இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை விடுவிக்க வேண்டும்..மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
சென்னை: இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகினையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும் அவர்களது மீன்பிடி படகுகள் அரசுடைமையாக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மத்திய அரசு தலையிட்ட போதும் இலங்கை கடற்படை இத்தகைய அத்துமீறல்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததாக 9 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட 9 மீனவர்களும் தமிழகத்தின் நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. 9 மீனவர்களையும் கைது செய்த இலங்கை கடற்படை, திருகோணமலை துறைமுகத்தில் தடுத்து வைத்துள்ளது.
Recommended Video
இந்த நிலையில் தமிழக மீனவர்களையும் அவர்களின் மீன் பிடி படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சருக்கு மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒன்பது மீனவர்கள் 6-8-2022 அன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில், 10-8-2022 அன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கையிலுள்ள திரிகோணமலை கடற்படைத் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்றும் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் இலங்கை அரசு விரைவில் விடுவிக்கத் தேவையான தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது












Click it and Unblock the Notifications