முடிவு செய்துள்ளாராம். .
இதற்காக வேட்பாளர்களாக போட்டியிட யார் யார் விரும்புகின்றார்களோ அவர்களது பின்புலம் என்ன, போட்டியிட்டால் சரியாக இருக்குமா? அந்த தொகுதியில் செல்வாக்கு எப்படி இருக்கிறது? என்பதையெல்லாம் ஒரு குழு அமைத்து ஆராய்ந்து வருகிறார்களாம். இந்த பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. எனவே இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த பணிகள் எல்லாம் முடிந்துவிடும் என்றும் இறுதி வேட்பாளர்கள் பட்டியலை விஜய் தான் அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications