சினிமா துறையினருக்கு ‘சர்ப்ரைஸ்’ கொடுத்த தமிழக அரசு.. கேளிக்கை வரி பாதியாக குறைப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் திரைப்படங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படும் கேளிக்கை வரி 8%ல் இருந்து 4% ஆக குறைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் ஜிஎஸ்டி போன்ற வரிகளால் திரைத்துறை நெருக்கடிகளைச் சந்தித்து வரும் நிலையில், மாநில அரசின் கேளிக்கை வரி ரத்து செய்யப்பட்டால், தமிழ் திரையுலகுக்கு நிவாரணமாக அமையும் என தொடர்ந்து நீண்டகாலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. திரைத்துறையினரின் நீண்டகால கோரிக்கையை ஏற்று தமிழக அரசு, கேளிக்கை வரியை அதிரடியாக குறைத்து நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த கேளிக்கை வரி மிகவும் அதிகமாக உள்ளதாகவும், அதனை குறைக்க வேண்டும் என்று திரைப்பட துறையினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். குறிப்பாக சிறு பட்ஜெட் திரைப்படங்கள் இந்த கேளிக்கை வரியால் மிகவும் பாதிக்கப்படுவதாகவும், கேளிக்கை வரியை குறைக்க வேண்டும் என்றும் திரைப்படத் துறையினர் தெரிவித்து வந்தனர்.
தயாரிப்பாளர் சங்கம் நன்றி
இந்நிலையில் திரையுலகினர் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பு தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ் சினிமா துறையில் திரைப்படங்களின் வெற்றிகள் 8 சதவீதமாக குறைந்து ஒரு இக்கட்டான சூழ்நிலை உள்ளது. இத்தகைய காலகட்டத்தில், சினிமா டிக்கெட் கட்டணங்களுக்கு ஏற்கனவே 18 சதவீதம் ஜிஸ்டி (GST) வசூலிக்கப்படுகிறது.
அவ்வாறு இருக்கையில், Local Authorities Entertainment Tax (LBET) என்று 8 சதவீத வரி, 2017 முதல், கடந்த 8 வருடங்களாக தமிழ் நாட்டில் மட்டும் வசூலிக்கப்படுகிறது. இதை நீக்க வேண்டும் என்று பல வருடங்களாக தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பு தயாரிப்பாளர் சங்கம், தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து வந்தது.
தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து சங்கங்களின் கோரிக்கையை மனதில் கொண்டு, இன்று இந்த Local Authorities Entertainment Tax-ஐ தமிழ் சினிமாவில் வெளியாகும் புதிய திரைப்படங்களுக்கு 8 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைத்து அரசாணை வெளியிட்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் அவர்களுக்கும், தமிழ் சினிமா சார்பிலும், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பிலும், எங்களின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி சொன்ன கருணாஸ்
தென்னிந்திய நடிகர் சங்க துணைத்தலைவர் நடிகர் கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் திரைப்படங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படும் கேளிக்கை வரி 8%ல் இருந்து 4% ஆக குறைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மகிழ்ச்சியான; வரவேற்கத்தக்க செய்தி!! தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், துணைமுதல்வர் உதய நிதி ஸ்டாலின் அவர்களுக்கும், தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பில் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
திரைத்துறையினரின் நீண்டகால கோரிக்கையை ஏற்று தமிழக அரசு, இந்த கேளிக்கை வரியை குறைத்தது உண்மையிலேயே இது திரைத்துறையின் வளர்ச்சிக்கு பயனாற்றக்கூடியதாகும். மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிகளால் சில ஆண்டுகளாக தமிழ்த் திரைத்துறை பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வரும் நிலையில், மாநில அரசின் கேளிக்கை வரி ரத்து செய்யப்பட்டால், தமிழ்த்திரையுலகம் நன்மைபெறும் நீண்டகாலமாக கோரிக்கை வைக்கப்பட்டது இப்போது அந்த கோரிக்கை வெற்றி பெற்றிருக்கிறது.
தமிழ்த் திரைத்துறை சமீபகாலமாக எதிர்கொண்டு வரும் மிக கடினமான சூழலில், இந்த வரிக்குறைப்பு தயாரிப்பாளர்களுக்கு பெரும் சுமை குறைப்பாகவும், தொழில்நுட்ப வளர்ச்சியால் வீட்டுகளிலேயே அமர்ந்து திரைப்படம் பார்ப்பவர்களுக்கும், அலைபேசி வாயிலாக செயலிகளில் திரைப்படங்களை காணப் பழகி வரும் ரசிகர்களையும் மீண்டும் திரையரங்குகளை நோக்கி மீண்டும் அழைத்து வரும் ஒரு நல்ல மாற்றமாகவும் இந்த கேளிக்கை வரி குறைப்பு அமையும் என்று நம்புகிறேன்" என கருணாஸ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications