6க்கு கீழ் குறைய கூடாது.. 5க்கு மேல் கொடுக்க முடியாது.. சிபிஎம், சிபிஐ-யிடம் கறார் காட்டும் திமுக!
சென்னை: சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய இரு கட்சிகளுக்கும் தலா 5 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க திமுக முன் வந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. ஆனால் இரு கட்சிகளும் 6 தொகுதிகளுக்கு கீழ் குறையக் கூடாது என்பதில் பிடிவாதம் காட்டுவதாக தெரிய வந்துள்ளது. இதன் காரணமாகவே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக் குழுவில் இழுபறி நீடித்து வருவதாக தெரிகிறது.
திமுக கூட்டணியில் 22 கட்சிகளுக்கும் அதிகமாக இடம்பெற்றிருப்பதால், தொகுதி பங்கீடு எப்படி செய்து முடிக்கப்படும் என்ற கேள்விகள் எழுந்தன. ஏற்கனவே பல கட்சிகளும் கூடுதல் தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய கோரி இருந்த சூழலில், தேமுதிக, மக்கள் நீதி மய்யம், முக்குலத்தோர் புலிப்படை உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் இணைந்தன.

இதனையடுத்து ஐயூஎம்எல், மமக, காங்கிரஸ் மற்றும் மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிக்கப்பட்டு, உடன்படிக்கை எட்டப்பட்டது. இன்னொரு பக்கம் முக்குலத்தோர் புலிப்படை, தமீமுன் அன்சாரி, தனியரசு, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை மூலமாக தொகுதி பங்கீடு நிறைவடைந்துவிட்டது. விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.
ஆனால் திமுகவின் முக்கிய கூட்டணியான சிபிஐ, சிபிஎம் மற்றும் விசிக ஆகிய கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. கடந்த முறை இந்த 3 கட்சிகளுக்கும் 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த முறை சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய இரு கட்சிகளுக்கும் 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என்று முதற்கட்ட பேச்சுவார்த்தையில் திமுக கூறி இருக்கிறது.
புதிய கட்சிகள் இணைந்திருப்பதால் நாங்கள் மட்டுமல்லாமல் நீங்களும் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழு தெரிவித்திருக்கிறது. இதனால் சூழலை அறிந்த சிபிஐ நேரடியாக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை வைத்தது. அப்போது கடந்த முறை கொடுத்த அதே 6 தொகுதிகள் என்ற எண்ணிக்கை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரின.
இதன்பின் திமுக பேச்சுவார்த்தைக் குழு 5 சீட் வரை முன்னேறி வந்துள்ளன. இதே தான் சிபிஎம் கட்சிக்கும் நடந்திருக்கிறது. ஆனாலும் 6 தொகுதிகளுக்கு கீழ் குறையக் கூடாது என்பதில் இரு கட்சியும் முனைப்புடன் இருக்கின்றன. இதனால் திமுக இறங்கி வருமா அல்லது கம்யூனிஸ்ட்களின் பிடிவாதம் இறுகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications