ஓஹோ.. இதுதான் காரணமா.. தமிழகத்தில் மட்டும் இ பாஸ் தொடருவது ஏன்.. மக்கள் மனதில் கேள்வி அலைகள்!
இ பாஸ் உத்தரவு ஏன் இன்னமும் ரத்து செய்யப்படவில்லை? என்ற சந்தேகம் எழுந்துள்ளது
சென்னை: "இ-பாஸ் விவகாரம் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.. மத்திய அரசே இ-பாஸ் நடைமுறை தேவையில்லை என்று அறிவித்த பிறகும் ஏன் தமிழக அரசு அதை ரத்து செய்யாமல் உள்ளது" என்ற சந்தேகம் பொதுமக்களிடம் எழுந்து வருகிறது.
கொரோனா உச்சத்தில் இருந்த சமயத்தைவிட, இப்போது அதிமுக அரசு திறன்பட செயலாற்றி வருகிறது.. கொரோனா தடுப்பு குறித்த முன்னேற்பாடுகள், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாகவும் கையில் எடுத்துள்ளது.. சென்னையை மீட்டு கொண்டு வந்துவிட்டதே இதற்கு சாட்சி!
அதேபோல, முதல்வரின் அதிரடிகள் மக்களை கவரும்படியாகவே உள்ளது.. இன்றும், நாளையும் அவர் மேற்கொண்டுள்ள மாவட்டங்களில் ஆய்வுகளும், அந்தந்த மாவட்டங்களில் அவர் துவங்கி, துவக்கி வைக்க போகும் திட்டங்களும் வரவேற்கத்தக்கதாகவே உள்ளது.. அதில் சந்தேகமே இல்லை!

வாழ்வாதாரம்
ஆனால், இ-பாஸ் விவகாரம் விஸ்வரூபமெடுத்து உள்ளது.. பொதுமக்கள் பல பிரச்சனைகளில் இப்போதும் சிக்கி உள்ளனர்.. பஸ் வசதி இல்லை.. அதனாலேயே வேலைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.. வாழ்வாதாரத்துக்கும் வழியில்லை.. யார் கையிலும் காசு இல்லை.

ரேஷன் கடை
ஆரம்பத்தில் 1000 ரூபாய் தரப்பட்டது, அதற்கு பிறகு, சில பகுதியினருக்கு 1000 ரூபாய் அறிவித்த அரசு, அதற்கு பிறகு வாழ்வாதாரம் குறித்து வாயே திறக்கவில்லையே என்ற கவலை மக்களிடம் எழுந்துள்ளது. இந்த நேரத்துல ரேஷன் கடையில் எண்ணெய், பருப்புக்கெல்லாம் காசு வாங்கணுமா? அதையெல்லாம் இலவசமா தரலாமே? என்ற கோரிக்கைகளும் எழாமல் இல்லை.

விண்ணப்பம்
இதில் பெரிதாகி உள்ளது இ-பாஸ் விவகாரம்தான்.. பொதுமுடக்கத்தை நீட்டிப்பது மக்களுக்கு மிகப்பெரிய சிரமத்தை தந்துவருகிறது.. கல்யாணம், ஆஸ்பத்திரி, இறப்பு, போன்ற அத்தியாவசிய தேவைகளை தவிர, யாரும் மாவட்டம் விட்டு மாவட்டம் போக கூடாது என்று இ-பாஸ் நடைமுறை சொல்லப்பட்டது. பிறகு, அதேபோல விண்ணப்பித்த எல்லாருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியானது.

இ-பாஸ்
இதில், விண்ணப்பிக்கும் எல்லாருக்குமே இ-பாஸ் என்றால் எதுக்காக அந்த நடைமுறை? என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்."இ-பாஸ் முறை இருந்தால்தான் யார் எங்கு செல்கிறார்கள் என்பதை கண்டறிய முடியும் என்று முதல்வர் நேற்று விளக்கம் தந்துள்ளதால், இப்போதைக்கு தமிழகத்தில் இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட வாய்ப்பில்லை என தெரிகிறது.. அதேசமயம், இதை முதல்வர் மறுபடியும் பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

நிதி ஒதுக்கீடு
இதனிடையே, எதற்காக இ-பாஸ் நடைமுறையில் உள்ளது என்பதற்கு பல்வேறு யூகங்களும், சந்தேகங்களும் கிளம்பி வருகின்றன.. அதாவது. ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்துக்கு வருபவர்கள், வேறு வேறு மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களை தனிமைப்படுத்தும் முகாம்களை தமிழக அரசு நடத்தி வருவதுடன், அதற்கு நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது... அங்கு தங்குபவர்கள் எல்லாருக்குமே அரசுதான் உணவு தருகிறது.

நிர்வாக கோளாறு
ஆனால், ஆரம்பத்தில் தரமாக தரப்பட்ட இந்த சாப்பாடு, நாளடைவில் சரியாக இல்லை என்ற குற்றச்சாட்டு மெல்ல எழுந்துள்ளது. இவர்களுக்கு சாப்பாடு தவிர, சோப், பிற பொருட்களையும் அரசுதான் தருகிறது.. எனவே, இதற்காக ஒதுக்கப்படும் நிதி நிர்வாகத்தில் முறைகேடு நடப்பதாலும், அதில் பணம் கையாடல் நடைபெறுவதாலும்தான், இ-பாஸ் நடைமுறை இன்னும் நீட்டிக்கப்படுவதாக ஒரு தகவல் கசிகின்றது.

உதயநிதி ஸ்டாலின்
அதேபோல, "டாஸ்மாக்கை ஏன் திறக்கறீங்கன்னு கேட்டபோது, அது மத்திய அரசு உத்தரவு, நாங்க அதை நடைமுறை மட்டுமே படுத்தி உள்ளோம் என்று அதிமுக அரசு அன்று சொன்னது.. அப்படியென்றால், இந்த இ-பாஸ் அறிவிப்பு கூட மத்திய அரசு உத்தரவுதானே? அதை ஏன் செயல்படுத்தல" என்றும் பரவலான கேள்வி எழுகிறது. இதற்கு நடுவில் உதயநிதி ஸ்டாலின் உள்ளே நுழைந்து, "திமுக தேர்தல் பணிகளை தொடங்கக் கூடாது என்பதற்காகத்தான் இ-பாஸ் முறையை தமிழக அரசு நீட்டித்து வருகிறது" என்று புது விளக்கம் தந்துள்ளார்.
Recommended Video

அனைத்து கட்சி கூட்டம்
ஆக... எத்தனையோ காரணங்கள் இந்த இ பாஸ் குறித்து தினமும் வெளிவந்தபடியே உள்ளன.. இதெல்லாம் உண்மையான தகவலா, அல்லது கிளப்பி விடும் ஒன்றா என்று தெரியவில்லை.. ஆனால், இ-பாஸ் தளர்வினை அறிவிக்க அரசு நடவடிக்கை எடுத்தாலே இதுபோன்ற தேவையில்லாத யூகங்களை தடுக்க முடியும்.. அல்லது அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தி, அவர்களின் கருத்தையும் கேட்டு, இந்த இ-பாஸ், மற்றும் ஊரடங்கு தொடர்பாக விவாதிக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும்!! எப்படியாவது பொது மக்களின் சிரமங்கள் குறைந்தால் போதும் என்பதே இப்போதைய அனைவரின் சரிசம மனநிலையும்!












Click it and Unblock the Notifications