தமிழக நிலத்தில் கேரளா ‘போர்டு’.. இப்பவும் விட்டா பல சிக்கல் வரும்- தமிழக அரசுக்கு சீமான் எச்சரிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை : நில அளவீடு என்ற பெயரில் தமிழ்நாட்டு எல்லைப் பகுதிகளை ஆக்கிரமிக்கும் கேரள அரசின் முயற்சியை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

கேரளா அரசு, டிஜிட்டல் மறு அளவீடு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, மாநில எல்லைப் பகுதியில் பல்வேறு இடங்களில் கேரள அரசு தமிழக நிலங்களை கேரளாவிற்கு சொந்தமானது என பதிவு செய்து பலகைகள் வைக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

கேரள மாநில அரசு எடுக்கும் இந்த டிஜிட்டல் ரீ சர்வேயால் கேரளாவை ஒட்டியுள்ள தமிழகத்தின் நிலங்கள் பறிபோகும் அபாயம் உள்ளதால் கேரள அரசின் நடவடிக்கைகளுக்கு தமிழக எல்லைப் பகுதியைச் சேர்ந்தவர்கள், வன ஆர்வலர்கள், விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சீமான் கண்டனம்

சீமான் கண்டனம்

தமிழக எல்லைப் பகுதிகளை ஆக்கிரமிக்கும் கேரள அரசை தடுத்து நிறுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டு எல்லைப்பகுதியில் உள்ள கிராமங்களின் ஆயிரக்கணக்கான கி.மீ நிலத்தை தங்கள் பக்கம் சேர்க்கும் கேரள மாநில கம்யூனிச அரசின் செயல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. களவு போகும் தமிழ்நாட்டு எல்லைப்பகுதியை காத்திடாமல், கைகட்டி வேடிக்கை பார்க்கும் திமுக அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

போர்டு வைக்கும் கேரளா

போர்டு வைக்கும் கேரளா

கேரள மாநிலம் முழுவதும் நில வரையறை, இடங்களை வகைப்படுத்துதல், ஆக்கிரமிப்பு அகற்றம் ஆகிய பணிகளை மேற்கொள்வதற்காக மின்னணு மறு நில அளவீடு செய்ய அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டின் எல்லையோர கிராமங்களில் உள்ள நிலங்களை அளவீடு செய்து அதனை கேரளாவுக்குச் சொந்தமான இடங்கள் என்று அம்மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் எல்லைப் பலகை வைத்துச் சென்றுள்ளதாக எல்லையோர தமிழ் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இன்னும் வரையறை செய்யப்படவில்லை

இன்னும் வரையறை செய்யப்படவில்லை

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, கேரளா - தமிழ்நாடு இடையிலான 803 கிமீ எல்லையில் வெறும் 203 கிமீ மட்டுமே வரையறை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இரு மாநிலங்களுக்கு இடையிலான மேற்குத்தொடர்ச்சிமலை வனப்பகுதியில் பெரும்பாலான இடங்கள் இன்றுவரை முறையாக வரையறை செய்யப்படாத நிலையில், எல்லையோர நிலங்களை கேரள அரசு அளவீடு செய்வது எவ்வகையில் சரியானதாக இருக்க முடியும்? கேரள மாநில அரசின் இத்தகைய நில அபகரிப்பை திமுக அரசு இனியும் அனுமதித்தால் ஏறத்தாழ 1500 சதுர கி.மீ வரையிலான எல்லைப்பகுதியினை தமிழ்நாடு இழக்க நேரிடும்.

எல்லைப் பகுதி ஆக்கிரமிப்பு

எல்லைப் பகுதி ஆக்கிரமிப்பு

ஏற்கனவே, 1956 ஆம் ஆண்டு மாநில எல்லைப் பிரிப்பின்போதே தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றின்கரை, செங்கோட்டை வனப்பகுதி, பாலக்காடு, நெடுமாங்காடு உள்ளிட்ட பல பகுதிகளை தமிழ்நாடு கேரளாவிடம் இழந்தது. அதே காலகட்டத்தில் தமிழக எல்லையோர வனப்பகுதிகளை மலையாள மக்கள் தொடர்ந்து ஆக்கிரமித்ததன் விளைவாக கேரள அதிகாரிகளால் வருவாய் நிலங்களாகப் பதிவு செய்யப்பட்டு, இன்று அவை முழுக்க முழுக்க கேரள மாநில பகுதிகளாகவே மாற்றப்பட்டுவிட்டது. மேலும், காலங்காலமாக எல்லையோர மலைப்பகுதிகளில் வாழ்ந்துவரும் தமிழ்ப் பழங்குடியினரையும் கேரள அரசு வலுக்கட்டாயமாக வெளியேற்றியும் வருகிறது.

அரசுகள் வேடிக்கை பார்க்கின்றன

அரசுகள் வேடிக்கை பார்க்கின்றன

அதுமட்டுமின்றி, தமிழக எல்லையோர கிராமங்களை அபகரிக்கும் நோக்குடன் குடும்ப அட்டை வழங்குதல், நிலவரி வசூலித்தல் உள்ளிட்ட அத்துமீறல்களிலும் அவ்வப்போது ஈடுபட்டு வருகிறது. இதனால் தமிழ்நாடு தனது எல்லைப்பகுதியினை சிறுகச் சிறுக இழந்து வருகிறது. இவற்றையெல்லாம் தொடக்கத்திலேயே தடுத்திருக்க வேண்டிய திராவிட அரசுகள், வேடிக்கை மட்டுமே பார்த்து வருகின்றன என்பதுதான் பெருங்கொடுமை. இதன் மூலம் திராவிட கட்சிகளின் தமிழுணர்வு என்பது தமிழர்களை ஏமாற்றும் தந்திரம் மட்டுமே என்பது மீண்டுமொருமுறை நிறுவப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாற்று அணைப்பகுதியிலுள்ள நான்கு மரங்களை வெட்டுவதற்குக்கூட அனுமதிக்காத கேரள மாநில அரசின் மண்ணின் மீதான பற்று, மக்களின் மீதான அக்கறையில், சிறிதளவுகூட தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசிற்கு ஏன் இல்லை?

தடுத்திட வேண்டும்

தடுத்திட வேண்டும்

கேரளாவின் முறைகேடான அபகரிப்புகளால் நிலங்களையும், வளங்களையும் தமிழகம் இழப்பதோடு மட்டுமின்றி, முல்லைப் பெரியாற்றுச் சிக்கலைப் போன்று பல ஆற்றுநீர்ச் சிக்கல்களை வருங்காலத்தில் எதிர்கொள்ள நேரிடும் என்றும் தமிழ்நாடு அரசினை எச்சரிக்கிறேன். ஆகவே, இனியாவது மின்னணு மறு நில அளவீடு என்ற பெயரில் தமிழ்நாட்டு எல்லைப் பகுதிகளை அபகரிக்க நினைக்கும் கேரள அரசின் முயற்சியை தமிழ்நாடு அரசு அனுமதித்திடக் கூடாதென்றும், கேரளா - தமிழ்நாடு எல்லைப்பகுதியினை முறையாக அளவீடுகளை மேற்கொண்டு விரைந்து எல்லை வரையறை செய்து முடிக்க வேண்டுமென்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+