10 மாவட்டத்தில் திமுகவுக்கு ரெட் சிக்னல்.. கொங்கு நிலவரத்தால் சோகத்தில் அறிவாலயம்.. ஸ்டாலின் முடிவு!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் திமுகவுக்கு 10 மாவட்டங்களில் ரெட் அலர்ட் வார்னிங்கை அக்கட்சிக்காக பணியாற்றி வரும் பென் நிறுவனம், தனியார் நிறுவனம் மற்றும் உளவுத்துறை கொடுத்திருக்கிறது. அதில் கொங்கு மற்றும் வட மாவட்டங்களில் இன்னும் அப்படியே தான் இருப்பதாகவும், சென்னை, தென் மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்கள் சாதகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
சட்டசபைத் தேர்தல் அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது. தேர்தல் அறிவிப்பு வந்த பின், திமுக தலைமை உடனடியாக வேட்பாளர்கள் பட்டியலை தயார் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளது. இதனிடையே திமுக நிர்வாகிகளுக்கு 200 தொகுதிகள் டார்கெட் நிர்ணயித்து முதல்வர் ஸ்டாலின் பணியாற்ற உத்தரவிட்டுள்ளார். அதற்கேற்ப பணிகளையும் திமுகவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே சட்டசபைத் தேர்தல் தொடர்பாக ஒவ்வொரு 20 நாட்களுக்கும் ஒரு முறை திமுகவின் பென் நிறுவனமும், தனியார் நிறுவனமும் கருத்துக்கணிப்புகளை எடுத்து வருகிறது. குறிப்பாக தேமுதிக, காங்கிரஸ் கட்சிகளுடனான கூட்டணியை உறுதி செய்த பின், பென் நிறுவனத்தின் கருத்துக்கணிப்புகளை முதல்வர் ஸ்டாலின் தீவிரமாக எதிர்பார்த்திருக்கிறார்.
அதில் பென் நிறுவனம் மற்றும் தனியார் நிறுவனம் தரப்பில் கொடுக்கப்பட்ட ரிப்போர்ட்டில் பச்சை, ஆரஞ்ச் மற்றும் ரெட் என்ற நிறங்கள் கொண்டு தீவிரத்தன்மை விளக்கப்பட்டுள்ளது. அதில் கொங்கு மண்டலத்தில் திமுகவுக்கு பெரியளவில் சாதகம் இல்லாதது திமுக தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
ஏனென்றால் கடந்த தேர்தலில் தோல்வி அடைந்த போதும், கோவைக்கு தான் அதிக திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனால் கோவையில் கடந்த முறையை விடவும் 4 முதல் 5 தொகுதிகள் கிடைத்தாலும் லாபம் என்றே திமுக கருதுகிறது. ஆனால் கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் திமுக நிர்வாகிகள் இன்னும் தலையெடுக்கவில்லை என்று ரிப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அதிமுக - பாமக இடையிலான கூட்டணியால் தர்மபுரி, கிருஷ்ணகிரி அதிமுக கூட்டணிக்கு சாதகமாக மாறி இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. அதேபோல் தேமுதிக கூட்டணிக்கு வந்தது சாதகமாக இருந்தாலும், விசிகவின் வாக்குகளை தவெக அதிகமாக பிரிப்பதும் தெரிய வந்துள்ளது. இதனால் விழுப்புரம் மாவட்டத்திலும் திமுக சில பின்னடைவை சந்திப்பதாக தெரிகிறது.
ஆனால் பென் நிறுவனம் அளித்த அறிக்கையில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெறும் என்றும், சென்னையில் தவெகவால் திமுகவுக்கு சிக்கல் இருந்தாலும், கரையேறிவிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலமான வேட்பாளர்களை ஒவ்வொரு தொகுதியிலும் நிறுத்த திமுக தலைமை தீவிரமாக இருக்கிறது.
வட மாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டலத்தில் உள்ள தொகுதிகளில் ஏற்கனவே உடன்பிறப்பே வா நிகழ்ச்சி மூலமாக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்துள்ளார். ஏற்கனவே 3 வேட்பாளர்கள் பரிந்துரை பட்டியலில் இருக்கும் சூழலில், நேர்காணலின் போது முதல்வர் ஸ்டாலின் நேரடியாக முடிவு எடுக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications