174 தொகுதிகளில் இரட்டை இலை.. அமித்ஷாவிடம் காய் நகர்த்திய எடப்பாடி.. 2029 கணக்கால் இறங்கி வந்த பாஜக!
டெல்லி: டெல்லியில் எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா இடையிலான சந்திப்பில் பேசப்பட்டது என்ன என்பது தொடர்பாக தகவல் கசிந்துள்ளது. அதன்படி 2029 லோக்சபா தேர்தலை வைத்து எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தியது பலன் அளித்திருப்பதாகவும், சுமார் 174 தொகுதிகளில் இரட்டை இலை களமிறங்க போவதாகவும் அதிமுகவினர் உற்சாகமாக கூறி இருக்கின்றனர்.
அதிமுக - பாஜக இடையிலான கூட்டணி அமைந்தாலும், தொகுதி பங்கீட்டில் தொடர்ச்சியாக இழுபறி நீடித்து வந்தது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் 2 முறை தமிழ்நாடு வந்த போதும், எடப்பாடி பழனிசாமியை கையாள முடியவில்லை. ஒரு கட்டத்தில் டென்ஷனான பியூஷ் கோயல், நேரடியாக அமித்ஷாவிடம் பேசிவிடுங்கள் என்று அதிமுகவிடம் கூறிவிட்டார். இதன் காரணமாகவே பியூஷ் கோயலின் பயணம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

இதன்பின் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி உடனடியாக அமித்ஷாவிடம் அப்பாய்ண்ட்மெண்ட் கேட்டுள்ளார். இதையடுத்து அமித்ஷா தரப்பில் இரவில் நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அமித்ஷாவை சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசி இருக்கிறார். அப்போது பாஜக தரப்பில் தங்கள் முன் வைக்கப்பட்டுள்ள ஆஃபர் எதுவும் சரியாக இருக்காது.
2021 சட்டசபைத் தேர்தலில் இப்படிதான் 20 சீட்கள் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது. அதில் 4ல் மட்டுமே வென்றீர்கள்.. அதுவே திமுகவுக்கு மிகப்பெரிய சாதகமாகி போனது. கூடுதல் தொகுதிகள் எதிர்பார்க்க கூடாது என்று சொல்லவில்லை. ஆனால் 2029 லோக்சபா தேர்தல் தான் பாஜகவுக்கு முக்கியம் என்று எடப்பாடி பழனிசாமி சரியான இடத்தை தொட்டு காய் நகர்த்தி இருக்கிறார்.
இதனை கவனித்த அமித்ஷா எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்றதாக கூறப்படுகிறது. இதன்பின் எடப்பாடி பழனிசாமி தரப்பில், கடந்த முறை பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 20 தொகுதிகளை விடவும் கூடுதலாக 5 தொகுதிகளை கொடுக்கிறோம். அதேபோல் அமமுகவுக்கு 8, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3, ஐஜேகேவுக்கு 2 என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து திருமாறன், ஏசி சண்முகம், ஜான்பாண்டியன் தரப்புக்கு 1 என்று சொல்லி இருக்கிறார். புரட்சி பாரதம் கட்சிக்கும் 1 என்று கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, அவர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடட்டும் என்றும் தெரிவித்திருக்கிறார். அதேபோல் பாமகவுடன் ஏற்கனவே 18 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதையும் கூறியுள்ளார்.
இறுதியாக அதிமுக இரட்டை இலை சின்னத்தில் 174 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் கூறி இருக்கிறார். இதனால் அமித்ஷா ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. சரியாக 2029 லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு கூடுதலாக சீட் ஒதுக்குகிறோம் என்று எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தியது, அமித்ஷாவை இறங்கி வர வைத்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் மார்ச் 23ஆம் தேதி தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அமமுக, தமாகா மற்றும் இதர கட்சிகளை ஒப்புக் கொள்ள வைக்கும் பொறுப்பையும் பாஜக பக்கமே எடப்பாடி பழனிசாமி கொடுத்துவிட்டதாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications