பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.15000.. தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க மாணவர்களே!
சென்னை: தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் 11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாணவர்களிடையே தமிழ் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆண்டுதோறும் 11,12 மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.

மாநில அளவில் மற்றும் மாவட்ட அளவில் நடைபெறுகின்ற போட்டிகளுக்கு சுமார் 53 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது. இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் வளர்ச்சித் துறை:
இதுதொடர்பாக தமிழக அரசின் சார்பில் வெளியாகியுள்ள அறிவிப்பில்,"தமிழ் வளர்ச்சித் துறையின் அனைத்து மாவட்டங்களிலும் 11, 12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு, அப்போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவர்களுக்கு மாநில அளவில் போட்டிகள் நடத்தி பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப்பெற்று வருகின்றனர்.
பல்வேறு போட்டிகள்:
சென்னை மாவட்டத்தில் 11, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 21.01.2025 அன்று அண்ணாசாலை, மதராசா ஐ ஆசாம் மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணிக்கு போட்டிகள் தொடங்கி நடைபெறும். போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பங்கேற்புச் சான்றிதழும் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களுக்குப் பரிசு பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். அதன்படி இந்த போட்டிகளில் வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 7 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும்.

பரிசுத் தொகை:
கல்லூரி மாணவர்களுக்கு 22.01.2025 அன்று அண்ணாசாலை, காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெறும். போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பங்கேற்புச் சான்றிதழும் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களுக்குப் பரிசு பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். அதன்படி, வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 7 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும்.

மாநிலப் போட்டி:
தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற மாவட்டப் போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு மாநில அளவில் 28.01.2025 அன்று 11,12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கும், 29.01.2025 அன்று கல்லூரி மாணவர்களுக்கும் சென்னையில் நடைபெறும் மாநிலப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படும். மாநிலப் போட்டிக்குரிய பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதலிடம் பெறும் மாணவர்களுக்கு ரூ. 15 ஆயிரம், இரண்டாம் இடம் பெறும் மாணவர்களுக்கு ரூ. 12 ஆயிரம், மூன்றாம் இடம் பெறும் மாணவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் பரிசாக வழங்கப்படும். மாவட்ட மற்றும் மாநிலப் போட்டிகளுக்குரிய மொத்தப் பரிசுத் தொகை ரூ. 52,38,000 வழங்கப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications