தேனியில் உள்ள 4 தொகுதிகளில் 3ல் உதயசூரியன் உதிப்பது உறுதி.. பெரியகுளம் ரிசல்ட் விஜய் கையில் இருக்கு!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் தேனி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் மீண்டும் உதயசூரியன் உதிக்கும் சூழல் நிலவி வருவதாக தெரிகிறது. போடி, கம்பம், ஆண்டிப்பட்டி ஆகிய தொகுதிகளில் திமுகவின் கைகள் ஓங்கி இருக்கும் சூழலில், பெரியகுளம் தொகுதியில் மட்டும் தவெக பிரிக்கும் வாக்குகள் யாருக்கு சாதகமாக அமைகிறது என்பதை பொறுத்தே முடிவு இருக்கும் என்று தெரிகிறது.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில் தென் மாவட்டங்களில் கணிசமாக இருக்கும் முக்குலத்தோர் சமூக வாக்குகளை கைப்பற்ற வேண்டும் என்று திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தீவிரமாக இருக்கின்றன. அதிலும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸின் சொந்த மாவட்டமான தேனியில் அதிமுக வெல்ல வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தி வருகிறார்.

2021 சட்டசபைத் தேர்தலில் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி, போடி, பெரியகுளம், கம்பம் ஆகிய 4 தொகுதிகளில் 3ஐ திமுக கைப்பற்றியது. இம்முறை ஓபிஎஸ் இணைந்திருப்பதால் போடி தொகுதியையும் கைப்பற்ற வேண்டும் என்று திமுக மும்முரமாக பணியாற்றி வருகிறது. இந்த நிலையில் தேனி மாவட்டத்தின் 4 தொகுதிகளில் என்ன நிலவரம் என்பதை விசாரித்தோம்.
அதன்படி கம்பம் தொகுதியில் திமுக சிட்டிங் எம்எல்ஏ ராமகிருஷ்ணன், முன்னாள் மாவட்டச் செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் சீட் பெற வேண்டும் என்று தீவிரமாக உள்ளனர். அதிமுகவில் முன்னாள் எம்எல்ஏ ஜக்கையன் சீட் கேட்டு வருகிறார். முக்குலத்தோர் சமூகம் மட்டுமல்லாமல் ஒக்கலிக்க கவுண்டர், நாயுடு, சிறுபான்மை மக்கள் கணிசமாக இருக்கின்றனர். இதனால் திமுகவின் கைகளே ஓங்கி இருக்கிறது.
ஆண்டிப்பட்டி தொகுதியை பொறுத்தவரை அதிமுகவுக்கு வரலாற்று சிறப்புமிக்க தொகுதியாகும். இம்முறை திமுக சிட்டிங் எம்எல்ஏ மகராஜன் களமிறங்குவார் என்று தெரிகிறது. ஆனாலும் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், தங்க தமிழ்ச்செல்வன் மகன் நிஷாந்த் ஆகியோரும் ரேஸில் இருக்கின்றனர். அதிமுக தரப்பில் லோகிராஜன், முருக்கோடை ராமர் சீட் எதிர்பார்த்திருக்கின்றனர். இன்னொரு பக்கம் அமமுக அந்த தொகுதியை கேட்டு வருகிறது.
இந்த தொகுதியில் தேமுதிகவுக்கு கணிசமான செல்வாக்கு உள்ளது. இதனால் ஆண்டிப்பட்டி தொகுதியில் மீண்டும் உதயசூரியன் உதிக்கும் என்று தெரிகிறது. தனித் தொகுதியான பெரியகுளம் தொகுதியில் திமுக சிட்டிங் எம்எல்ஏ சரவணகுமார் சீட் எதிர்பார்த்துள்ளார். அவருக்கு பின் வீரபாண்டி பேரூராட்சி தலைவி கீதா, வடக்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் பாண்டியராஜன் ஆகியோரும் ரேசில் உள்ளனர்.
அதிமுக தரப்பில் வழக்கறிஞர் தவமணி, விவசாய அணி துணைச் செயலாளர் ஜெயராமன் உள்ளிட்டோர் சீட் கேட்டு வருகின்றனர். இந்த தொகுதியில் தவெகவின் மாவட்ட துணைச் செயலாளர் பாலமுருகன் மற்றும் இளைஞரணி அமைப்பாளர் சபரி ஆகியோரும் செல்வாக்குடன் இருக்கின்றனர். இதனால் தவெக மற்றும் நாதக பிரிக்கும் வாக்குகளை பொறுத்தே வெற்றி, தோல்வி அமையும் என்று தெரிகிறது.
போடி தொகுதியை பொறுத்தவரை முக்குலத்தோர் மற்றும் தலித் சமுதாய மக்கள் அதிகமுள்ளனர். திமுக சார்பாக ஓபிஎஸ்க்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று தெரிகிறது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களான நாராயணசாமி, தீபன் சக்கரவர்த்தி சீட்டுக்கான ரேஸில் உள்ளனர். பாஜகவும் தொகுதியை கேட்பதாக சொல்லப்படுகிறது. எத்தனை பேர் முட்டி மோதினாலும் திமுக மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வாக்குகள் சரியாக கிடைத்தாலும், ஓபிஎஸ் கரை சேர்ந்துவிடுவார் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications