14 முதல் 28 நாட்கள் மிகவும் முக்கியமானவை.. மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை
சென்னை: வரும் 28 நாட்கள் மிகவும் முக்கியமானவை என மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை தற்போது குறைந்து கொண்டே வருகிறது. கடந்த சில தினங்களாக சராசரியாக பாதித்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கு குறைவாகவே இருந்து வருகிறது.
சரஸ்வதி பூஜை, தீபாவளி பண்டிகை விடுமுறையால் மக்கள் கூட்டம் கூடியதால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதால் மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பொருட்களை வாங்குமாறு தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

பேருந்துகள்
எனினும் கடைவீதி, பேருந்துகள், துணிக் கடைகள், உள்ளிட்டவற்றில் கூட்டம் அதிகமாகவே இருந்தது. இதனால் தமிழகத்தில் மேலும் கொரோனா தொற்று அதிகரிக்காமல் இருப்பதை உறுதி செய்ய சுகாதாரத் துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

சுகாதாரத் துறை செயலாளர்
இந்த நிலையில் வரும் 14- முதல் 28 நாட்கள் மிகவும் முக்கியமானது. இந்த காலங்களில் கொரோனா பரிசோதனையை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர்களுக்கும் சுகாதாரத் துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

பொதுமக்கள்
இதுகுறித்து அவர் அனுப்பி உள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து கொண்டு வருகிறது. தற்போது பண்டிகை காலம், மழை மற்றும் விடுமுறைகளால் கொரோனா பரிசோதனை செய்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. நாளுக்கு நாள் காய்ச்சல் முகாம்களில் பரிசோதனை செய்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே இருக்கிறது. வரும் நாட்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிதல், நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றுதல் ஆகியவற்றை முழுமையாக கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

நிகழ்ச்சிகள்
கட்டுமான பகுதிகளில், நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள், பணிபுரியும் இடங்களை தொடர்ந்து கண்காணித்து நோய் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். கடந்த இரு நாட்களாக தஞ்சாவூரில் ஒரு கட்டுமான பகுதியிலும், சென்னை தண்டையார்பேட்டையில் பீகாரில் இருந்து வந்தவர்களிடம் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காய்ச்சல் முகாம்
கொரோனா பரிசோதனை மற்றும் காய்ச்சல் முகாம்களின் எண்ணிக்கையை எந்த சூழ்நிலையிலும் குறைக்க கூடாது. படுக்கை மற்றும் ஆக்ஸிஜன் உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பல மாநிலங்கள் ‘ஆன்டிஜென்' பரிசோதனை மட்டும் செய்வதால், வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

மிகவும் முக்கியம்
பண்டிகை காலங்களுக்கு முன்னர் இருந்த அளவுக்கு பரிசோதனை மேற்கொள்ளாவிடில், பல கொரோனா பாதிப்பை கண்டறியமுடியாமல் போய்விடும். எனவே இனிவரும் 14 முதல் 28 நாட்களும் மிகவும் முக்கியமானது. பண்டிகை காலங்களுக்கு முன்னர் இருந்ததுபோன்று தற்போது கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications